Monday, April 29, 2024
Home » பொதுப்போக்குவரத்து கட்டமைப்பில் 2024 இல் தீவிர மாற்றங்கள் ஏற்படும்

பொதுப்போக்குவரத்து கட்டமைப்பில் 2024 இல் தீவிர மாற்றங்கள் ஏற்படும்

உலக போக்குவரத்து தின நிகழ்வில் அமைச்சர் பந்துல தெரிவிப்பு

by gayan
November 11, 2023 7:40 am 0 comment

இலங்கையின் முழுமையான போக்குவரத்துக் கட்டமைப்பிலும் பல தீவிர மாற்றங்களைக் கொண்டுவரும் ஒரு திருப்புமுனையாக எதிர்வரும் 2024ஆம் ஆண்டை மாற்ற வேண்டுமென்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்று உலக பொதுப் போக்குவரத்து தினத்தையொட்டி மாகும்புரவில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது, பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வது தொடர்பாக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகாமையுடன் இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்வு அமைச்சர் தலைமையில் ஆரம்பமானதுடன், பஸ்களில் விழிப்புணர்வு அறிவிப்புகளை காட்சிப்படுத்தும் நிகழ்வும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பயணிகள் போக்குவரத்து பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட மருத்துவ முகாம் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது. அத்துடன், மோட்டார் போக்குவரத்துத் துறையால் ஒரேநேரத்தில் காற்று மாசு விழிப்புணர்வுத் திட்டமும் செயற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

“நம் நாட்டிலும் உலகிலும் பெரும்பாலான பயணிகளின் போக்குவரத்துத் தேவைகளுக்கு பஸ்கள் மற்றும் ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்துச் சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன.

எதிர்காலத்தில் பயணிகள் போக்குவரத்தின் முன்னணி வழிமுறையாக மின்சார ரயில்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.

போக்குவரத்து தொடர்பான சர்வதேச மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், பாதுகாப்பான, நம்பகமான, திறமையான மற்றும் பயனுள்ள போக்குவரத்துச் சேவைக்காக மக்கள் மின்சார ரயில்களை நாடுவர்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்கள் மின்சார ரயில் திட்டத்தை நாடுகளிடையே ஊக்குவிப்பதற்கு விசேட கவனம் செலுத்தியுள்ளன. சீனாவை மையமாகக் கொண்ட ‘ஒரு பெல்ட் ஒரு சாலைத் திட்டம்’ போன்ற பல திட்டங்களின் கீழ் உலகின் பல நாடுகளை இணைக்கும் இத்தகைய மின்சார ரயில் அமைப்புகள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய 2050ஆம் ஆண்டினுள் மின்சார ரயில் சேவை உலகின் முக்கிய போக்குவரத்து சாதனமாக மாறும். அந்த வகையில், தற்போது ஒரு மின்சார ரயில் பாதையும் இல்லாத இலங்கையின் களனிவெளி ரயில் பாதையில், அவிசாவளையிலிருந்து கொழும்புவரையான 60 கிலோமீற்றர் தூரத்தை மாற்ற முயற்சித்து வருகிறோம். அத்துடன், இலங்கையில் தற்போதுள்ள மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்துக்கு மேலதிகமாக, ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பின் கீழ் எதிர்வரும் ஆண்டில் இலங்கையில் குறைந்தது மூன்று பல்வகை போக்குவரத்து நிலையங்கள் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடவத்தை பல்வகை போக்குவரத்து நிலையத்தின் பெரும் தொகை நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. அதை நிறைவு செய்யும் பணி அடுத்த ஆண்டினுள் நிறைவடையுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் உலக வங்கியின் உதவியுடன் கண்டி பல்வகை போக்குவரத்து நிலையத்தின் பணிகளை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. நீண்ட நாட்களாக இழுபறியிலிருந்த இந்தத் திட்டம், அடுத்த ஆண்டு தொடங்கப்படும். அத்துடன் கொழும்பு, கோட்டை ரயில் நிலையம், மத்திய பஸ் நிலையம், பஸ்தியன் மாவத்தை பஸ் நிலையம் ஆகிய இடங்களை இணைத்து கொழும்பு, கோட்டையின் பல்வகை போக்குவரத்து நிலையத்தை ஆரம்பிக்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தில் பெண்கள் துன்புறுத்தப்படுவதால், அச்சம் மற்றும் சந்தேகமின்றி பயணிக்க முடியாத நிலை போன்ற பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவதே இந்த ஆண்டு பொதுப் போக்குவரத்து தினத்தின் கருப்பொருளாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT