பிரதமர் ரணிலின் இல்லத்திற்கு தீ; உலக நாடுகள் பலவும் கவலை, கண்டனம்

சந்திரிக்காவும் கண்டனம் தெரிவிப்பு

கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கண்டனம் தெரிவித்துள்ளதோடு, நோர்வே மற்றும் ஆப்கானிஸ்தான் என்பன கவலை வெளியிட்டுள்ளன.

ஜுலை 09ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கொழும்பு குறுந்துவத்தை பகுதியில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்ல வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தின் பின்னர் வீட்டின் மீது தாக்குதல்களையும் மேற்கொள்ளத் தொடங்கினர்.

இதனால் பிரதமரின் இல்ல வளாகத்தில் பொலிஸார் மற்றும் முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்தோடு ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்த கலைப்பதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறிருப்பினும் அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை.

இதனையடுத்து பிரதமரின் இல்லத்திற்கு தீ மூட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியதோடு தீப்பற்றியெறியும் காணொளி பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. இதன் போது பிரதமர் பிரத்தியேக இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த நூலகமும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பிரதமரின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள சட்டத்தரணி என்.கே.அஷோக்பரன், ரணில் விக்ரமசிங்க தனக்குப் பின்னர் தனது இல்லத்தை அரச பாடசாலையொன்றுக்கு வழங்கியிருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி அந்த இல்லத்திற்குள் பெறுமதியான புத்தகங்களுடன் கூடிய நூலகம் இருப்பதை அவரது நேர்காணல் காணொளிகளில் கண்டிருக்கிறோம். அத்தகைய இல்லத்திற்குத் தீவைப்பதென்பது மிகமோசமான குற்றச்செயலாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது டுவிட்டர் பதிவில் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

ஒரு மோசமான அரசாங்கத்தை விரட்டி, மக்கள் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான இலக்கை அடைய போராட்டக்காரர்களுக்கு வன்முறை தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...