Monday, April 29, 2024
Home » இலங்கை மக்களின் நல்வாழ்வு, கல்வி மேம்பாட்டிற்கு பங்காற்ற எப்போதும் நான் தயாராகவுள்ளேன்
பாராட்டு நிகழ்வில் ஒளிப்படக்கலைஞர் ஜீவராஜ் தெரிவிப்பு

இலங்கை மக்களின் நல்வாழ்வு, கல்வி மேம்பாட்டிற்கு பங்காற்ற எப்போதும் நான் தயாராகவுள்ளேன்

by Gayan Abeykoon
November 15, 2023 1:07 am 0 comment

ண்டி இலக்கிய இனிய நண்பர்கள் குழுமத்தின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் மிகப்பிரபல்யமான ஒளிப்படக் கலைஞர் ஜீவராஜ் (ஜீவன்) அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கண்டி விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் எஸ். சிவஞானசுந்தரம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவரும் சமூகச் செயற்பாட்டாளருமான எஸ். பரமேஸ்வரன் கலந்து சிறப்பித்தார். இதில் மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம், பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ். விஜயச்சந்திரன், பேராதனை பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் எழுத்தாளர் கவிஞர் ரா. நித்தியானந்தன், ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் ஆர். பார்த்தீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

* இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதம அதிதி; இலட்சிய வாழ்க்கையின் எந்தத் துறையாக இருந்தாலும் உயர் இலக்கை அடைய முடியும். அந்த வகையில் ஒளிப்படக் கலைஞர் ஜீவன், தனது ஒளிப்படத்துறையின் மூலம் தனது முகவரியை அடையாளப்படுத்தியுள்ளார். அவர் இலங்கையில் வாழ்ந்து விட்டு எங்கேயோ கண்காணாத இடத்தில் கனடாவில் வாழ்ந்தாலும் ஒளிப்படத் துறையில் அதிக நாட்டம் கொண்டு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டதன் காரணமாகத்தான் நம் எல்லோர் மனதிலும் இன்னும் அவர் மறவாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் வெறுமனே ஒரு பல்கலைக்கழக பட்டதாரியாக மாத்திரம் இருந்து விட்டுச் சென்று இருந்தால் அவருடைய பெயர் இந்தளவுக்கு பிரகாசித்து இருக்க முடியாது. அவர் எடுத்துக் கொண்ட ஒளிப்படத் துறை அவரின் பெயரை ஓங்கச் செய்துள்ளது. அவருடைய கடின உழைப்பு இலங்கையில் மட்டுமல்ல கனடாவிலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

அந்த வகையில் எமது கண்டியில் உள்ள கலை இலக்கிய நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஒளிப்படத் துறையில் திறமை வாய்ந்த மாபெரும் கலைஞரைப் பாராட்டி கௌரவிப்பது நல்லதொரு விடயமாகும் என மேலும் தெரிவித்தார்.

*மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி. பி. சிவப்பிரகாரசம் உரையாற்றுகையில்; ஜீவன் என்னுடைய பல்கலைக்கழக நண்பர். ஜீவன் என்றால் எப்பொழுதும் ஒளிப்படக் கருவியோடுதான் இருப்பார். 1983 களில் உருவங்களைப் பதிவு செய்வதில் யாராவது இருந்திருப்பார்களா என்றால் எனக்குத் தெரியாது. அவர் அத்துறையில் நிறையப் பரிசில்கள் பெற்றிருந்தார். பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் படித்து இருப்பார்கள். அந்த 2000 பேருக்கும் ஜீவனைத் தெரியும். அவர்கள் ஜீவனிடம் இருப்பார்கள். நாங்கள் எங்களுடன் இருப்போமோ தெரியாது. ஆனால் நாங்கள் ஜீவனிடம் இருப்போம். அவருடைய கமராவில் ஒளிப்படக் கருவியினுள் இருப்போம். பேராதனைப் பல்கலைக்கழகத்தினுடைய அந்த இயற்கை அழகையும். அங்கு இருக்கக் கூடிய செயற்கையான செயற்பாடுகள் அல்லது விரிவுரையாளர்களுடைய செயற்பாடுகளை தன்னுடைய ஒளிப்படக் கருவிக்குள் உள்வாங்கி அதனை மேலும் பதிப்பித்து தருகின்ற விடயங்கள் எங்களுக்கு ஞாபகம் இருக்கின்றன. மூன்று அல்லது நான்கு வருடங்களாக அங்கே கல்வித் துறையில் ஈடுபட்டார். அவரை மலையக மண்ணுக்கு வரவழைத்துப் பாராட்டுவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் கல்முனை கிழக்கு மாகாணத்தில் பிறந்தாலும் கூட மலையகம் அவருக்கு அந்நியமான ஊரல்ல. அவர் மலையகத்தோடு ஒருங்கே கலந்து விட்டார் என தெரிவித்தார்.

* ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் ஆர். பார்த்தீபன் உரையாற்றும்போது;

ஜீவன் சிறந்த ஒளிப்படக் கலைஞர். அக்கால கட்டத்தில் ஒளிப்படக் கலைஞர்கள் ரொம்பக் குறைவு. ஒரு நல்ல ஆசிரியர். அவர் கம்பளை சாஹிராக் கல்லூரியில் கற்பித்தார். அவர் ஆசிரியராக இருந்து மாணவர் சமூகத்திற்குப் பெரும் பங்காற்றியிருக்கலாம் என்ற மனக் கவலை அவருக்கு இருக்கிறது.

வாழ்க்கையில் இறைவன்தான் தீர்ப்பு எழுதுவான். யாராக இருந்தாலும் அவர் எங்கு இருக்க வேண்டும். என்ன தொழில் செய்ய வேண்டும். எப்படி இருக்க வேண்டும். வாழ்க்கை ஒரு மாய இன்பம். மிகக் குறுகிய காலம் வாழப் போகின்றோம். இதில் மிகச் சிறந்தது எவை என்றால் அடுத்தவர்களைச் சந்தோசப்படுத்திப் பார்ப்பதுதான் மிகச் சிறந்தது. குறைந்தது அடுத்தவர்களுக்கு உதவி செய்ய முயுமா? செய்து விடுங்கள். ஒருவர் இறந்த பின் அவருக்காக புத்தகம் எழுதுவது, வாழ்த்துக் கவி பாடுவது என்பதில் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஜீவனோடு கதைத்துக் கொண்டிருக்கின்ற போது அவர் மக்களுக்கு நிறையச் செய்ய வேண்டும் என்ற நல்ல உள்ளம் இருக்கிறது.

*கண்டி விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய அதிபர் எஸ். சிவஞானசுந்தரம் உரையாற்றும் போது; ஒளவையார் பாடலில் கூறுவதைப்போல் ‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நா பழக்கம், வைத்த தொரு கல்வி மனப்பழக்கம். கொடையும் நற்பும் தயவும் பிறவிக் குணம்’ என்பார்கள். ஆகவே இங்கு ஜீவன் மூன்று விடயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளார். பழைய நட்புக்களைத் தேடி கனடாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து தன்னுடைய நட்பை மேலும் வலுப்படுத்தியது மட்டுமல்லாமல் சமூகப் பணிகளையும் ஆற்றி வருகிறார். இப்படிப்பட்ட சமூகப் பணிபுரிவோர்களைக் காண்பது மிக அரிது. அவர் எங்களுடைய பாடசாலைக்குள் நுழையும்போது இப்பாடசாலைக்கு ஏதாவது செய்வோம் என்று கூறினார். இவரும் தன்னுடைய சமூகத்திற்காகச் ஏதாவது செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இங்குள்ள நண்பர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இது வரவேற்கத்தக்க விடயம்.

* முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத் துறை விரிவுரையாளர், மலையக எழுத்தாளர் கவிஞர் ரா. நித்தியானந்தன் உரையாற்றும் போது; நாங்கள் மலையகம் 200 என்ற நிகழ்வில் ஜீவனைக் கௌரவிப்போம் என்று நாங்கள் தீர்மானத்திருந்தோம். அது தவிர்க்க முடியாத காரணத்தில் அது ஒத்தி வைக்கப்பட்டது. எனவே அப்படியான நிகழ்வை நடத்த முடியாமல் போய் விட்டதே என்ற ஆதங்கம் இருந்தமையின் காரணமாக எப்படியாவது நாங்கள் ஜீவனின் சிறப்பம்சங்களைப் பேசி பாராட்டி கௌரவித்து வழியனுப்பி வைக்க வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தமையினால் தான் அவசர அவசரமாக இந்த ஏற்பாட்டைச் செய்ய வேண்டி ஏற்பட்டது.

ஏனென்றால் அவர் மிகக் குறுகிய காலத்தில் கனடாவை நோக்கிச் சென்று விடுவார். அவருக்கும் எனக்கும் உறவு என்றால் 40 ஆண்டுகளைக் கொண்டது. என தெரிவித்தார்.

* பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் விஜயச்சந்திரன் உரையாற்றும் போது; ஜீவன் பல்கலைக்கழகத்தில் எல்லோர்களிடத்திலும் நற்பாகப் பழகக் கூடிய ஒருவர். அந்தக் காலத்தில் அவரை சிங்கள மாணவர்களாக இருந்தால் என்ன, முஸ்லிம் மாணவர்களாக இருந்தால் என்ன, எல்லா மாணவர்களுக்கும் அவரை நன்கு தெரியும். எல்லா நிகழ்வுகளிலும் அவர் முன்னிற்பார். அவர் கனடா சென்றிருந்தாலும் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த ஒருவர்.

* ஒளிப்படக் கலைஞர் எஸ் ஜீவராஜ் (ஜீவன்) ஏற்புரையாற்றும் போது;

நான் கனடாவுக்கு இடம்பெயர்ந்து சுமார் 30 வருடங்கள் ஆகின்றன. புகைப்படம் என்று பொதுவாக அழைப்பதில்லை. ஒளிப்படம் என்று சொல்வார்கள். ஏனென்றால் புகைப்படம் என்ற சொல் இல்லாமற்போய் இப்பொழுது ஒளிப்படம் என்று அழைக்கின்றார்கள். நான் புகைப்படம் எடுக்கின்ற காலப்பகுதி சுருள் நாடாவில் ஒளிப்படங்களை கழுவும் காலம். அப்பொழுது விரும்பின மாதிரி நாங்கள் படம் எடுக்க முடியாது. புகைப்படச் சுருள்கள் விலை உயர்ந்தவை. ஆகவே அவற்றைக் கவனமாகப் பார்த்துத்தான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும். இப்பொழுது எடுத்தவுடன் பார்க்கின்ற வசதி கூட இல்லை. எடுக்கும் போது முதல் கவனமாக எடுக்க வேண்டும். என்ன காட்சிகள் உள்ளடக்கப்பட வேண்டும். என்னென்ன காட்சிகள் உள்ளடக்கப்படக் கூடாது என்று இருக்கிறது. அதற்குரிய முறைப்படி எடுக்க வேண்டும். எவ்வாறு படம் எடுக்க வேண்டும் என்கின்ற பல விதிமுைறகள் இருக்கின்றன. அதற்கு ஏற்ற வகையில் எடுக்க வேண்டும். கனடாவில் சாதாரண ஜீவனாகவும் சமூக சேவை நிறுவனம் ஒன்றை இயக்குகின்ற ஜீவனாகத்தான் பார்க்கலாம். நான் கனடாவில் வாழ்ந்தாலும் எமது இலங்கை வாழும் எமது சமூகத்தின் தொப்புள் கொடி உறவுகளின் நல்வாழ்வுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் கல்வி மேம்பாட்டுக்காகவும் அயராது பாங்காற்ற தயாராகவுள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

✍︎  எஸ். வித்தியானந்தா   ✍︎

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT