முரண்பாடு தீர்வு மத்தியநிலையம் ஒன்றை நிறுவ, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மற்றும் சர்வதேச ADR மையம் ஒன்றிணைவு

கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு, சட்டப்பூர்வ தேவைகளுக்கு இணங்க கொழும்பு துறைமுக நகருக்குள் சுயாதீனமான சர்வதேச வர்த்தக முரண்பாடுகள் தீர்வு மையத்தை நிறுவுவதற்கு International ADR Centre (IADRC) உடன் அண்மையில் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்தை உலகளாவிய ரீதியில் போட்டியிடும் வர்த்தக மையமாக உலகெங்கிலும் பிரபலப்படுத்தும் முயற்சியில் இது ஒரு முக்கியமான படியாகும்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் 62ஆவது பிரிவின்படி, மேற்படி ஆணைக்குழுவிற்கும் கொழும்பு துறைமுக நகரத்தில் வர்த்தகம் செய்ய அங்கீகாரம் பெற்ற நபர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச மட்டத்தில் வர்த்தக முரண்பாடுகள் தீர்வு மையத்தை நிறுவுவதற்கு ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை வர்த்தக சம்மேளனம் (Ceylon Chamber of Commerce – CCC) வணிக சட்டம் மற்றும் நடைமுறை வளர்ச்சிக்கான நிறுவனம் (Institute for the Development of Commercial Law and Practice - ICLP) ஆகியவற்றுக்கு இடையே ஒரு கூட்டாண்மையாக செயல்படும் IADRC நிறுவனம், தற்போது மத்தியஸ்தர்கள் மற்றும் தலையீட்டாளர்களுக்கு பயிற்சி உள்ளிட்ட முரண்பாடுகளைத் தீர்ப்பது தொடர்பான சேவைகளை வழங்குவதில் இது ஈடுபட்டுள்ளது. அத்துடன் முரண்பாடுகளைத் தீர்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு நிறுவன சட்ட விதிகளையும் கொண்டுள்ளது. IADRC இன் கொழும்பு துறைமுக நகர அலுவலகம் தற்போது உலக வர்த்தக மையம், 22ஆவது மாடி, கிழக்கு கோபுரம், எச்செலோன் சதுக்கம், கொழும்பு 01 இல் செயற்பட்டு வருகின்றது. கொழும்பு துறைமுக நகரத்துடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் எதிர்காலத்தில் அந்த அலுவலகம் அங்கு நிறுவப்படவுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மட்டுமே கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீட்டு நடவடிக்கைகளை எளிதாக்கும் அதிகாரம் பெற்ற ஒரேயொரு அதிகாரசபை என்பதோடு, இவ்வாறான நடவடிக்கைகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்த முடியும் என்பதாலும், இப்பிராந்தியத்தில் சேவை ஏற்றுமதி மையமாக இலங்கை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் எனவும் ஆணைக்குழு நம்புகிறது.

இந்த கூட்டாண்மைக்கு ஏற்படுத்துவதற்காக, நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சு, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகிய அமைச்சுகளின் பாரிய ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...