பாகிஸ்தானில் கடும் உணவு பாதுகாப்பின்மை அச்சுறுத்தல்

2022 இல் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக பாகிஸ்தானில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா. சபையின் முகவர் நிறுவனங்களான உலக உணவுத் திட்டமும் உணவு மற்றும் விவசாய அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தீவிர உணவுப் பாதுகாப்பின்மை தொடர்பான முன்னெச்சரிக்கைகள்’ என்ற தலைப்பில் இவ்வருடத்தின் (2023) ஜுன் முதல் நவம்பர் வரையான காலப்பகுதியை உள்ளடக்கி இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் 30 பில்லியன் ரூபா பெறுமதியான பொருளாதார இழப்புக்களை அந்நாடு சந்தித்துள்ளது. குறிப்பாக இவ்வெள்ளத்தினால் ஏற்பட்ட கால்நடைகளின் இழப்புகள் உணவு உற்பத்தியிலும் வாழ்வாதாரத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேநேரம் உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு மத்தியிலும் அரச கடன் அதிகரித்து வருவதால் நிதி நெருக்கடியையும் தீவிரமடையச் செய்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு கையிருப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும், நாணயப் பெறுமதி வீழ்ச்சியும் எரிசக்தி மற்றும் முக்கிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான திறன்களைக் குறைவடையச் செய்துள்ளன. அத்தோடு பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுத்துள்ளன. இவை உணவு பாதுகாப்பின்மையும் போஷாக்கின்மையும் தீவிரமடைய வழிவகுக்கும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...