இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் முஸ்லிம்கள் எதிரிகளால் பல விதமான இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் குறைஷிகளால் இழைக்கப்பட்ட அநியாயங்களையும், அவமானங்களையும் பொறுமையுடன் சகித்துக்கொண்டார்கள். மக்கத்து இறைநிராகரிப்பாளர்கள் எல்லை மீறிய இன்னல்களின் காரணமாக இறுதியில் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்கள். தாம் வாழ்ந்த மண்ணை விட்டும் வெளியேறிய முஸ்லிம்கள் பொறுமையைக் கொண்டும் துஆவைக் கொண்டும் வாழ்ந்தார்கள். அவர்களது உறுதியான ஈமானிய வாழ்வின் காரணமாக ஹிஜ்ரி 8ல் மீண்டும் மக்காவில் வெற்றியுடன் நுழைந்தார்கள்.
அல்லாஹ்வுக்காக சகல துன்பங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாகவும், அவர்களுடைய பிரார்த்தனையின் காரணமாகவும், அல்லாஹ் அவர்களுக்கு மிக உன்னதமான வெற்றியை அளித்தான். அநீதி இழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளை இறைவன் நிச்சயம் நிறைவேற்றி வைப்பான். திருக்குர்ஆனில் அல்லாஹ் வினவுகிறான், ‘(கஷ்டத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்போர் அழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறி அவர்களின் கஷ்டங்களை நீக்குபவன் யார்?
(ஆதாரம்: சூரா அந்நம்லு)
மேலும் இத்தகைய சோதனைகளைத் தாங்கி அல்லாஹ்வின் உதவியில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கும் இறைவனின் உதவிகள் கிட்டுகின்றன. அல்லாஹ் தன் திருமறையில், ‘(சோதனைக்குள்ளாகும்) அவர்கள், தங்களுக்கு எத்தகைய கஷ்டம் வந்தபோதிலும், நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்’ எனக் கூறுவார்கள். இத்தனையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் ஆசிர்வாதங்களும், கிருபையும் ஏற்படுகின்றன. மேலும் இவர்கள்தான் நேரான வழியையும் அடைந்தவர்கள்’.
(ஆதாரம்: அல் பகரா: 156, 157)
அல்லாஹ்வின் உதவியில் உறுதியுடன் இருக்கும் இத்தகைய அநீதி இழைக்கப்பட்டோரின் பிரார்த்தனைகளை அல்லாஹ் எவ்வித தடையுமின்றி ஏற்றுக்கொள்கிறான். ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ஐந்து வகையான துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படுகின்றன. அவற்றில் அநீதி இழைக்கப்பட்டவரின் துஆவும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: பைஹகீ)
மேலும் நபி (ஸல்) அவர்கள், துஆ வணக்கத்தின் ஆணிவேர் என்று கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: திர்மதி)
உண்மையில் அநீதிக்கு உட்பட்டவனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எவ்வித திரையும் இருப்பதில்லை. இத்தகைய பிரார்த்தனைகள் ஓர் உண்மை விசுவாசியின் மிகப் பெரிய ஆயுதமாகும்.
அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். துஆ முஃமினின் ஆயுதம். தீனின் தூண். வானம் பூமியின் ஒளி என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்தத்ரக் ஹாகிம்)
எதிரி எத்தகைய வலிமையுடையவனாக இருப்பினும் ஈமானில் உறுதியுடனும் அல்லாஹ்வின் உதவியில் அசையாத நம்பிக்கை கொண்டு பொறுமையுடன் காத்திருக்கும் அடியானின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுவதில் எத்தகைய சந்தேகமுமில்லை. இஸ்லாமிய வரலாற்றில் பத்ருப் போர்க்களம் பல பாடங்களை முஸ்லிம்களுக்கு கற்றுத்தந்துள்ளது. முஸ்லிம்களோ 313 பேர் மட்டும் இருந்தார்கள், அவர்களை எதிர்க்க வந்த மக்கத்து இறைநிராகரிப்பாளர்கள் படையில் 1000 வீரர்கள் இருந்தார்கள். இவர்களிடம் 100 குதிரைகளும், 600 கவச ஆடைகளும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு அதிகமான ஒட்டகங்களும் இருந்தன. முஸ்லிம்களிடம் மிகச் சொற்பமான ஆயுதங்களும், ஒட்டகங்கள், குதிரைகளுமே காணப்பட்டன.
இச்சமயம் நபி (ஸல்) அவர்கள் இரு கரமேந்தி பிரார்த்தித்தார்கள். ‘இறைவா! இந்தக் குறைஷிகள் இறுமாப்போடு உன்னுடன் போர் செய்ய வந்துள்ளனர். உனது மார்க்கத்தை எதிர்க்கத் துணிந்துள்ளனர். உனது தூதரைத் தோல்வியுறச் செய்ய பிடிவாதம் பிடிக்கின்றனர். இறைவா! நீ எனக்கு உதவி செய்வதாக வாக்களித்துள்ளாய். அவ்வாக்கை நிறைவேற்றுவாயாக! இறைவா! இச்சிறிய கூட்டத்தை நீ அழித்துவிட்டால் இன்றைய தினத்துக்குப்பின் உன்னை வணங்குபவர்கள் இருக்க மாட்டார்கள்.
அவ்வேளை நபி (ஸல்) அவர்களது போர்வை நழுவி விழுந்தது. அந்தளவுக்கு அல்லாஹ்விடம் மன்றாடி துஆ செய்தார்கள். நபியவர்களின் இப்பிரார்த்தனை காரணமாகவும் தியாகத்தின் காரணமாகவும், முஸ்லிம்கள் அன்று மகத்தான வெற்றியடைந்தார்கள். துஆ என்னும் ஆயுதம் அன்று முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கியதற்கான காரணம் முஸ்லிம்களுடைய தியாகமும், பொறுமையுமாகும். மக்காவிலும் மதீனாவிலும் பலவிதமான இன்னல்களையும், சிரமங்களையும் அனுபவித்தார்கள். எனவே எமது துஆக்கள் நிறைவேற வேண்டுமாயின் உறுதியான ஈமானுடன் பொறுமையும் மிக அவசியமாகும்.
தமது மக்கமா நகரிலிருந்து நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் தமது பிறந்த மண்ணைத் துறந்து, அங்கிருந்து புலம்பெயர்ந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தனர். மேலான கலிமாவுக்காகவும், தீனைப் பாதுகாப்பதற்காகவும் பல தியாகங்களை செய்தனர். பொறுமையுடன் இறைவனிடம் கையேந்தியவர்களாக அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்திருந்தனர். ஒன்றிரண்டு வருடங்களல்ல… எட்டு வருடங்கள் பொறுமையுடன் வாழ்ந்தனர். ஆனால் நிலைமை மாறியது. நபி (ஸல்) மக்கமா நகரில் நுழைந்ததை உலகமே வியந்து நோக்கியது. ஹிஜ்ரி 8ல் ஒருதுளி இரத்தமின்றி மக்கா வெற்றிகொள்ளப்பட்டது.
மக்கா வெற்றியின்போது நபி (ஸல்) அவர்கள் பள்ளியினுள் நுழைந்து கஃபாவை தவாப் செய்தார்கள். தமது கையிலிருந்த கோலால் அங்கிருந்த 360 சிலைகளைக் கீழே தள்ளியவர்களாக, பின்வரும் இறைவசனத்தைக் கூறியவர்கள். ‘சத்தியம் வந்தது. அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்.
(அல் குர்ஆன் 17:80)
ஆகவே அநியாயத்திற்கு உள்ளானவர்களின் பிரார்த்தனைகளை அல்லாஹ் நிச்சயம் அங்கீகரிப்பான்.
கலாபூஷணம் யாழ் அஸீம்…