Sunday, May 5, 2024
Home » இந்து சமுத்திர மாநாட்டிற்காக ஜனாதிபதி அவுஸ்திரேலியா பயணம்

இந்து சமுத்திர மாநாட்டிற்காக ஜனாதிபதி அவுஸ்திரேலியா பயணம்

- பிரதான உரை நிகழ்த்த அழைப்பு

by Rizwan Segu Mohideen
February 8, 2024 8:19 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) நடைபெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்றுவதற்காக அவர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தில் இணைந்துள்ளார்.

ஜனாதிபதியின் அவுஸ்திரேலிய விஜயத்தின் போது, இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் அவர் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகள் மற்றும் இந்து சமுத்திரத்தை அதிகமாகப் பயன்படுத்தும் ஏனைய நாடுகளைப் பாதிக்கும் பொதுவான அபிலாஷைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்து சமுத்திர மாநாடு 2016 இல் ஆரம்பிக்கப்பட்டது.

“Towards a Stable and Sustainable Indian Ocean” (நிரந்தரமான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி) என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இவ்வருட மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்த உள்ளார்.

இம்முறை மாநாட்டில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் 40 நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பங்கேற்புடன் வரைபடம் ஒன்றும் தயாரிக்கப்படும். மாநாட்டுடன் இணைந்ததாக இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தும் பல உயர்மட்ட கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் இணைந்து கொள்ளவுள்ளதோடு, “Our Blue Future: How can the Indian Ocean region work with island states to
safeguard the health of our shared ocean resources” (எங்கள் நீல எதிர்காலம் : இந்து சமுத்திர வளங்களின் இருப்பைப் பாதுகாப்பதற்கு பிராந்திய தீவு நாடுகளுடன் இணைந்து செயற்படுவதெப்படி?) என்ற தலைப்பில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார்.

7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டை இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. சிங்கப்பூர் எஸ்.ராஜரத்தினம் சர்வதேச கல்வி நிலையம் மற்றும் அவுஸ்திரேலியாவின் பெர்த்-அமெரிக்கா ஆசியா மையம் ஆகியவை இதற்கு பங்களிக்கின்றன.

2ஆவது இந்து சமுத்திர மாநாடு 2017ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரும், ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலங்கையில் நடைபெற்றது நினைவூட்டத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT