Saturday, May 11, 2024
Home » காத்தான்குடி கோட்டக் கல்வி அலுவலர் பதவி சர்ச்சை; மாகாண கல்விச் செயலாளர் விளக்கம்

காத்தான்குடி கோட்டக் கல்வி அலுவலர் பதவி சர்ச்சை; மாகாண கல்விச் செயலாளர் விளக்கம்

- ஆளுநர் செந்தில் தொண்டமானின் நடவடிக்கைக்கு கிழக்கு முஸ்லிம் அமைப்புகள் பாராட்டு

by Rizwan Segu Mohideen
July 15, 2023 12:36 pm 0 comment

காத்தான்குடி கோட்டக் கல்வி அலுவலகர் பதவி வெற்றிடத்துக்கு தகுதியுடைய ஒருவர் நியமிக்கப்பட்ட விடயம் தொடர்பான சர்ச்சை தொடர்பில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க விளக்கமளித்துள்ளார்.

காத்தான்குடி கோட்டக் கல்வி அலுவலகர் பதவி வெற்றிடம் ஏற்பட்டிருந்த நிலையில், அந்த பதவிக்கு இலங்கை கல்விச் சேவை தரம் 3 (SLEAS GRADE iii) தகுதியுடையவர்கள் இல்லாமையால், தற்காலிக அதிகாரியாக இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 (SLPS GRADE i) தகுதியை கொண்ட M.M. அலாவுதீன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இலங்கை கல்விச் சேவை தரம் 3 (SLEAS GRADE iii) நிறைவு செய்திருந்த A.G. மொஹமட் ஹக்கீமுக்கு கோட்டக் கல்வி அலுவலகர் நியமனம் தற்போதைய கல்வி அமைச்சினால் அண்மையில் வழங்கப்பட்டது.

எனினும் அமைச்சர் நசீர் அஹமட், தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 (SLPS GRADE 1) தகுதியுடையவரை தொடர்ந்தும் இந்த பதவியில் இருக்க வேண்டும் எனவும் இலங்கை கல்விச் சேவை தரம் 3 (SLEAS GRADE iii) நிறைவு செய்தவருக்கு கோட்டக் கல்வி அலுவலகர் நியமனம் வழங்க கூடாது எனவும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் குறித்த விடயம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டமைக்கமைய, ஆளுநர் செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுடையவருக்கு இந்நியமனம் வழங்கப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு எதிராக சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் முன்வைத்த கோரிக்கையை உடனடியாக அமுல்படுத்துமாறு அமைச்சர் தொடர் அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், அதற்கமைய, கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்ததாகவும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், காத்தான்குடி கோட்டக் கல்வி அலுவலகர் பதவி வெற்றிடத்துக்கு தகுதியுடைய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்த சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு எதிராகவும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு ஆதரவாகவும் முஸ்லிம் அமைப்புகள் கருத்துகளை வெளியிட்டுள்ளன.

இந்த விடயத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமானால் எடுக்கப்பட்ட நடவடிக்கையை அந்த அமைப்புக்கள் வரவேற்றுள்ளன.

குறித்த நியமனம் காத்தான்குடி கல்வி வலையத்திற்கு காத்திரமான கல்வி அபிருத்திக்கு வழிவகுத்துள்ளதாகவும், குறித்த முஸ்லிம் அமைப்புகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT