Thursday, May 2, 2024
Home » தனது சிறுகதைகளை நூலுருவாக்குவதில் அக்கறை கொள்ளாதவர் தெளிவத்தை ஜோசப்

தனது சிறுகதைகளை நூலுருவாக்குவதில் அக்கறை கொள்ளாதவர் தெளிவத்தை ஜோசப்

அன்னாரின் படைப்புகள் அடங்கிய புதிய தொகுப்பு நூல் புதுப்பொலிவுடன் வெளிவருகின்றது

by gayan
February 3, 2024 2:42 pm 0 comment

ஆறு தசாப்தங்கள் மலையக இலக்கியத்தின் தனி சாம்ராட்டாகக் கோலோச்சியவர் தெளிவத்தை ஜோசப். சிறுகதை, நாவல், குறுநாவல், இலக்கிய ஆய்வு, இலக்கிய வரலாறு என்று பலதுறைகளில் தன் ஆளுமையைச் செதுக்கிச் சென்றவர் ஜோசப். இலங்கையின் அதிஉயர் இலக்கிய விருதுகளையும், சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்ற பெரும் இலக்கியவாதியாக அவர் திகழ்ந்தார்.

சிறுகதை எழுத்தாளராக 1960 களில் நன்கு அறியப்பட்டவரான தெளிவத்தை ஜோசப்பின் முதல் சிறுகதைத் தொகுப்பு ஒரு இருபது ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நூல் வடிவம் பெற்றது. ‘நாமிருக்கும் நாடே’ என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 1979 இல் வெளியாகி, அவ்வாண்டிற்கான சாகித்யமண்டலப் பரிசையும் பெற்றது. அத்தொகுப்பின் மறுபதிப்பு 37 ஆண்டுகள் கழித்து 2016 இல் வெளியானது.

தமிழகத்திலிருந்து ஜெயமோகனின் தொகுப்பில் தெளிவத்தை ஜோசப் அவர்களின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ‘மீன்கள்’ என்ற தலைப்பில் நற்றிணை வெளியீடாக 2013 ஆம் ஆண்டு வெளியானது.

மல்லியப்புசந்தி திலகரின் முயற்சியில் அவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள் ‘ என்ற தலைப்பில் பாக்யா வெளியீடாக 2014 ஆம் ஆண்டு வெளியானது.

அறுபதாண்டு காலம் எழுதிக்கொண்டிருந்த ஜோசப்பின் சிறுகதைகள் ஒரு மீள்பிரசுரத்துடன் ஆக மூன்று தொகுதிகளையே கண்டிருக்கிறது.

ஜோசப் கதைகள் எழுதிக் கொண்டிருந்த ஆரம்ப காலப்பகுதியில், ஒரு பத்திரிகையில் சிறுகதை வெளியானால் அந்தப் பத்திரிகையின் ஒரு பிரதியை வாங்கி வைத்திருக்கக்கூடும். வெளியான சிறுகதையை போட்டோபிரதி எடுத்துவைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் இல்லாத காலம். ஜோசப் தனது ஆக்கங்களைத் தானே அச்சிடவேண்டும் என்று ஒருபோதும் முனைந்ததில்லை.

ஜோசப்பின் கதைகளை வெளியிடுவது தொடர்பாக அவரை நான் கொழும்பில் சந்தித்துப் பேசியபோது தன்னிடம் ஒரு கதையும் இல்லை என்றே அவர் கூறினார். ‘இல்லை, என்னிடம் கதைகள் இருக்கின்றன’ என்று நான் கூறினேன். அது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய கதைகளை அச்சிட்டுத் தருவதாக் கூறி வந்தவர்களிடம், ஜோசப் தான் சேகரித்து வைத்திருந்த கதைகளைக் கொடுத்திருக்கிறார். புத்தகமும் வெளிவரவில்லை. கதைகளும் தொலைந்து போயின.

யாழ்ப்பாணத்தில் ‘நாமிருக்கும் நாடே’ நூல் வெளியீட்டிற்கு ஜோசப் வந்திருந்தபோது, தன் கைவசம் தனது கதைகள் இல்லை என்று அவர் சொல்லப்போய், அதனையே அவரது பொறுப்பின்மையை வெளிப்படுத்துவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

எந்த எழுத்தாளரும் தங்களிடம் இல்லாத கதைகளை நாடி அவரிடம் வந்தபோது, தனது சேகரத்திலிருந்த கதைகளை ஜோசப் தாராளமாகக் கொடுத்து உதவியிருக்கிறார். பெனடிக்ற் பாலன் தான் எழுதிய சில கதைகளை ஜோசப்பிடமிருந்தே பெற்றிருக்கிறார்.

தன்னிடம் இல்லாத சில கதைகளைத் தேடித் தருமாறு ஜோசப் செங்கைஆழியானைக் கேட்டிருக்கிறார். ஈழத்து எழுத்தாளர்களின் பல சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்ட செங்கைஆழியானின் தேடலுக்குள்ளும் ஜோசப்பின் கதைகள் சிக்கவில்லை.

