ஒலுவில் துறைமுகத்தை வினைத்திறனாக மாற்றி அஷ்ரபின் கனவு, அபிலாஷைகள் நிறைவேற்றப்படும்

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கடுமையான முயற்சிகளை வரவேற்றுள்ள ஒலுவில் பிரதேச பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள், ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்கான பூரண ஒத்துழைப்புக்களை வழங்கத்தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று (06) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே மேற்குறிப்பிட்டவாறு இவர்கள் தெரிவித்தனர்.

ஒலுவில் துறைமுகத்தை பலநாள் ஆழ்கடல், கலன்கள் மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகுகளை செயற்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகளுக்கும் பலநாள் ஆழ்கடல் மீன்பிடி கலன்களின் உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மணல் அகழ்வு மற்றும் ஐஸ்தொழிற்சாலை, மீன் பதனிடும் தொகுதி போன்றவற்றை சிறப்பாக செயற்படுத்துவதற்கும் தேவையான ஒத்துழைப்புக்களை இவர்கள் வழங்கவுள்ளனர்.

இதனை வரவேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேச கடற்றொழிலாளர்களின் பங்களிப்புடன், தேவையானளவு தனியார் முதலீடுகளையும் பயன்படுத்தி ஒலுவில்துறைமுகத்தை வினைத்திறனாக மாற்றுவதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று தெரிவித்தார்.

முஸ்லிம்களின் தேசியத் தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே தனது விருப்பம் என்றும் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா இதன்போது தெரிவித்தார்.


Add new comment

Or log in with...