2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (13 ஆம் திகதி) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நண்பகல் வேளையில் இவ்வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து அவர் உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமைப் பதவியை ஏற்ற பின்னர் சமர்ப்பிக்கும் இரண்டாவது வரவு செலவுத்திட்டம் இது. கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் இந்நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. இவ்வாறானதொரு நெருக்கடிக்கு அண்மைக்கால வரலாற்றில் இந்நாடு முன்னொரு போதும் முகம்கொடுத்ததில்லை. இந்நெருக்கடியின் பின்புலத்தில் நாட்டின் அரசியல் கொதிநிலையை அடைந்ததோடு, அன்றைய பிரதமரும் அவர் தலைமையிலான அரசாங்கமும் பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டதோடு, அன்றைய ஜனாதிபதியும் கூட தம் பதவியைத் துறந்தார்.
பொருளாதார நெருக்கடியின் தீவிர தாக்கத்தின் பின்னணியில் நாட்டின் தலைமையை ஏற்க எவரும் முன்வராத சூழலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்பதவியை ஏற்றார்.
ஆனால் அந்தச் சூழலில் நாட்டின் பணவீக்கமும், ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதியும் பெரிதும் அதிகரித்துக் காணப்பட்டது. எரிபொருள், எரிவாயு அடங்கலாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் பெரிதும் உயர்ந்திருந்தன. நாடு முகம்கொடுத்திருந்த அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதும் இடைநிறுத்தப்பட்டிருந்தது. எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக நாட்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் உள்ளாகி இருந்தனர்.
இவ்வாறான சூழலில் நாட்டின் தலைமையை ஏற்ற ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடியினால் நாடும் மக்களும் முகம் கொடுத்துவரும் அசௌகரியங்களையும் தாக்கங்களையும் குறைத்துக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். அந்தத் திட்டங்கள் குறுகிய காலப்பகுதிக்குள் பயனளிக்கத் தொடங்கியது. குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் அசௌகரியங்களும் தாக்கங்களும் கட்டம் கட்டமாக நீங்கலாயின. ஜனாதிபதி கடந்த வருடம் முன்வைத்த 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இதற்குப் பெரிதும் உதவியது. இந்நிலையில் பொருளாதார மறுமலர்ச்சிப் பாதையில் நாடு நம்பிக்கைதரும் வகையில் பிரவேசித்திருக்கிறது. கடந்த வருடத்தின் ஆரம்பப்பகுதியில் நிலவிய அசௌகரியங்களும் தாக்கங்களும் பெரும்பாலும் நீங்கியுள்ளன. கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்த போதிலும், குறுகிய காலப்பகுதிக்குள் நாடு மீட்சி பெற்று மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்திருக்கிறது.
அக்காலப்பகுதியில் நிலவிய மிகக் கடினமான பொருளாதார நெருக்கடி பெரும்பாலும் நீங்கியுள்ளது. நாடு பொருளாதார நெருக்கடி ஒன்றுக்கு முகம்கொடுத்ததா? என வினவப்படும் அளவுக்கு நிலைமை முன்னேற்றமடைந்துள்ளது. பங்களாதேசம் நாட்டிடம் பெற்று இருந்த வெளிநாட்டுக் கடன் மீளச்செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணிக் கையிருப்பு அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கூட உயர்ந்துள்ளது.
ஜனாதிபதி கடந்த வருடம் சமர்ப்பித்த கன்னி வரவு செலவுத் திட்டம், நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற பாரிய பங்களிப்பை நல்கியுள்ளது. அதன் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள அனுபவங்களின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வரவு செலவுத்திட்டம் அரச, தனியார் துறையினர் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அதேநேரம் ஒய்வூதியம் பெறுபவர்களின் கொடுப்பனவும் அதிகரிக்கப்படலாம் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
இவை இவ்வாறிருக்க, திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்டுள்ள நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கு தனியார் துறையினரின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. அதிலும் 14 இலட்சம் அரச ஊழியர்களைக் கொண்ட இந்நாட்டில் 80 இலட்சம் பேர் தனியார் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாவர். அதனால் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனியார் துறையினரின் ஒத்துழைப்பும் ஆதரவும் இன்றியமையாததாகும்.
இந்நிலையில் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பில் தனியார் துறையினரின் யோசனைகளையும் கருத்துக்களையும் ஜனாதிபதி கேட்டறிந்துள்ளார்.
ஆகவே இவ்வரவு செலவுத்திட்டம் நாட்டை துரிதமாகக் கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கக் கூடியதாக இருக்கும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்து. அதுவே நாட்டுக்கும் அவசியமானது.
அதனால் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்ப முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கப்பட வேண்டும். நாட்டை உண்மையாக நேசிக்கும் பிரஜைகளின் பொறுப்பும் அதுவேயாகும்.