Tuesday, May 21, 2024
Home » அமானா வங்கியின் “எனது எதிர்காலம், எனது கனவு” அகில இலங்கை கட்டுரைப் போட்டி

அமானா வங்கியின் “எனது எதிர்காலம், எனது கனவு” அகில இலங்கை கட்டுரைப் போட்டி

- ஜுலை 31 இறுதித் திகதி

by Rizwan Segu Mohideen
July 15, 2023 11:38 am 0 comment

இளம் எழுத்தாளர்களுக்கு தமது கனவுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் வகையில், அமானா வங்கி “எனது எதிர்காலம், எனது கனவு” எனும் தலைப்பில் அகில இலங்கை ரீதியான கட்டுரைப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. கல்வி அமைச்சின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் இந்தப் போட்டி, 8 முதல் 16 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களின் சிந்தனைகளை புத்தாக்க ரீதியில் வெளிக்கொண்டு வரும் வகையில் அமைந்துள்ளது.

தமது எதிர்கால இலட்சியக் கனவுகள் தொடர்பில் தமது சிந்தனைகளை வெளிப்படுத்தி இந்தக் கட்டுரைகளை, தமிழ், சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் எழுதலாம். இரு வயதுப் பிரிவுகளுக்கமைய சொற்களின் எண்ணிக்கை மாறுபடும். 8-12 வயதுக்குட்பட்ட பிரிவைச் சேர்ந்த சிறுவர்கள் 250 சொற்கள் வரையிலும், 13-16 வரையான வயதைச் சேர்ந்தவர்கள் 400 சொற்கள் வரையிலும் கட்டுரைகளை எழுத ஊக்குவிக்கப்படுகின்றனர்.

சுயதிறமையை வெளிப்படுத்த வாய்ப்பை வழங்குவதாக மாத்திரமன்றி, பெறுமதி வாய்ந்த பரிசுகளை வெற்றியீட்டும் வாய்ப்பை வழங்குவதாகவும் இந்தப் போட்டி அமைந்துள்ளது. மொழி மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் ஆறு பிரிவுகளில் சிறந்த கட்டுரைகளுக்கு வெகுமதிகள் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவுகளிலும் முதலிடம் பெறும் 6 வெற்றியாளர்களுக்கு ரூ. 50,000 பெறுமதியான பணப் பரிசுகள் வழங்கப்படும். இரண்டாமிடத்தைப் பெறுபவர்களுக்கு ரூ. 30,000 பரிசு வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு பிரிவுகளிலும் ஐந்து சிறந்த கட்டுரைகளுக்கு ரூ. 10,000 வீதம் வழங்கப்படும். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் இந்த நடுவர் குழாமில் உள்ளடங்கியிருப்பார்கள்.

இளம் எழுத்தாளர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் இந்தத் திட்டம் தொடர்பாக அமானா வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல்கள் தலைமை அதிகாரி அசீம் ராலி கருத்துத் தெரிவிக்கையில், “சகல இளம் எழுத்தாளர்களுக்கும், தமது சிந்தனையை வெளிப்படுத்தி, தம் கனவு உலகில் காணப்படும் அம்சங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. “எனது எதிர்காலம், எனது கனவு” எனும் தலைப்பில் அகில இலங்கை கட்டுரைப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இளம் வயதினரின் புத்தாக்க திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சக சிறுவர்களையும் இந்தப் போட்டியில் பங்கேற்கச் செய்யுமாறு சகல பெற்றோர்களிடமும் கோருகின்றோம். இன்றே உங்கள் எதிர்காலக் கனவுகளை ஒரு கடதாசியில் எழுதி எமக்குக் கிடைக்கச் செய்யுங்கள். உங்கள் ஆக்கங்களைக் காண நாம் ஆவலுடன் இருக்கின்றோம்.” என்றார்.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு, இளம் எதிர்பார்ப்புகள் நிறைந்த எழுத்தாளர்கள் தமது கட்டுரைகளை 2023 ஜுலை 31ஆம் திகதிக்கு முன்னதாக, மின்னஞ்சல் ஊடாக [email protected] எனும் முகவரிக்கும், தபால் மூலமாக 486, காலி வீதி, கொழும்பு 3 எனும் முகவரிக்கும், WhatsApp தகவல் ஊடாக 0711756756 எனும் இலக்கத்துக்கும் அல்லது அமானா வங்கியின் எந்தவொரு கிளையிலும் நேரடியாக விஜயம் செய்து கையளிக்கவும் முடியும். சமர்ப்பிக்கும் போது ஆக்கத்தை எழுதியவரின் முழுப் பெயர், பாடசாலை, பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், முகவரி ஆகியவற்றுடன் பெற்றோர்/பாதுகாவலரின் பெயர் மற்றும் கையொப்பம் ஆகியனவும் அடங்கியிருக்க வேண்டும். வங்கியின் ஹொட்லைன் இலக்கமான 011 7 756756 உடன் தொடர்பு கொண்டு அல்லது அருகாமையிலுள்ள வங்கிக் கிளைக்கு விஜயம் செய்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT