உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தீர்ப்பு: மைத்திரி உள்ளிட்ட ஐவரும் அடிப்படை உரிமை மீறல்

- மைத்திரிக்கு ரூ. 100 மில்லியன் உள்ளிட்ட ஐவருக்கும் நட்டஈடு விதிப்பு
- அரசாங்கத்திற்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு

போதிய புலனாய்வு தகவல் கிடைத்தும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியதன் மூலம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (12) தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வு பிரிவு பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவு பிரதானி சிசிர மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின் தீர்ப்பிலேயே உயர் நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், கத்தோலிக்க மதகுருமார்கள் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த 12 மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 2 வருடங்களாக இடம்பற்ற விசாரணைகளின் பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலாத்துஐற வர்த்தகரான ஜனத் விதானகே மற்றும் சரத் இத்தமல்கொட உள்ளிட்ட மூன்று கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் ஷங்ரிலா குண்டுத் தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணி மோதித ஏக்கநாயக்க ஆகியோர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவருக்கும் உயர் நீதிமன்றம் இன்று (12) இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு ரூ. 100 மில்லியன் அபராதம் விதித்துள்ள உயர் நீதிமன்றம், அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானி அதன் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு தலா ரூ. 75 மில்லியன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவுக்கு ரூ. 50 மில்லியன் ரூபாய் என உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் தேசிய புலனாய்வு பிரிவு பிரதானி சிசிர மெண்டிஸுக்கு ரூ. 10 மில்லியன் நட்ட ஈடு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 இலட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 5 இலட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசாங்கத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் குறித்த இழப்பீடுகளை இன்றிலிருந்து 6 மாதங்களுக்குள் செலுத்த வேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் அறிவித்துள்ளது.

அத்துடன், அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்ற தீர்ப்பு

PDF icon sc_fr_163_2019.pdf (837.26 KB)

PDF File: 

Add new comment

Or log in with...