Thursday, May 2, 2024
Home » பாலத்தின் நிர்மாணப் பணிகள் 06 மாதங்களில் நிறைவடையும்
நிறுத்தப்பட்டிருந்த நாவல - அங்கம்பிட்டிய

பாலத்தின் நிர்மாணப் பணிகள் 06 மாதங்களில் நிறைவடையும்

by sachintha
February 9, 2024 10:29 am 0 comment

பட்ஜட்டில் 90 கோடி ரூபா ஒதுக்கீடு

இடைநடுவில் நிறுத்தப்பட்ட நாவல – அங்கம்பிட்டிய பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆறு மாதங்களுக்குள் நிறைவடையுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை பிடகோட்டே வீதியையும் நாவல ராஜகிரியையும் இணைத்து நாவல – ராஜகிரிய கால்வாய் ஊடாக நிர்மாணிக்கப்படும் நாவல – அங்கம்பிட்டிய பாலத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 90 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று பாலத்தின் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டுள்ளது.

இப்பாலம் 700 மீட்டர் நீளமும் 10.4 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் மொத்த கட்டுமானச் செலவு 260 கோடி ரூபாய். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பொறுப்பை அரசு அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு சட்டபூர்வ கூட்டுத்தாபனம் ஏற்றுள்ளது.

அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நிர்மாணப் பணிகளை அவதானித்த பின்னர் கருத்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் கோட்டை பிரதேசத்தில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக தயாரிக்கப்பட்ட திட்டத்தின் பிரகாரம், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தூண்களின் மீது பாலம் நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நாடு எதிர்கொண்ட கொவிட்19 தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியால், இந்த கட்டுமானம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் அவதானித்ததன் பின்னர் ஜனாதிபதியிடம் விஷேடமாக விடயத்தை தெரிவித்தேன். இத்திட்டத்தின் இறுதிக்கட்டப் பணிகளை நிறைவு செய்யாமை பாரிய குற்றமாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் நாடு என்ற வகையில், கடனை செலுத்தாத காரணத்தால் வெளிநாட்டு கடன் உதவி எதுவும் பெற முடியாத நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம், நிதியமைச்சு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் இணைந்து செயற்படுத்திய கடனை திருப்பிச் செலுத்துவதற்கான உடன்படிக்கைகளை சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் மேற்கொள்ளும் வேலைத்திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன் பிறகு, நிறுத்தப்பட்ட அபிவிருத்தியை மீண்டும் தொடங்குவது சாத்தியமாகும்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தப் பாலத்தின் நிர்மாணப் பணியை இந்த வருடத்திற்குள் பூர்த்தி செய்ய தொண்ணூறு கோடி ரூபா நிதி ஒதுக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, இந்த பாலத்தின் இறுதி கட்ட கட்டுமான பணியை தொடங்க முடிந்துள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் பாதிக்கு மேல் நிறைவடைந்துள்ளதுடன் இடைநிறுத்தப்பட்ட இந்தப் பாலத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கு கொண்டுவரப்படும். அதற்கு அனைவரின் தொடர் ஆதரவும் பங்களிப்பும் தேவை”என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT