அற்ப நலன்களை எதிர்பார்த்து உண்மைக்கு புறம்பான பிரசாரம்

தற்போது நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இது வெளிப்படையான உண்மையாகும். இந்நெருக்கடியின் விளைவாக நாடும் மக்களும் பலவிதமான அழுத்தங்களையும் தாக்கங்களையும் எதிர்கொள்ளும் நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது. 

இந்நெருக்கடி மக்களுக்கு சுமையாகவும் அழுத்தமாகவும் அமைவதைக் குறைத்து தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அத்தோடு இப்பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கான முயற்சிகளும் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. அதன் பிரதிபலன்களும் மக்களுக்கு கிடைக்கப்பெற  ஆரம்பித்து விட்டன. 

இந்த நிலையில் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்படுவது ஒவ்வொருவரும் பொறுப்பாகும். இப்பொருளாதார நெருக்கடிச் சூழலைப் பயன்படுத்தி அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான முயற்சிகளும் முன்னெடுக்கப்படவே செய்கின்றன. அவற்றின் ஊடாக அற்ப இலாபங்களை அடைந்து கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நிமித்தம் உண்மைக்குப் புறம்பான விஷமப் பிரசாரங்களும் அவ்வப்போது முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வாறு முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் ஒன்றாக, அரசாங்க ஊழியர்களின் அடுத்தமாத சம்பளத்தைக் குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியும் அமைந்துள்ளது.  

இவ்விடயம் அரசாங்க ஊழியர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனாலும் நாடும் மக்களும் தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பலவிதமான அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ள சூழலில், அவ்வாறானதொரு தீர்மானத்தை அரசாங்கம் எடுக்குமா என்பதே பெரும் கேள்விக்குரிய விடயம். அவ்வாறான ஒரு நடவடிக்கையை முன்னெடுக்கும் போது மக்கள் மேலும் அசௌகரியங்களுக்கு உள்ளாவர். இதனை அறியாததல்ல அரசாங்கம். 

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களதும் விலைகள் பெரிதும் அதிகரித்துள்ளன. இதன் விளைவாகவே பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள் மக்களுக்கு சுமையாக அமைவதைக் குறைத்து தவிர்ப்பதில் விஷேட கவனம் செலுத்தப்பட்டு இருக்கின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

ஆகவே அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்பது தவறான செய்தி என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது. அச்செய்தியை நம்பவும் அவர்கள் தயாராக இல்லை.  

இவ்வாறான சூழலில் நிதி இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டியவும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் பின்வருமாறு குறிப்பிட்டு இருக்கின்றார்,  

'அரசாங்க ஊழியர்களின் அடுத்தமாத சம்பளம் குறைக்கப்பட உள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரசாரம் மற்றும் செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை' என்று சுட்டிக்காட்டியுள்ள இராஜாங்க அமைச்சர், 'இது தொடர்பில் அரசாங்கம் எதுவிதத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை' என்றும் 'சில தரப்பினர் திட்டமிட்டு மேற்கொள்ளும் உண்மைக்குப் புறம்பான பிரசாரம் இது' என்றும் 'அரச ஊழியர்களின் தொழில் உரிமையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அரச ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை தம் பொறுப்பாகக் கருதி அரசாங்கம் செயற்படுவது வெளிப்படையான உண்மை. தற்போதைய பொருளாதார நெருக்கடிச் சூழலில் உண்மைக்கு புறம்பான பிரசாரங்களை முன்னெடுப்பதன் ஊடாக நாடும் மக்களும் தாக்கங்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாவர் என்பதும் மறைக்க உண்மையாகும். அதன் விளைவாக தற்போதைய நெருக்கடி மேலும் அதிகரிக்கவே செய்யும்.  

அதேநேரம் இவ்விதமான பிரசாரங்களின் உண்மைத் தன்மையையும் பின்புலத்தையும் மக்கள் அறியாதவர்கள் அல்லர். அதன் விளைவாகவே இப்பிரசாரம் தொடர்பில் பெரும்பாலானவர்கள் பெரிதாக கண்டு கொள்ளாத நிலைமை காணப்படுகிறது.  

 ஒரு தேசியப் பிரச்சினையாக விளங்கும் இப்பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் பொறுப்புணர்ந்து செயற்படுவது மிகவும் அவசியம். இதைவிடுத்து மக்களைத் தூண்டிவிடும் வகையில் செயற்படுவது நாட்டுக்கோ மக்களுக்கோ நன்மைகளைப் பெற்றுக் கொடுக்காது. உண்மைக்கு புறம்பான விஷமப் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான களமாக சமூக ஊடகங்கள் விளங்குகின்ற இன்றைய சூழலில், அதனைப் பொறுப்புடன் பயன்படுத்திட வேண்டும். தவறும் பட்சத்தில் தவறானதும் பிழையானதுமான வழிகளில் மக்கள் இட்டுச் செல்லப்பட வழிவகுக்கப்படலாம். அவ்வாறான நிலைமை ஏற்பட எவரும் துணைபோகலாகாது.  


Add new comment

Or log in with...