தலையில் தாக்கப்பட்டதாலேயே கெபிதிகொல்லாவ சார்ஜெண்ட் மரணம்

- பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு
- கைதான 16 சந்தேகநபர்களில் ஒருவர் விடுவிப்பு

கெபிதிகொல்லாவ பொலிஸ் நிலைய பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் இதுவரை 16 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர்  குற்றச்செயலுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர் அல்ல என்பது தெரியவந்ததன் காரணமாக அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேள, ஏனைய 15 சந்தேகநபர்களில் 14 சந்தேகநபர்கள் நேற்று (02) கெபிதிகொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களில் 13 சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதோடு, மற்றைய சந்தேகநபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்றுமொரு சந்தேகநபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்தாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த பொலிஸ் சார்ஜெண்ட் தொடர்பான பிரேத பரிசோதனை நேற்றையதினம் (02) அநுராதபுரம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் நடத்தப்பட்டுள்ளதுடன், குறித்த பிரேத பரிசோதனை அறிக்கைக்கு அமைய, பொலிஸாரின் தலையில் மீதான பலத்த அடி காரணமாக, மூளை மற்றும் மண்டையோட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (31) கடமையில் இருந்த வேளையில் உயிரிழந்த குறித்த பொலிஸ் சார்ஜெண்ட், உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...