Sunday, March 3, 2024
Home » பொருளாதார மறுமலர்ச்சி பாதையில் நகரும் தேசம்

பொருளாதார மறுமலர்ச்சி பாதையில் நகரும் தேசம்

by Rizwan Segu Mohideen
November 28, 2023 6:00 am 0 comment

இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள அழகிய எமது இலங்கைத் தேசத்தில் இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கடந்த ஆண்டின் ஆரம்பப் பகுதியில் இந்நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அதனால் மக்களும் நாடும் பலவிதமான அசௌகரியங்களையும் அழுத்தங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அந்நிய செலாவணிப் பற்றாக்குறையினால் தோற்றம் பெற்ற இப்பொருளாதார நெருக்கடியின் விளைவாக இறக்குமதிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. அதன் காரணத்தினால் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கலான பல்வேறு பொருட்களுக்கும் நாட்டில் பற்றாக்குறை நிலவியது.

இதன் விளவைாக எரிபொருள் உள்ளிட்ட பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நாட்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகி இருந்தது. அத்தோடு பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் இடம்பெற்றன.

இந்நிலையில் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி அரசியல் கொதிநிலையையும் தோற்றுவித்தது. அதன் காரணத்தினால் கடந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டின் முற்பகுதியில் இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்தது. இப்பின்னணியில் அன்றைய பிரதமரும் அவர் தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகியதோடு, சொற்ப காலத்தில் அன்றைய ஜனாதிபதியும் கூட தனது பதவியைத் துறந்தார்.

இவ்வாறான சூழலில் நாட்டின் தலைமையை ஏற்க எவரும் முன்வராத நிலைமை ஏற்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி கடந்த வருடம் ஜுலை மாதம் பிற்பகுதியில் நாட்டின் தலைமையைப் பொறுப்பேற்றார்.

நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வங்குரோத்து நிலையை அடைந்திருந்த சூழலில் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கட்டியெழுப்ப முடியும் என எவரும் எதிர்பார்த்திராத சூழலில்தான் அவர் இப்பதவியை ஏற்றார். தாம் பெற்றுள்ள பரந்த பொருளாதார மேம்பாட்டு அனுபவங்களின் அடிப்படையில் நாட்டின் தலைமையை ஏற்ற ஜனாதிபதி, பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை விரிவான அடிப்படையில் ஆரம்பிக்கலானார். அத்திட்டங்கள் குறுகிய காலப்பகுதி முதல் பலனளிக்கத் தொடங்கின. அதனால் பொருளாதார நெருக்கடிக் காலத்தில் நிலவிய அசௌகரியங்களும் அழுத்தங்களும் கட்டம் கட்டமாக நீங்கலாயின.

கடந்த வருடத்தின் ஆரம்பப்பகுதியில் நாட்டில் பொருளாதார நெருக்கடியொன்று ஏற்பட்டதா? என வினவும் அளவுக்கு இன்று நிலைமை முன்னேற்றமடைந்துள்ளதோடு, நாடும் பொருளாதார மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்திருக்கிறது. இது தெளிவான உண்மையாகும்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டும் தடைப்பட்டும் இருந்த பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஒரு தொகுதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டும் இருக்கின்றன. இதேவேளை 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுததிட்டத்திலும் நாட்டின் அபிவிருத்திக்கென பெருந்தொகை நிதி ஒத்துக்கீடு செய்யப்பட்டுமுள்ளது.

அந்த வகையில் அநுராதபுரத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘அடுத்த மாதத்திற்குள் நம் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபடப் போகிறது. சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து தேவையான பதில் அளிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த அறிவிப்பின் ஊடாக மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நிச்சயம் ஏற்படும். பொருளாதார வங்குரோத்து நிலையில் இருந்து நாடொன்று விடுபடுகிறது, மீட்சி பெறுகிறது என்பது மட்டுமன்றி நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கப் பெற வழிவகை செய்யும்.

அந்த அடிப்படையில் மக்களுக்கு பல்வேறு நிவாரணத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக தற்போது வழங்கப்படும் ‘அசுவெஸ்ம’ கொடுப்பனவு அடுத்த வருடம் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளன. அதனால் வங்குரோத்து நிலையில் இருந்து நாடு முழுமையாக மீட்சி பெறும் போது மக்கள் அடைந்து கொள்ளும் பிரதிபலன்களும் மேலும் அதிகரிக்கவே செய்யும்.

ஆகவே பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கப்பட வேண்டும். அதுவே நாட்டில் உண்மையான பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திடும். அவ்வாறான மறுமலர்ச்சி மக்களுக்கும் பிரதிபலன்களைப் பெற்றுத்தரக் கூடியதாக அமையும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT