Thursday, May 9, 2024
Home » சுற்றாடலுக்கு பொறுப்பான அரச நிறுவனங்களை மீள்கட்டமைக்க அரசாங்கம் தீர்மானம்

சுற்றாடலுக்கு பொறுப்பான அரச நிறுவனங்களை மீள்கட்டமைக்க அரசாங்கம் தீர்மானம்

- சர்வதேச கடற்கரை தூய்மை தினம்: நாடு முழுவதும் 14 கரையோர மாவட்டங்களை உள்ளடக்கி கடற்கரைகள், களப்புகள் சுத்தப்படுத்தப்படும்

by Rizwan Segu Mohideen
September 17, 2023 9:48 am 0 comment

சுற்றாடல் தொடர்பில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களை மீண்டும் மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் சூழலைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்டங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும் குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார்.

மேலும், சுற்றாடல் மாசடைவதைத் தடுத்து சுற்றாடலைப் பாதுகாக்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, செயலணியொன்றை நியமிக்கவுள்ளதாகவும், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான வேலைத்திட்டங்களைத் தயாரித்து அவற்றை நடைமுறைப்படுத்துவது மற்றும் கண்காணிப்பது இந்த செயலணியின் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

துறைமுக நகரின் செயற்கைக் கடற்கரையில் (Beach Plaza) நேற்று (16) முற்பகல் நடைபெற்ற கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

நேற்றைய சர்வதேச கடலோர தூய்மை தினத்தையிட்டும் (International Coastal Cleanup Day), நேற்று ஆரம்பமான கடல் வள பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டும், நாடு முழுவதும் உள்ள 14 கரையோர மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், அடையாளம் காணப்பட்ட கடற்கரைகள் மற்றும் களப்புகளை இலக்காகக் கொண்டு 66 இடங்களில் சுத்தம் செய்தல் நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கடலினுள் சுத்தப்படுத்தும் பணிகள், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையுடன் அந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

சாகல ரத்நாயக்கவும் கடற்கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் இணைந்துகொண்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சாகல ரத்நாயக்க,

சர்வதேச கடலோர தூய்மை தினம் மற்றும் கடல் வளப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கரையோரச் சூழல், நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்கள், ஆற்றங்கரைச் சூழல் ஆகியவை நமக்கு மிகவும் முக்கியமானவை. ஒரு புறம், ஒரு தீவு நாடாக, எமக்கு நீர் வளம் மிகவும் முக்கியமானது. மறுபுறம், சுற்றுலாத் துறையில் நங்கியிருக்கும் நாடு என்ற வகையில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கத் தேவையான சூழலை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும்.

மக்களிடையே மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறிப்பாக குழந்தைகளிடையே சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதுபோன்ற திட்டங்கள் மிகவும் முக்கியம். எனவே இதை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் எப்போதும் இவ்விடயங்கள் பற்றி கதைத்துக்கொண்டு மாத்திரமே இருந்தோம். எனவே, இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவது தான் மிகவும் முக்கியம்.

இது குறித்து செயற்படுவதற்கு, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட பல்வேற நிறுவனங்கள் உள்ளன. இது கடற்படையின் பொறுப்பு அல்ல என்றாலும், அவர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். இலங்கை சுற்றுலா சபையின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சுற்றுலா வலயங்கள் உள்ளன.

சூழல் தொடர்பான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த அரச நிறுவனங்களை மீண்டும் மறுசீரமைக்க நாம் தீர்மானித்துள்ளோம். அதற்காக ஒரு குழு நியமிக்கப்பட உள்ளது. இந்த மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர், தற்போதுள்ள சட்டங்களை வலுப்படுத்தவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதற்கு இணையாக ஜனாதிபதி, இதற்கான செயலணி ஒன்றை நியமிக்கவும் உள்ளார். வேலைத்திட்டங்களை தயாரித்தல், செயல்படுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்தல் அதன் பொறுப்பாகும்.

மக்களை முறையாகத் தெளிவுபடுத்துவதற்கும், நிலைபேறான திட்டங்களை செயல்படுத்தி சூழல் மாசடைவதைக் குறைப்பதற்கு நாம் இந்தத் திட்டங்களின் மூலம் எதிர்பார்க்கின்றோம்.

சூழல் நமக்கு மிகவும் முக்கியமானது. நாம் சூழலை பாதுகாக்காவிட்டால் அடுத்த தலைமுறை இந்த சுற்றுச்சூழலை இழக்க நேரிடும். மேலும், சூழலைப் பாதுகாப்பதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தின் நிலைத்தல் தன்மையை உறுதி செய்ய முடியும். அந்த அனைத்து பொறுப்புக்களையும் அரசாங்கத்திடம் மாத்திரம் ஒப்படைக்க முடியாது.
சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பு மக்களுக்கும் உள்ளது. அந்தப் பொறுப்பை மக்களுக்குத் தெளிவுபடுத்த சரியான வேலைத்திட்டம் இருக்க வேண்டும். எனவே, அந்தப் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற நாம் உறுதி பூண்டுள்ளோம்.

அதேபோன்று, குறைபாடுகளை தவிர்த்து நாம் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் மிகவும் முக்கியமானது என்றே கூற வேண்டும். மேலும், இந்த திட்டத்திற்கு கலைத்துறையை இணைத்துக் கொண்டிருப்பது மிகவும் சிறந்த போக்கு ஆகும். மேலும் இதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் பெரும் பலமாக அமையும். இந்த வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அசேல பி. ரெகவ, பொது முகாமையாளர் ஜகத் குணசேகர, உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் துறைமுக நகர் தனியார் நிறுவனத்தின் சுற்றாடல் ஆலோசகர் டபிள்யூ.ஏ.டி.டி. விஜேசூரிய மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT