Home » நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிக்கும் உல்லாசப் பயணத்துறை

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிக்கும் உல்லாசப் பயணத்துறை

by damith
February 19, 2024 6:00 am 0 comment

இந்து சமுத்திரத்தில் நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட அழகிய தீவுகளில் இலங்கையும் ஒன்றாகும். சிறந்த சீதோஷண நிலையைக் கொண்டுள்ள இந்நாட்டில் இயற்கை வளங்கள் நிரம்பிக் காணப்படுகின்றன. எழிமிகு கடற்கரைகள், நீரூற்றுகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மாத்திரமல்லாமல் இலங்கைக்கே உரித்தான பறவைகள், வனவிலங்குகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் தாவரங்களும் இங்கு காணப்படுகின்றன. அத்தோடு வட அரைக்கோள நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பறவை இனங்களும் வருடாவருடம் குறிப்பிட்ட காலப்பகுதியில் இங்கு குடிபெயர்ந்து வந்து செல்கின்றன.

இவ்வாறு இந்நாடு இயற்கையாக பெற்றுக்கொண்டுள்ள வளங்களை உரிய முறையில் பயன்படுத்தும் போது இந்நாட்டின் உல்லாசப் பயணத்துறை பாரிய முன்னேற்றமடையும். அது நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு பாரிய பங்களிப்பை நல்கும். பொருளாதார நிபுணர்களின் கருத்தும் அதுதான்.

கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் மாத்திரமல்லாமல் இலங்கையிலும் சுற்றுலாத் துறை பாரிய வீழ்ச்சி அடைந்தது. அதனால் 2020 இல் 5 இலட்சத்து 7ஆயிரத்து 704 உல்லாசப் பயணிகள்தான் இலங்கைக்கு வருகை தந்தனர். அது 2021 இல் ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 495 பேராக மேலும் வீழ்ச்சியடைந்தது. இந்நாடு 2022 இன் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அதனால் எரிபொருள், எரிவாயு பற்றாக்குறை, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கும் முழு நாடும் உள்ளானது. அதனால் உல்லாசப் பயணிகளின் வருகை கொவிட் 19 தொற்றின் வீழ்ச்சியோடு சேர்த்து இப்பொருளாதார நெருக்கடியினாலும் மேலும் குறைவடைந்தது.

இவ்வாறான சூழலில், 2022 இன் ஜுலை பிற்பகுதியில் நாட்டின் தலைமையை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான பொருளாதார வேலைத்திட்டங்களை விரிவான அடிப்படையில் முன்னெடுக்கலானார். அவற்றில் உல்லாசப் பயணத்துறை மேம்பாட்டு வேலைத்திட்டங்களும் அடங்கும்.

இதன் விளைவாக 2022 ஒக்டோபர் முதல் உல்லாசப் பயணிகளின் வருகை கட்டம் கட்டமாக அதிகரிக்கத் தொடங்கியது. அந்த வகையில் 2022 நிறைவடையும் போது 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 உல்லாசப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்திருந்தனர். அது 2023 இல் 14 இலட்சத்து 87 ஆயிரத்து 303 உல்லாசப் பயணிகள் வரை அதிகரித்தது. இந்த அதிகரிப்பானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இரு மடங்கு அதிகரிப்பாகும். ஆனாலும் கடந்த ஆண்டின் மே மாதம் தவிர்ந்த ஒவ்வொரு மாதமும் இந்நாட்டுக்கு வருகை தந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் கடந்து வந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் அது இரண்டு இலட்சத்தையும் தாண்டியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இவ்வாறான நிலையில், 2024 ஜனவரி மாதம் மாத்திரம் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 253 உல்லாசப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இம்மாதத்தின் முதல் 15 நாட்களிலும் கூட ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 328 பேர் வந்துள்ளனர்.

இந்நிலையில் 2024 இல் 25 இலட்சத்தை விடவும் அதிக எண்ணிக்கையிலான உல்லாசப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 2017 இல் இந்நாட்டுக்கு 25 இலட்சம் உல்லாசப் பயணிகளின் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நாட்டின் உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களின் பிரதிபலனாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் தென்பகுதியின் காலி, தங்காலை சுற்றுலாப் பிரதேசங்களுக்கு நேரில் சென்று சுற்றுலா பயணிகளுடனும் ஹோட்டல் துறையினருடனும் அலவளாவினார். அவர்களது குறை நிறைகளையும் தேவைகளையும் கேட்றிந்தார். அத்தோடு சுற்றுலாக் கைத்தொழில் துறையினர் முன்வைத்த பல பிரச்சினைகளுக்கும் தேவைகளுக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் தொடர்பு கொண்டு தீர்வுகளைப் பெற்றுக்கொண்டுக்கவும் அவர் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

ஜனாதிபதியின் இக்கள விஜய நடவடிக்கைகளை உல்லாசப் பயணக் கைத்தொழில் துறையினர் பெரிதும் வரவேற்றுள்ளதோடு பாராட்டியுமுள்ளனர். அவர்கள் மத்தியில் புதிய நம்பிக்கை ஏற்படவும் வழிவகுத்திருக்கிறது.

இந்நாட்டின் சுற்றுலாத்துறையை உரிய ஒழுங்கில் மேம்படுத்தப்படும் போது அது நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு பாரிய பங்களிப்பு நல்கும். இந்நாட்டிக்கு அந்நிய செலாவணியைக் கொண்டு வரும் துறைகளில் முக்கிய இடத்தை இத்துறை பிடிக்கும்.

ஆகவே நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிக்கக்கூடிய வகையில் உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்துவது இன்றியமையாததாகும். அதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கப்பட வேண்டும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT