Wednesday, May 8, 2024
Home » சிறுவர்களை போராளிகளாக சித்தரிக்கும் செயற்பாடுகள் வெறுக்கத்தக்க சிந்தனைகள்

சிறுவர்களை போராளிகளாக சித்தரிக்கும் செயற்பாடுகள் வெறுக்கத்தக்க சிந்தனைகள்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன்

by damith
December 5, 2023 6:40 am 0 comment

வடக்கில் அண்மையில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் சிறுவர்களுக்கு போராளிகளைப்போல் ஆடையணிந்து அவர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளை அணிவித்த செயற்பாடுகள், முற்றிலும் வெறுக்கத்தக்கவை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். முற்றிலும் வெறுக்கத்தக்க இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை இனியாவது தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: மகனாகவும், கணவனாகவும், சகோதரனாகவும், இரு பிள்ளைகளின் தந்தையாகவும், நாட்டு பிரஜையாகவும் இந்த விவாதத்தில் உரையாற்றுகிறேன்.

கல்முனை பகுதியில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் 15 வயது சிறுவன், நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரியான பெண்ணால் மிக கொடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.இச்செய்தியை அறிந்து மனவேதனையடை ந்தேன். கடந்த மாதம் மாத்திரம் 16 வயதுக்குக் குறைவான 131 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோக கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்விரு செய்திகளும் மிகவும் கொடுமையானவை.

அதேவேளை, கடந்த வாரம் வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.இதில், விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை போன்ற சீருடைகளை சிறுவர்களுக்கு அணிவித்து அவர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளை அணிவித்திருந்ததையும் காண முடிந்தது.இது முற்றிலும் வெறுக்கத்தக்கது.

யுத்த காலத்தில் பல சிறுவர்கள் போராளிகளாக்கப்பட்டனர். இந்த நினைவுகளை ஞாபகப்படுத்தும் வகையில் தற்போது செயற்படுவது முறையற்றது. சம உரிமை,பெண் சமத்துவம் தொடர்பில் அரசியலமைப்பில் பேசப்படுகிறது.ஆனால், பாரம்பரிய சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுவதால் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை. அநுதாரபுரத்திலும்,கண்டியிலும் மாவட்ட செயலாளர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்படவில்லை.பத்தினி தெய்வம் ஒரு பெண் ஆனாலும் கோயில் கருவறைக்குள் செல்வதற்கு பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்த நிலைமை மாற்றமடைய வேண்டும். முப்படைகளில் பெண்கள் உள்ளனர் .கடற்படையில் இதுவரை காலமும் ஆண்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட பதவிகள், தற்போது பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT