Saturday, May 11, 2024
Home » விலகுகிறார் மதீஷ பதிரண: சமீரவை அழைக்க வாய்ப்பு
உலகக் கிண்ணம்

விலகுகிறார் மதீஷ பதிரண: சமீரவை அழைக்க வாய்ப்பு

by damith
October 24, 2023 7:02 am 0 comment

வலது தோள்பட்டை காயத்துக்கு உள்ளாகி இருக்கும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண உலகக் கிண்ண போட்டியில் இருந்த நீக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

20 வயதான பதிரண உபாதை காரணமாக 10 நாட்கள் ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் இலங்கை கடைசியாக ஆடிய அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர் தனது பந்துவீசும் கையில் தொடர்ந்து வலியை உணரும் நிலையில் எதிர்வரும் போட்டிகளில் ஆடுவதில் சந்தேகம் நிலவி வருகிறது.

ஹைதராபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பின்னரே மதீஷ தனது வலது தோள்பட்டையில் வலியை உணர்ந்தார். இதனை அடுத்து அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவரின் தோள்பட்டையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதோடு 10 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது.

எனினும் அவரது நிலையில் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை என்றும் வலி இன்றி அவரால் இன்னும் பந்து வீசவோ அல்லது பந்தை எறியவோ முடியாமல் இருப்பதாகவும் அணி வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அவரை இலங்கைக் குழாத்தில் இருந்து விடுவிப்பதற்கு உலகக் கிண்ண தொழில்நுட்ப குழுவிடம் இலங்கை அணி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

பதிரண இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி ஆடிய முதல் இரு போட்டிகளிலும் பங்கேற்றபோதும் கிட்டத்தட்ட ஒருவருக்கு 10 ஓட்டங்கள் வீதம் விட்டுக்கொடுத்து மொத்தமாக 185 ஓட்டங்களை தாரைவார்த்ததோடு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இந்நிலையில் இலங்கை அணியில் மேலதிக வீரர்களாக காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர மற்றும் அனுபவ வீரர் அஞ்சலோ மத்தியூஸ் அழைக்கப்பட்டுள்ளனர். எனினும் பதிரணவுக்கு பதில் இவர்களில் யாரை அணியில் இணைப்பது என்பது பற்றி உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை அணியுடன் இணைந்த இந்த இருவரும் பெங்களூரில் நேற்று முதல் இலங்கை அணியுடன் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சை பலப்படுத்தும் வகையில் துஷ்மன்த சமீர இலங்கை குழாத்தில் இணைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அணி நிர்வாகத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை நெதர்லாந்துக்கு எதிராக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியின்போது பின்தொடை பகுதியில் உபாதைக்கு உள்ளான சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவுக்கு, இலங்கை அணி பெங்களூர் வந்த நிலையில் ஸ்கேன் சோதனை செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தீக்ஷன 10 ஓவர்களையும் வீசி 44 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். எனினும் அண்மைக் காலமாக அவருக்கு இருந்து வந்த வலது பின் தொடை பகுதியில் உள்ள காயமே மீண்டும் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் அண்மையில் நடந்த ஆசிய கிண்ண இறுதிப் போட்டியிலும் ஆடவில்லை.

இது அவர் உலகக் கிண்ணத்தில் தொடர்ந்து ஆடுவது பற்றி பெரும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

இதேநேரம் உபாதை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட அணித்தலைவர் தசுன் ஷானக்க தொடர்ந்தும் அணியுடன் இருந்து வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது ஷானக்கவின் முன் தொடை பகுதியில் உபாதை ஏற்பட்டது. அவர் உடல் தகுதிபெற மூன்று வாரங்கள் எடுத்துக்கொள்வதன் காரணமாக அவருக்கு பதில் இலங்கை அணியில் மேலதிக வீரராகச் சென்ற சாமிக்க கருணாரத்ன சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இலங்கை அணி உலகக் கிண்ணத்தில் தனது அடுத்த போட்டியில் எதிர்வரும் வியாழக்கிழமை (26) பெங்களூரில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT