பொருளாதார மீட்பு முயற்சிகளுக்கு உள்நாட்டு அமைதி இன்றியமையாதது

எமது முடங்கிப்போன பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஒரே மார்க்கமாக பொருளாதார நிபுணர்களினால் குறிப்பிடப்படுவது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ளச் செய்வதாகும். நாட்டை இப்பாரிய வீழ்ச்சியில் இருந்து மீட்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகள் பலன்தர ஆரம்பித்திருப்பது தொடுவானில் ஒளிக்கீற்றுகள் போலப் புலப்படத் தொடங்கியுள்ளன.

1974 ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு பொருளாதார வீழ்ச்சியை இந்நாடு சந்தித்தது. உலக சந்தையில் அரிசிவிலை அதிகரித்துக் காணப்பட்டதோடு அரிசிக்கு தட்டுப்பாடும் நிலவியதால் அரிசியையும் கோதுமை மாவையும் போதிய அளவில் இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்பட்டது. எதிர்பாராத மிக நெருக்கடியான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என இதைப் பின்னர் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வர்ணித்திருந்தார்.

அச்சமயத்தில் உள்நாட்டு உற்பத்தி வருமானம் மந்தமாக இருந்தது. ஏற்றுமதி வருமானம் பெருந்தோட்டங்கள் சுவீகரிக்கப்பட்டிருந்ததால் பாதிப்படைந்திருந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இடதுசாரிகளுடன் இணைந்து சோஷலிச அரசை அமைத்திருந்ததால் முதலாளித்துவ நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வரவில்லை. உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் இலங்கையை பொருட்டாகக் கொள்ளவில்லை.

எனவே நாட்டு நிலைமை அடுப்பில் இருந்து உலைக்குள் விழுந்த கதையாகி விட்டிருந்தது. 1977 இல் ஜே.ஆர்.தலைமையில் ஐ.தே.க. அரசு அமைத்த பின்னரேயே மேற்குலகமும் சர்வதேச நிதி நிறுவனங்களும் கண்திறந்தன.

1976இல் ஒரு இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டோம் என்றால் ஒரு நாடு அதில் இருந்து பாடம் கற்று தன் அடுத்த பயணத்தை ஆரம்பித்திருக்க வேண்டும். இந்நாட்டு அரசியல்வாதிகள் அதைச் செய்யாமல் மீண்டும் நாட்டை பாதாளத்தில் தள்ளிவிட்டிருக்கிறார்கள் என்பது போகிற போக்கில் சொல்லப்படும் ஒரு விஷயம் அல்ல. மிக ஆழமாகக் கருத்தில் கொள்ளப்பட்டு மீண்டும் இவ் வீழ்ச்சி நடைபெறக் கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கையான பாதுகாப்பு நடைமுறைகள் சட்டங்களாகக் கொண்டுவரப்பட வேண்டும். ஒரு பொருளாதார கண்காணிப்பு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

1974 பொருளாதார சரிவுடன் ஒப்பிடும் போது தற்போது நிலைமைகள் பரவாயில்லை என்றுதான் கொள்ள வேண்டும். இந்தியா 400 கோடி டொலர்களுக்கும் அதிகமான உதவிகளை செய்தது. உலக வங்கியின் உதவியால் சமையல் எரிவாயு பிரச்சினைக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் முதல் கட்ட உதவியை உறுதி செய்துள்ளது. ஜனாதிபதியின் இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான் விஜயங்கள் சாதகமாக முடிவடைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.

முன்னர் சிங்கப்பூருடன் செய்து கொள்வதாக இருந்து தேசப்பற்றாளர்களின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்ட சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை இனிமேல் செய்து கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். பதிலுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசின் லூங் தமது நாடு இலங்கையில் முதலீடுகளைச் செய்யும் என உறுதி அளித்திருக்கிறார்.

ஜனாதிபதியின் டோக்கியோ விஜயத்தின்போது தமது நாடு இலங்கைக்கு உறுதுணையாக நிற்கும் என்றும் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை ஆராய உள்ளதாகவும் அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்ததோடு புதுப்பிக்கத்தக்க வலு சக்தித் துறையில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாகவும் குறிப்பிட்டிருப்பது நிறைவைத் தருவதாக உள்ளது.

ஜப்பான் இலங்கை மீது பெரு மதிப்பு கொண்ட நாடு. உலக யுத்தம் முடிவடைந்த பின்னர் நேச நாடுகள் தோல்வியடைந்த ஜப்பானை மேலும் பழிவாங்கும் வகையிலான நகர்வுகளை மேற்கொள்ள முயன்ற போது சிக்காக்கோவில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய ஜே.ஆர்.ஜயவர்தன, புத்தரின் போதனை ஒன்றை உதாரணம் காட்டி, வெறுப்பை வெறுப்பினால் வெல்ல முடியாதென்றும் எனவே ஜப்பானை மீளவும் கட்டி எழுப்ப நேச நாடுகள் முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இதன் பின்னரேயே மேற்குலக நாடுகள் ஜப்பான் எழுந்து உயரமாக நிற்பதற்கு பொருளாதார உதவிகளைச் செய்தன. 77 இல் ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக் கட்டில் ஏறியதும் ஜப்பான் செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் வகையில் உதவிகள் வழங்க முன்வந்ததையும் நாம் மறந்துவிட முடியாது. கடன் பொறியில் சிக்க வைக்க முயலாத ஜப்பான், எமது பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளுக்கு உறுதுணையாக நிற்குமானால் அது யானை பலத்தைத் தருவதாக அமையும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் பல உலக நாடுகள் எமக்கு உதவவும் முதலீடுகளைச் செய்யவும் முன்வந்திருப்பது நல்ல ஆரம்பமாகவே தெரிகிறது. ஆனால் அவர்கள் நம்பிக்கையுடன் இலங்கை வந்து முதலீடுகளை மேற்கொள்வதற்கான உகந்த சூழலை தொடர்ச்சியாக பேண வேண்டிய கடமை நாட்டு மக்களுக்குரியது. மீண்டும் குழப்ப நிலை தோற்றுவிக்கப்படுமானால் பொருளாதார மீட்சி என்பது கைக்கெட்டாத தூரத்துக்கு போய்விடலாம்.


Add new comment

Or log in with...