அருளும் மாண்பும் நிறைந்த மகத்தான றஜப் மாதம் இஸ்லாமிய வரலாற்றில் பல்வேறு வகையான சிறப்பம்சங்களையும் தடயங்களையும் பதித்துள்ளன. குறிப்பாக, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் முதன்மை கடமையாக விளங்கும் தொழுகை இம்மாதத்திலேயே கடமையாக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணம் (விண்ணுலக யாத்திரையை) மேற்கொண்ட போது அல்லாஹ்வால் இச்சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட ஒப்பற்ற வெகுமானமே தொழுகையாகும்.
அல்லாஹுத்தஆலா தொழுகை என்ற அற்புதமான கடமையின் மூலம் ஒவ்வொரு தனி மனிதனிலும், அவனது குடும்பத்திலும், அவன் சார்ந்திருக்கும் சமூகத்திலும், ஆன்மீக ரீதியாகவும், அறிவு ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ஏற்பட வேண்டிய முன்னேற்றங்களையும், அபிவிருத்திகளையும் அழகுறத் தெளிவுபடுத்தியுள்ளான்.
சுருங்கக் கூறின், ஒரு மனிதனை அவனிடம் காணப்படுகின்ற அனைத்து விதமான துர்குணங்களிலிருந்தும் மீட்டெடுத்து அவனை புனிதப்படுத்தும் அற்புத மந்திரமாக அல்லாஹ் தொழுகையை ஆக்கி வைத்துள்ளான். இது பற்றி அல்லாஹுத்தஆலா குறிப்பிடும் போது, ‘தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக தொழுகை மனிதனை மானக்கேடான விடயங்களை விட்டும், வெறுக்கத்தக்க செயற்பாடுகளை விட்டும் விலக்கும். நிச்சயமாக அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகப்பெரிய சக்தியாகும், அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிவான்’. (அல்குர்ஆன் 23:1-2)
மனிதனின் இரத்தம் ஓடும் நாளமெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் ஷைத்தான் சதாவும் அவனை வழிகெடுத்து நரகின் பக்கம் அழைத்துச் செல்கின்ற செயற்பாடுகளிலே அவனை திளைக்கச் செய்கின்றான். இதற்கான பிரதான ஆயுதமாக அவன் கைகொள்வது மனிதனின் மனோ இச்சையாகும், மனித மனங்களில் கெட்ட எண்ணங்களையும் மோசமான இச்சைகளையும் ஏற்படுத்துவதன் ஊடே அவனை அல்லாஹ்வை விட்டும் தூரமாக்கி விடுகின்றான். இவ்வாறு இறை சிந்தனையில் இருந்து ஒரு மனிதன் தூரமாகி விடுகின்ற போது அவனை அல்லாஹ்வோடு இணைக்கின்ற இணைப்பு பாலமாக அல்லாஹ் தொழுகையை ஆக்கியுள்ளன். ஒரு மனிதன் தொழுவதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்கின்ற போது அல்லாஹ் அவனை சுத்தப்படுத்த ஆரம்பித்து விடுகின்றான். உதாரணமாக ஒரு மனிதன் தொழுகைக்காக வுழு செய்கின்றபோது, அவனது வுழுவுடைய உறுப்புக்கள் மூலம் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்தும் அவ்வுழு நீரிலேயே கரைந்து செல்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவ்வாறே ஒரு மனிதன் அவனது வீட்டிலிருந்து அழகான முறையில் உளூச் செய்து தொழுகையை நிறைவேற்றுவதற்காக பள்ளிவாயலை நோக்கி நடந்து வருவானேயானால் அவன் வைக்கும் ஒவ்வொரு கால் எட்டுக்கும் அவனது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, பல நன்மைகள் பதிவு செய்யப்படுகின்றன என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆக மொத்தத்தில் ஒரு மனிதனை ஷைத்தானிய ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுத்து, அவனைத் தூய்மைப்படுத்தி, உள அமைதியையும், ஒளி நிறைந்த வாழ்வையும் வழங்குவதற்கான அற்புதமான ஆதாரம் தொழுகை என்றால் மிகையாகாது.
இதனையே நபி (ஸல்) அவர்கள், ‘யார் தொழுகையை பேணிக்கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதனை பேணிக் கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமா கவோ இருக்காது. மாறாக அவன் மறுமை நாளில் காரூன், ஹாமான் ஆகியோருடன் இருப்பான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அஹமத்)
மேற்குறிப்பிடப்பட்ட நபிமொழி மூலம் தொழுகையானது ஒரு முஸ்லிமின் முகவரியாகவும், அவனது இம்மை மறுமை வாழ்வின் விமோசனமாகவும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு முஸ்லிமின் இம்மை மறுமையின் ஈடேற்றத்திற்கான அத்திவாரமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்ற தொழுகையை, அவன் எச்சந்தர்ப்பத்திலும் விட்டு விடுவதற்கான அனுமதியை இஸ்லாம் யாருக்கும் வழங்கவில்லை. பருவ வயதை அடைந்து, புத்திசுயாதீனமுடைய ஒவ்வொரு முஸ்லிமும் தினசரி ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதனை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. ஒரு முஸ்லிமுடைய நம்பிக்கை கோட்பாட்டிற்கும், இறை நிராகரிப்பிற்கும் இடையேயான பிரதானமான பிரிகோடாக அல்லாஹ் தொழுகையை ஆக்கி வைத்துள்ளான். எந்தவொரு முஸ்லிம் வேண்டுமென்றே தொழுகையை நிராகரிக்கின்றானோ அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியாகிவிட்டான் என்ற கடுமையான எச்சரிக்கையை இஸ்லாம் பிறப்பித்துள்ளது.
இஸ்லாத்தின் இதர கடமைகளை தொழுகையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தொழுகை ஒரு முதன்மை கடமை என்பதும், ஒரு முஸ்லிமால் ஒரு போதும் அதனை விட்டு விடுவதற்கான அனுமதியில்லை என்பதும் புலப்படுகின்றது. இதற்கான பிரதான காரணி என்னவெனில் தொழுகை எப்படி ஒரு முஸ்லிமுடைய ஆன்மிக ஈடேற்றத்திற்கான அடிப்படையாகப் பார்க்கப்படுகின்றதோ அவ்வாறே ஒரு முஸ்லிமுடைய புறச்செயற்பாடுகளையும் செம்மையாக்கி, அவனை மனிதநேயம் கொண்ட, மானிடப் பண்புகள் நிறைந்த ஒரு மிகச்சிறந்த ஆளுமையாக வடிவமைப்பதில் காத்திரமான பங்களிப்பைச் செய்கின்றன என்பதை உயிர்ப்போடு தொழுகையை நிலை நாட்டுகின்ற ஒவ்வொரு மனிதனும் எளிதாகப் புரிந்து கொள்வான். இதனை பல கோணங்களில் நோக்கலாம்;
தொழுகையை நியமமாக நிறைவேற்றக்கூடிய மனிதனது ஆன்மா சுத்தமடைவது போன்று அவனது உடலும் சுத்தமடைகின்றன. தினசரி ஐந்து வேளைத் தொழுகைக்காக வுழு செய்யும் போது அவனது உடலின் முக்கிய பாகங்கள் எப்போதும் சுத்தமாகவே இருக்கின்றன.
தொழுகையை நியமமாக தொழக்கூடிய மனிதனது ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகின்றது. தொழுகையின் மூலம் அவனது உள்ளம் அமைதி பெறுகின்றது, இதனால் அழுத்தங்களாலும் அமைதியின்மையாலும் ஏற்படும் நோய்களிலிருந்து மனிதன் விடுபடுகின்றான். இவ்வாறே எப்பொழுதும் சுத்தமாக இருக்கும் அவனது உடலும் அவனது ஆரோக்கியத்தை உறுதி செய்கின்றது.
ஒரு மனிதன் தொழுகையை பேணி நிறைவேற்றுவதன் ஊடாக அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறும்போது அவனது வாழ்வில் அபிவிருத்தியும் பரக்கத்தும் ஏற்படுகின்றன. பொருளாதார நெருக்கடிகள் நீங்கி அவன் மகிழ்ச்சியான வாழ்வை பெற்றுக்கொள்கிறான்.
தொழுகையின் மூலம் ஒரு மனிதன் பெற்றுக்கொள்கின்ற ஒப்பற்ற பயிற்சிகள் குறிப்பாக கட்டுப்படும் தன்மை, பிறரை மதித்து நடக்கும் மனோநிலை, பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற உயரிய பண்புகளினூடே அவன் சார்ந்திருக்கின்ற சமூகத்தினரால் எப்போதும் மதிக்கப்பட்டு, ஓர் உயர்ந்த சமூக அந்தஸ்தை பெற்றவனாக வாழ்கிறான்.
ஒரு மனிதன் சடவாத ஷைத்தானிய சிந்தனையில் இருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து உயிர்போடு வாழ்வதற்கான வழியை தொழுகை ஏற்படுத்தி விடுகின்றது.
எனவே மகத்துவம் நிறைந்த தொழுகையை நியமமாக நிறைவேற்றுபவர்களின் கூட்டத்தில் அல்லாஹ் எம்மனைவரயும் சேர்க்கட்டும்.
கலாநிதி, அல்ஹாபிழ்
எம்.ஐ.எம். சித்தீக்…
(அல்-ஈன்ஆமி)
B.A.Hons, (Al- Azhar university, Egypt) M.A.& PhD (International Islamic university, Malaysia)