தனது சிறுகதைகளின் முழுத்தொகுதியையும் வெளியிட்டுத் தருமாறு ஜோசப் கேட்டபோது, அது எளிதான வேலையாகவே எனக்குப்பட்டது. ஆனால், ஜோசப் எழுதிய முழுக்கதைகளையும் பட்டியல் இட்டுத் தேட ஆரம்பித்தபோதுதான், அப்பணியின் கஷ்டங்கள் துலங்க ஆரம்பித்தன. ஏற்கனவே வெளியான ஜோசப்பின் மூன்று தொகுப்புகளிலும் பிரசுரம் பெற்ற 34 சிறுகதைகள் எங்கள் கைவசம் இருந்தன.

இந்த ஆண்டில் தமிழகத்தின் எழிலினி பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கும் ‘தெளிவத்தை ஜோசப் கதைகள்’ என்ற தொகுப்பு 59 கதைகளையே கொண்டுள்ளது. தமிழகத்தின் ‘உமா ‘ இதழில் வெளியான ஜோசப்பின் ‘வாழைப்பழத்தோல்’ என்ற கதையினைத் தமிழகத்தில் தேடிய என் முயற்சி வெற்றிதரவில்லை. பதுளையில் சேந்தன் ராஜமாணிக்கம் என்பவர் வெளியிட்ட சஞ்சிகை ஒன்றில் வெளியான, ஜோசப் எழுதிய ‘தெளிவு’ என்ற கதையும் கைகளுக்குக் கிட்டவில்லை. ஈழநாடு பத்திரிகையில் 1970இல் ஜோசப்பின் ‘புது அய்யா’ என்ற கதை வெளியானதாக அவர் கூறியதை அடுத்து அவ்வாண்டிற்கு முன்பின்னாகவும் நாங்கள் தேடிய முயற்சி பயன்தரவில்லை. சிற்பி சரவணபவன் தனது கலைச்செல்வி மலையக மலருக்காக ஜோசப் எழுதிய கதை ‘கணக்கு’. மலர்போடும் முன்னரே இதழ் நின்றுவிட்டது. ஆனால் அவர் யாழ். கத்தோலிக்கப் பாதிரிமார் நடத்திய ‘புதிய உலகம்’ சஞ்சிகையின் மலையகச் சிறப்பிதழுக்கு அக்கதையைக் கொடுத்திருக்கிறார். அக்கதை அவ்விதழில் வெளிவந்ததாகத் தெரிகிறது. ஆனால், அந்த இதழைப் பெறமுடியவில்லை.இவற்றைவிட ‘தேனருவி’ இதழில் ஜோசப் எழுதிய ‘நா’ என்ற சிறுகதையும் நம் கைக்குக் கிடைக்கவில்லை..

எழிலினி பதிப்பகத்தின் வாயிலாக ஒளிவண்ணன் வெளியிட்டிருக்கும் ‘தெளிவத்தை ஜோசப் கதைகள்’ என்ற புதிய தொகுப்பு பொலிவோடு வெளிவருவதில் முன்னின்றுழைத்த பொன் தனசேகரன் அவர்கள் நீண்ட பதிப்புலக அனுபவம் கொண்டவர். தமிழகத்தின் இதழியல் வரலாற்றில் தோய்ந்த அவரின் பதிப்பாற்றல் மதிப்பார்ந்தது.

குடந்தை பரிபூரணன் தெளிவத்தை ஜோசப் அவர்களின் தம்பி. சிறந்த சிறுகதை எழுத்தாளர். ஜோசப்பின் சிறுகதைகளை ஒப்புநோக்கித் திருத்தும் பணியை அவர் பொறுப்பெடுத்த வேளையில், எதிர்பாராத துயர நிகழ்ச்சிகள் வந்து சேர்ந்த போதிலும், தான் மேற்கொண்ட பணியினைச்செவ்வனே செய்துதந்த நேர்த்தி போற்றத்தக்கது.

எச்.எச்.விக்ரமசிங்க அவர்களின் பேருழைப்பு பெருமதிப்பு மிக்கது. மிகத் தீவிரமாக இத்தொகுப்பை சென்ற ஆண்டே கொண்டுவர நாங்கள் முயன்றபோதும், புதிய இந்த ஆண்டில்தான் அது சாத்தியமாகியிருக்கிறது. தெளிவத்தை ஜோசப் அவர்கள் செயலோடு இருந்த காலத்தில் அவர் கரங்களில் சமர்ப்பிக்க நாங்கள் பேரவா கொண்டிருந்தோம். இன்று அவரின் மலர்ப்பாதங்களில் அன்னவரின் பெருந்தொகுப்பைக் காணிக்கையாக்குகின்றோம்.

மு.நித்தியானந்தன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT