முட்டை தேவையை நிறைவேற்றுவதில் ஆக்கபூர்வமான தீர்மானம் அவசியம்

நாடு முகம்கொடுத்துள்ள பொருளாதார சவால் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் துறைகளில் கோழிவளர்ப்பு பண்ணைத் தொழில் துறையும் ஒன்றாகும். இது இந்நாட்டில் கால்நடை வளர்ப்பு தொழில்களில் ஒன்றாகவும் வீட்டுக் கைத்தொழில் தொழிலாகவும் விளங்கி வருகிறது. ஆனாலும் இதனை பாரிய மற்றும் நடுத்தர அளவிலான பண்ணைக் கைத்தொழிலாக முன்னெடுப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

இந்நாட்டுக்கு தேவையான கோழி இறைச்சியையும் கோழி முட்டையையும் இத்துறையினர் ஊடாகவே இந்நாடு இற்றை வரையும் பெற்றுக் கொள்கிறது.அந்த வகையில் 2021 ஆண்டில் மாத்திரம் 2934 மில்லியன் முட்டைகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யபட்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஆனாலும் கடந்த ஆண்டில் (2022) நாடு முகம் கொடுத்த பொருளாதார நெருக்கடியின் விளைவாக கோழித்தீவனம், அதற்கான மருந்துப் பொருட்கள் மற்றும் பராமரிப்பு செலவு என்பவற்றின் செலவுகள் பெரிதும் அதிகரித்துள்ளன. அத்தோடு பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் பாதிப்புகளும் தொடர்ந்தும் நீடித்த வண்ணமுள்ளன.

இந்நிலையில் கோழித் தீவனத்தினதும் அதனை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களதும் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தினர் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை கோழித் தீவனம், கோழிகளுக்கான மருந்துப் பொருட்கள் உட்பட பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளதால் இத்தொழிலில் ஈடுபடுவதை சிலர் கைவிட்டும் உள்ளனர்.

இதன் விளைவாக தற்போது நாளொன்றுக்கு 30 இலட்சம் முட்டைகளுக்கான பற்றாக்குறை நாட்டில் நிலவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முட்டையின் விலையை அதிகரிப்பதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் அதற்கு அரசு இடமளிக்கவில்லை. முட்டைக்கான விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளன. இதனை மீறி முட்டையை அதிகரித்த விலைக்கு விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

இவ்வாறான சூழலில் பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழு (கோப்) கோழி வளர்ப்புத் துறை மற்றும் நாட்டின் முட்டைத் தேவை என்பன குறித்து கவனம் செலுத்தியுள்ளது. கோழி வளர்ப்புத் துறையைப் பாதுகாத்தல், பாவனையாளர்களுக்கு நியாய விலையில் முட்டையை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட நான்கு விடயங்கள் குறித்து இக்குழு அதிக கவனம் செலுத்தி இருக்கின்றது.

இந்த அடிப்படையில் பாவனையாளர்களுக்கு முட்டையை நியாய விலையில் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் விலைச்சூத்திர முறையொன்றை அறிமுகப்படுத்துவது குறித்து கமத்தொழில் மற்றும் வர்த்தக அமைசுசுக்களின் செயலாளர்கள் யோசனையொன்றை கோப் குழுவில் முன்வைத்துள்ளனர். ஆனால் முட்டைக்கு விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதில் நிலவும் சிக்கில்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளன. அதனால் இவ்விலைச்சூத்திர முறையை மீளாய்வு செய்யுமாறு பணிப்புரை விடுத்த கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, 'கோழிப்பண்ணைத் துறையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

உண்மையில் இது நியாயமான அறிவுறுத்தலாகும். உள்நாட்டின் முட்டைக்கான கேள்வி நிறைவேற்றப்படுவது அவசியம். ஏனெனில் முட்டையானது மனித ஆரோக்கியத்திற்கு அவசியமான போஷாக்கை வழங்கும் முக்கிய பொருட்களில் ஒன்றாக இருக்கின்றது.

ஆனால் கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஹேமாலி கொத்தலாவல, 'இந்தியாவில் தொடர்ச்சியாக பறவைக் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக அங்கிருந்து முட்டை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க முடியாது' என்றும் கூறியுள்ளார். 2021 முதல் 2022 செப்டம்பர் வரையும் ஐரோப்பாவில் 2500 பேர் பறவைக் காய்ச்சல் நோய்க்கு உள்ளாகியுள்ளனர். இந்தியாவிலும் 2006 முதல் அவ்வப்போது பறவைக் காய்ச்சல் பதிவாகி வருகிறது' என்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளார்.

அதனால் முட்டை இறக்குமதி தொடர்பில் பறவைக்காய்ச்சல் குறித்தும் கவனம் செலுத்தி தீர்மானம் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது. ஆகவே நாட்டின் முட்டை தேவையையும் உள்நாட்டு கோழி வளர்ப்பு துறையினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு தீ்ர்மானங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்விடயங்களில் உரிய கவனத்தைச் செலுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் தவறலாகாது. அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.


Add new comment

Or log in with...