IMFஇன் உதவி முழுமை பெற ஊடகங்களின் ஆதரவு அவசியம்

  • ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

பேதங்களை மறந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும் எனவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் கிடைக்கப்பெறும் நிதி மூலம் முதலாவது எமது நாட்டு பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டும். அதன் பின்னர் வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்று உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவித்து சுற்றுலாத்துறையையும் மேம்படுத்த வேண்டும்.

உண்மையில் பொருளாதாரத்தில் மிகுந்த பின்னடைவை கண்டுள்ள எமது நாட்டிற்கு, இது ஒரு ஆரம்ப கட்டமே. அடுத்தடுத்து நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தி கட்டம் கட்டமாக வெற்றியடைய வேண்டும். அதற்கு ஊடகங்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு அவசியம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்தார். நாட்டில் உள்ள ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களை சந்தித்து உரையாடிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். நமது நாட்டின் எதிர்காலம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளிலேயே தங்கியுள்ளது. எனவே அதனை, அது கிடைப்பதை நாங்கள் புறந்தள்ளி செயல்படக்கூடாது.

எப்படியாவது அதில் முழுமையான வெற்றியைக் காண வேண்டும். சில ஊடகங்கள் சர்வதேச நாணயத்திடம் நாம் பெறும் கடன் தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுகின்றன. அது ஆரோக்கியமானது இல்லை. நாட்டிற்கு நன்மை தரும் இந்த விடயத்திற்கு அனைத்து ஊடகங்களும் பேதங்களை மறந்து தமது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு கூடி இருந்த ஊடக நிறுவன பிரதானிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். இதுவரை காலமும் நாங்கள் கடந்த கால கசப்பான செயற்பாடுகளை மறந்து விட வேண்டும். இனியும் விதண்டாவாதம் பேசாது அடுத்த கட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்றம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டரீதியான அவசியமில்லாத போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியையும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


Add new comment

Or log in with...