Sunday, May 5, 2024
Home » அபார பந்துவீச்சு: மாணவன் ரிஷியுதன் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திப்பார்

அபார பந்துவீச்சு: மாணவன் ரிஷியுதன் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திப்பார்

by damith
December 5, 2023 6:30 am 0 comment

அபாரமாக பந்துவீசி ஓட்டங்கள் எதனையும் வழங்காது எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைபடைத்த கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் மாணவன் செல்வசேகரன் ரிஷியுதன், விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மாணவனின் எதிர்காலம் தொடர்பில் உதவி ஒத்துழைப்புக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் விவகார, விளையாட்டுத் துறை இராஜாங்க அமைச்சர் ரோகண திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் அமைச்சு மற்றும் மகளிர், சிறுவர் விவகார, சமூக வலுப்படுத்துகை அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் 13 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாம் கட்ட முதல்தர போட்டியில், கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் மாணவன் செல்வசேகரன் ரிஷியுதன் அபாரமாக பந்துவீசி ஓட்டங்கள் எதனையும் வழங்காது எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி பாடசாலை மட்டத்தில் சாதனைப் படைத்துள்ளார். அடுத்த வாரம் அந்த மாணவன் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பான உதவிகளை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டுத்துறை அமைச்சரின் வழிகாட்டலுக்கு அமைய நான், கல்லூரியின் அதிபரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடினேன்.

அந்த வகையில் அடுத்த வாரம் அந்த மாணவனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். அதற்கிணங்க விளையாட்டுத்துறை அமைச்சின் மூலம் அவருக்கு செய்யக்கூடிய அனைத்து உதவி ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT