Monday, April 29, 2024
Home » டெங்கு நுளம்பு பரவும் அபாயம்

டெங்கு நுளம்பு பரவும் அபாயம்

by Gayan Abeykoon
February 1, 2024 8:17 am 0 comment

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மீண்டும் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் புகை விசிறும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ. எம். முகம்மது இஸ்ஸதீன் தெரிவித்தார்.

ஒலுவில்,பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் ஒரு வார காலத்திற்குள் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் டெங்கு நுளம்பின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு புகை விசிறும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கொழிப்பு செயலணி மற்றும் பொலிஸார் ஆகியோர் வீடு வீடாகச் சென்று டெங்கு நோய் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டல், டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை துப்புரவு செய்தல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டெங்கு நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல், அவற்றின் வதிவிடத்தை முற்று முழுதாக அழித்தல், வதிவிடத்தில், நுளம்பின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானதாகும், இதுதொடர்பாக மக்களுக்கு துண்டுப்பிரசுரம் மூலமும், ஒலிபெருக்கி ஊடாகவும் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினர் வீடுகளுக்கு வரும் போது உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.

தென்னம் குரும்பை, யோகட் கப், வெற்றுப்போத்தல்கள், வெற்று டயர்கள், பொலித்தீன் கழிவுகள் போன்ற கழிவுகளை முறையாக அகற்ற வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார். டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருப்பவர்கள் துப்புரவு செய்யுமாறும் அதனை மீறுபவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலைகள், மதஸ்தலங்கள், அரச, தனியார் நிறுவனங்களிலும் புகை விசிறும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT