வளரிளம் பிள்ளைகளின் போஷாக்கு மீதான கரிசனை

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள தற்போதைய சூழலில் நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிப்படுத்துவதில் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்நாட்டில் உள்ள பாலர் பாடசாலைகளில் கல்வி கற்கும் முன்பள்ளி சிறார்களுக்கு காலை உணவை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் விஷேட வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தற்போதைய சூழலில் இந்நாட்டின் இளம் பராயத்தினரின் நலன்களைக் கருத்தில் கொண்டு இவ்வாறான வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவென முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர்.

அந்த வகையில் இலங்கையின் முன்பள்ளிப்பருவ பிள்ளைகளது அபிவிருத்தி மையங்கள் தொடர்பான தேசிய கணக்கெடுப்பின்படி, நாட்டில் சுமார் 20 ஆயிரம் பாலர் பாடசாலைகள் உள்ளன. இப்பாடசாலைகளில் 02 வயது முதல் 05 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 05 இலட்சத்து 70 ஆயிரம் சிறுவர்கள் பாடசாலைக் கல்விக்காகத் தயார்படுத்தப்படுகின்றனர். இப்பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களில் 83 வீதமானவர்கள் தொழில்வாண்மை பயிற்சியைப் பெற்றவர்களாவர். ஆனால் 9.5 வீதமானவர்கள் முறையான பயிற்சியைப் பெற்றிராதவர்களாவர். நாட்டிலுள்ள பாலர் பாடசாலைகளில் 20 வீதமானவை உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட பொது நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்ற அதேநேரம், பெரும்பாலானவை அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.

இந்நாட்டில் 05 வயது முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட ஒவ்வொரு பிள்ளையும் கல்வி பெறுவது கட்டாயமாகும். இது முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும் கல்வி. இதன் நிமித்தம் நாட்டில் சுமார் 10 ஆயிரம் பாடசாலைகள் இயங்கிக் கொண்டிருப்பதோடு, இப்பாடசாலைகளில் 02 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு பிள்ளையும் கல்வி பெறுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அக்கல்விக்காக 02 -தொடக்கம் 05 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளை கல்விக்கு தயார்படுத்தும் நிலையங்களாகவே பாடசாலைகள் உள்ளன.

இந்நிலையில் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாக சிறுவர்கள் போஷாக்கு தொடர்பான அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கக்கூடிய நிலைமை காணப்படுகிறது. ஆனால் ஆரோக்கியமானதும் வளமானதுமான சமூகத்தை உருவாக்குவதில் போஷாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக வளரிளம் பிள்ளைகளின் போஷாக்கு குறித்து உரிய கவனம் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை உருவாக்குவது பெரும் சவாலுக்குரிய விடயமாகி விடும். போஷாக்கானது குழந்தைகளின் ஆற்றல் மற்றும் திறன்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

அதன் காரணத்தினால்தான் தற்போதைய பொருளாதார நெருக்கடிச் சூழலிலும் இந்நாட்டு இளம் பராயத்தினர் போஷாக்கு தொடர்பான அச்சுறுத்தலை எதிர்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் விஷேட கவனம் செலுத்தப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில்தான் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பாலர் பாடசாலை பிள்ளைகளுக்கு காலை உணவை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்து இருக்கின்றார்.

இது நாட்டினதும், எதிர்கால சந்ததியினரதும் நலன்களை முன்னுரிமைப்படுத்தி முன்னெடுக்கப்படும் திட்டம் என்பதில் ஐயமில்லை. இத்திட்டமானது இந்நாட்டு இளம்பராயத்தினர் முகம் கொடுக்கக் கூடிய போஷாக்கு தொடர்பான அச்சுறுத்தலை முறியடிப்பதற்கு பக்கத்துணையாக அமையும்.

அரசாங்கமானது பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம்கொடுத்துள்ள சூழலிலும் வளரிளம் சிறார்களின் நலன்கள் குறித்தும் கவனம் செலுத்தத் தவறவில்லை என்பதை இத்திட்டத்தின் ஊடாக நாட்டுக்கு எடுத்துக் கூறியுள்ளது. அதேநேரம் கர்ப்பிணித் தாய்மாரின் போஷாக்கு உணவுக்காக பத்து மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபா தற்போது வழங்கப்படுகிறது. இத்தொகையை ரூ 250.00 ஆல் மேலும் அதிகரிகரித்து வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

இவ்வாறு வளரிளம் சிறார்களின் போஷாக்கு மேம்பாடு தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், பெற்றோரும் உறவினர்களும் தம் பிள்ளைகளின் போஷாக்கு குறித்து கூடுதல் கவனம் செலுத்தத் தவறக்கூடாது. அதனைத் தம் பொறுப்பாகக் கருத வேண்டும். அதுவே முன்பள்ளி சிறார்களின் நலன்கள் குறித்து அக்கறை கொள்ளும் பெரும்பாலான ஆர்வலர்களின் கருத்தாகும்.


Add new comment

Or log in with...