Monday, April 29, 2024
Home » பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை அகற்றம்

பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை அகற்றம்

- இந்துக்கள் கவலை; இந்தியா தலையீடு

by Prashahini
December 8, 2023 1:52 pm 0 comment

கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

கடந்த ஒரு தசாப்த காலமாக அங்கிருந்த சுவாமி விவேகானந்தர் சிலை இவ்வாறு திடீரென அகற்றப்பட்டமை தொடர்பாக இந்திய – இலங்கை உள்ளிட்ட உலகம் வாழ் இந்துக்கள் கவலை அடைந்துள்ளனர்.

உலகம் போற்றும் வகையில் இந்து மதத்தை அமெரிக்காவில் முழங்கியபின் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி சுவாமி விவேகானந்தர் கொழும்பில் வந்து இறங்கினார். அப்பொழுது அங்கிருந்த பெரிய தனவான்களும் இன்னும் பலரும் திரு. பொன்னம்பலம் இராமநாதன் தலைமையில் திரு. தம்பையா உதவிகளுடன் சுவாமி விவேகானந்தரின் வருகையை இலங்கை முழுவதும் மாபெரும் வகையில் கொண்டாடினர். சுவாமி விவேகானந்தருடைய வருகையை ஒட்டி பல இடங்களில் வரவேற்கும் தோரணங்களும் பூரண கும்பங்களும் வைக்கப்பட்டு சகல மரியாதைகளுடன் அருள்மிகு பொன்னம்பலவானேஸ்வரர் திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

சுவாமி விவேகானந்தரை, இந்த உலகத்திற்கு வழிகாட்டுவதற்காக வந்த திருஞானசம்பந்தரின் அவதாரமாகவே இலங்கை மக்கள் கருதியதாக அன்றைய செய்தித்தாள்கள் செய்தியை வெளியிட்டிருந்தன. இத்தகைய மாபெரும் சிறப்பு வாய்ந்த சுவாமி விவேகானந்தரின் வருகை பொன்னம்பலவாணேஸ்வரர் திருக்கோவிலில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டிருந்தது.

2013 ஆம் ஆண்டில் அந்த கல்வெட்டு கோவிலில் இருந்து அகற்றப்பட்டது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தை இந்து அமைப்புகளும், பொதுமக்களும் இராமகிருஷ்ண மிஷன் உட்பட செயல் அலுவலர்களும் தொடர்பு கொண்டபோது கல்வெட்டுக்கு பதிலாக சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலையை வைப்பதாக அன்றைய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அதற்கமைய கடந்த 2014 மே மாதம் முதலாம் திகதி வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இந்த சிலை ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கமைய கொழும்பு இராமகிருஷ்ண மிஷனால் வழங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

சிலை அகற்றப்பட்டமை தொடர்பாக இராமகிருஷ்ண மிஷன் மற்றும் இந்திய அரசு சார்ந்த உயர்மட்டக் குழுக்கள், இந்து ஸ்வயம் சேவக அமைப்பு இன்னும் பல இந்து அமைப்புகள் கோயில் நிர்வாகத்திடம் கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளன.

அதற்கு ‘மனிதர்களின் சிலையை நாம் ஆலயத்தில் வைப்பதில்லை’ என்று ஆலய நிர்வாகம் எழுத்து மூலம் பதிலளித்திருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்தியா காசி வாரணாசி இராமகிருஷ்ண மிஷன் கிளையில் இருந்து முன்னாள் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சிலை அகற்றியமையை ஒட்டி இரண்டு பக்க கடிதத்தை நிர்வாகிக்கு அனுப்பியிருந்தார். அவருக்கும் அதே பதில் வழங்கப்பட்டிருக்கின்றது . இது தொடர்பாக இந்து அமைப்புகள் கவலை தெரிவித்து இருக்கின்றன. ஆலயத்திற்கு வெளியே வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் ஒரு மனிதர் என்றால் ஆலயத்திற்கு உள்ளே உள்ள 64 நாயன்மார்களும் மனிதர்கள் தானே. அப்படியானால் அவர்களது சிலைகளும் அங்கிருந்து அகற்றப்படுமா? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

இதனை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கு பலரும் முயற்சி எடுத்து வருகின்ற பொழுதும் ஆலய நிர்வாகம் விடாப்படியாக இருப்பதாக கூறப்படுகிறது.

காரைதீவு குறூப் நிருபர் சகா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT