Thursday, May 2, 2024
Home » நாவின் விபரீதங்கள்

நாவின் விபரீதங்கள்

by sachintha
January 19, 2024 10:20 am 0 comment

 

மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துவதே அவனது பேசும் திறன்தான். இச்சிறப்பை அவனுக்கு பெற்றுத்தந்த நாவு ஒரு இறை அருட்கொடையாகும். இருப்பினும் அதைப் பயன்படுத்தும் வழிவகைகளைப் பொறுத்து அவன் நாவினால் சுவனமும் செல்லலாம், நரகமும் செல்லலாம்.

நாவினால் புரியப்படும் பாவங்கள் நிறையவே உள்ளன. இது குறித்து அல்குர்ஆன், “இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் யாரும் யாரையும் பரிகாசம் செய்யாதீர். ஏனெனில் கேலி செய்யப்படுபவர் சிலவேளை கேலி செய்தவரை விட (அல்லாஹ்விடத்தில்) சிறந்தவராக இருக்கக்கூடும், மேலும் எந்தப் பெண்களும் பிற பெண்களை பரிகாசம் செய்யாதீர். கண்ஜாடையால் யாரையும் இழிவுப் படுத்தாதீர், யாரையும் பட்டப்பெயர் கூறி அழைக்காதீர். இறை விசுவாசத்தின் பின்னர் பாவம்புரிதல் என்பது மிகக் கொடியதாகும். யார் இவற்றிலிருந்து பாவவிமோசனம் தேடவில்லையோ அத்தகையோர் பெரும் அநியாயக்காரர்கள் ஆவார்கள். மேலும், நீங்கள் பிறரைப்பற்றி புறம் பேசாதீர்கள். உங்களின் இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிப்பதை உங்களில் யாராவது விரும்புவார்களா? அதை வெறுப்பீர்களல்லவா? எனவே அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களை ஓர் ஆண்-பெண்ணிலிருந்தே படைத்தான். நீங்கள் ஒருவரோடு ஒருவர் அறிமுகமாகி பழகுவதற்காகவே பல கோத்திரங்களாக, பிரிவுகளாக ஆக்கினான். எனவே உங்களில் அதிகம் அல்லாஹ்வை அஞ்சுபவரே அல்லாஹ்விடத்தில் மிக சங்கை மிக்கவராவார்.

(ஹுஜுராத்:11-13)

முஆத் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். ‘நான் நபிகளிடத்தில் அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கும் ஒரு செயலைக் கற்றுத்தாருங்கள் என்று கேட்டபோது, “அல்லாஹ்வை மட்டும் வணங்கு. அவனுக்கு எதையும் இணையாக்கி விடாதே! நோன்பு பிடி, அது ஓர் கேடயம், ஸக்காத் கொடு, தர்மம் செய் அது இறைகோபத்தைத் தணித்துவிடும், இரவின் மத்திய பகுதியில் நின்று வணங்குவதை வழக்கமாக்கு,… என்று கூறிவிட்டு நரகம் தவிர்த்து சுவர்க்கம் செல்ல மேற்கூறப்பட்டவற்றை செய்வதை இலகுவாக்கும் வழியை சொல்லவா? என்று கூறிய நபிகளார், தமது நாவை கையால் பிடித்து, “இதை அடக்கி வைத்துக் கொள்!” என்றார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதரே! நாம் நாவால் பேசும் பேச்சாலும் குற்றம் பிடிக்கப்படுவோமா? என்றதும் நபியவர்கள் “சரியாய் போச்சு…” முஆதே! அதிக மனிதர்கள் நரகத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு முகங்குப்பற வீசப்படுவதற்குக் காரணமே இந்த நாவினால் அவர்கள் தேடிக்கொண்டவைகள்தான்’ என்றார்கள். (ஆதாரம்- புஹாரி)

ஒரு மனிதன் விபரீதம் அறியாமல் தன் நாவினால் அல்லாஹ்வை கோபமூட்டும் ஒருசில வார்த்தைகளை அலட்சியமாகப் பேசிவிடுகின்றான். ஆனால் அதன் காரணமாக அவன் நரகில் 70 வருட பயண தூரத்தின் அளவுக்கு ஆழிய நரகத்தில் தூக்கி வீசப்படுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழி)

ஒரு சிலர் தேவையற்ற பேச்சுக்களில் அதிக நேரத்தை விரயமாக்குகின்றனர். ஆனால் அளவுக்கதிகமாக எந்நேரமும் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பதும் அல்லாஹ்வை வெறுப்பூட்டும் செயலாகும்.

‘எனக்கு மிகவும் வெறுப்பானவரும் மறுமையில் அந்தஸ்தால் என்னைவிட்டும் வெகு தூரத்தில் இருப்பவரும் யாரெனில் வாய்புடைக்க அதிகம் பேசும், ஓய்வின்றி கதை பேசும், சுயபுகழ் பாடி கர்வமடைவோர் தான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்- அஹ்மத்).

அதனால் தேவையற்ற வீண்பேச்சைத் தவிர்ப்பது முஃமின்களின் விசேட பண்பாகும் என அல் குர்ஆன் குறிப்பிட்டிருக்கிறது. ஏனெனில் வீண்பேச்சு பேசல் நேரத்தை விரயம் செய்யும் செயலாகும். விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை அவர்கள் ஷைத்தானின் சோதரர்களென அல்குர்ஆன் கண்டிக்கின்றது.

(ஸுரா இஸ்ராஃ: 126).

வீண் பேச்சுக்களானது ஒரு மனிதனை தீய, தூஷண, கீழ்த்தரமான பேச்சுக்களைப் பேசத்தூண்டும். அவற்றின் மூலம் அவன் தனது அந்தஸ்தை தானே இழந்து மக்கள் மத்தியில் மதிப்பற்றவனாக மாறிவிடுகின்றான். அதனால் தான் நபி(ஸல்) அவர்கள், ‘தான் செவியுற்றவற்றையெல்லாம் பேசிவிடுவதே ஒருவன் பாவி என்பதற்குரிய போதிய அடையாளம் என்றார்கள்.

(ஆதாரம்: முஸ்லிம்).

ஆகவே வீண் பேச்சுக்களைத் தவிர்த்துக் கொள்வது இன்றியமையாததாகும். அதேபோன்று பொய் பேசுதல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், பிறரை ஏசுதல், சாபமிடுதல், திட்டுதல், பிறரை கேலி, கிண்டல் செய்தல், மனம் புண்படும் விதமாகப் பேசுதல் உள்ளிட்ட அனைத்தும் இஸ்லாம் வெறுத்து கண்டித்துள்ளவையாகும்.

மௌலவி ஏ.ஜி.எம். ஜலீல் மதனி…

பகுதித் தலைவர், மஃஹதுஸ் ஸுன்னா

அரபுக் கல்லூரி, காத்தான்குடி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT