இலங்கை அணியின் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்

- டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கு முன்னேற 2 - 0 என வெல்ல வேண்டும்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (09) அதிகாலை 3.30 மணிக்கு கிரைஸ்சேர்ச்சில் ஆரம்பமாகிறது.

உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற எதிர்பார்த்திருக்கும் இலங்கை அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் முக்கியமானதாக உள்ளது. இந்த வாய்ப்பை பெறுவதற்கு அடிப்படையில் இலங்கை அணி இந்த டெஸ்ட் தொரை 2–0 என முழுமையாக வெல்வது அவசியமாகும்.

எனினும் உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் அஹமதாபாத்தில் இன்று ஆரம்பமாகும் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டியும் தீர்க்கமாக உள்ளது. ஏற்கனவே அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் நிலையில் இலங்கை அணி அந்த வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு இந்தப் போட்டியில் ஆஸி. அணி போட்டியை வெல்வது அல்லது சமநிலை செய்வது அவசியமாகும்.

“(உலக டெஸ்ட் சம்பியன்சிப்) இறுதிப் போட்டிக்கு முன்னேறவே நாம் அனைவரும் எதிர்பார்த்துள்ளோம். என்றாலும் மற்றைய போட்டிகளில் எம்மால் தாக்கம் செலுத்த முடியாது.

எமக்கு எதிரில் இருக்கும் போட்டிகளை மாத்திரமே எம்மால் கட்டுப்படுத்த முடியும். அதனால் இரண்டு போட்டிகளில் வெல்வதற்கு முன்னால், எமக்குக் கிடைக்கின்ற முதல் போட்டியில் நாம் வெல்ல வேண்டும். அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியே நாம் பேச வேண்டும்” என்று இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த டெஸ்ட் தொடருக்காக இலங்கை அணி தாய் நாட்டில் முழு தயார்நிலையுடனேயே நியூசிலாந்து புறப்பட்டுச் சென்றது. இலங்கை கிரிக்கெட் சபை நடத்திய தேசிய சுப்பர் லீக் நான்கு நாள் போட்டித் தொடர் மற்றும் நியூசிலாந்து சூழலுக்கேற்ப புதிதாக புனரமைக்கப்பட்ட ரதெல்ல மைதானத்தில் ஒரு வார பயிற்சி முகாமுக்குப் பின்னரே நியூசிலாந்து பயணித்தது.

எனினும் நியூசிலாந்து சென்றிருக்கும் இலங்கை அணியின் பந்துவீச்சு குழாம் போதிய அனுபவம் அற்றதாக உள்ளது. விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித்த, அசித்த பெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜயசூரி ஆகியோர் முறையே 17, 13, ஏழு மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளிலேயே ஆடியுள்ளனர்.

எனினும் துடுப்பாட்ட வரிசையில் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் மற்றும் குசல் மெண்டிஸ் போன்ற அனுபவ வீரர்கள் உள்ளடங்குகின்றனர். தவிர ஓஷத பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா மற்றும் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்லவும் துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்கின்றனர்.

இங்கிலாந்துக்கு எதிராக அண்மையில் முடிவடைந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியை ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டி தொடரை 1–1 என சமநிலை செய்த உத்வேகத்துடனேயே நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளது. கேன் வில்லியம்சன் முதற்கொண்டு நியூசிலாந்து துடுப்பாட்ட வரிசையும் அணித் தலைவர் டி செளதி முதற்கொண்டு அதன் பந்துவீச்சு வரிசையும் பலமாக இருக்கும் நிலையில் சொந்த மைதானத்தில் ஆடும் சாதகமான சூழலிலேயே நியூசிலாந்து இந்த டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது.

1983 தொடக்கம் இலங்கை அணி நியூசிலாந்தில் ஒன்பது டெஸ்ட் தொடர்களில் ஆடியிருப்பதோடு 1995 ஆம் ஆண்டு நடந்த தொடரில் மாத்திரம் 1–0 என வெற்றியீட்டியது.

இன்றைய போட்டி நடைபெறும் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக அமையும் என்றபோதும் முதல் இரு நாட்களிலும் மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கே ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்புகள்

  • இலங்கை அணி நியூசிலாந்து மண்ணில் ஆடிய 19 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் மாத்திரமே வெற்றியிட்டியுள்ளது. கடைசியாக 2006 ஆம் ஆண்டு அங்கு வெற்றியீட்டிய இலங்கை அணி அதன்பின் ஆடிய ஆறு டெஸ்ட்களில் ஐந்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
  • இம்முறை உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவத்தில் நியூசிலாந்து அணி ஒரு டெஸ்ட் தொடரில் கூட வெல்லவில்லை. கடைசியாக அந்த அணி 2021 ஆரம்பத்திலேயே சொந்த மைதானத்தில் டெஸ்ட் தொடர் ஒன்றில் வெற்றியீட்டி இருந்தது.
  • கேன் வில்லியம்சன் இன்னும் எட்டு ஓட்டங்களை பெற்றால் இலங்கைக்கு எதிராக 1000 டெஸ்ட் ஓட்டங்களை பூர்த்தி செய்வார். இதற்கு முன்னர் அவர் இந்த மைல்கல்லை பாகிஸ்தானுக்கு எதிராக மாத்திரம் பெற்றுள்ளார்.
  • இலங்கை துடுப்பாட்ட வீரர்களில் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயற்பட்டவராக அஞ்சலோ மத்தியூஸ் உள்ளார். கடந்த முறை அவர் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நான்கு இன்னிங்ஸ்களிலும் முறையே 83, ஆட்டமிழக்காது 120, ஆட்டமிழக்காது 33 மற்றும் ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களை பெற்றார். நியூசிலாந்தில் அவரது ஓட்ட சராசரி 55.8 ஆகும்.

Add new comment

Or log in with...