மெழுகுதிரி உற்பத்தி இலகுவானது; மின்வெட்டுக் காலத்தில் உற்பத்தியை பெருக்குவோம்

மெழுகுதிரி உற்பத்தியாளர் கெ.வித்தியகலா

தற்போது நாடளாவிய ரீதியில் அவ்வப்போது மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இக்காலகட்டத்தில், மெழுகுதிரி விற்பனை அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆனாலும், எமது பிரதேசத்தில் மெழுகுக்கட்டிக்கு தட்டுப்பாடு நிலவுவதால், உரிய முறையிலோ, உரிய வேளையிலோ மெழுகுதிரி உற்பத்தியில் ஈடுபட முடியாதுள்ளதாக, பெண் சுயதொழில் முயற்சியாளரான மெழுகுதிரி உற்பத்தியில் ஈடுபடும் திருமதி கெங்கேஸ்வரன் வித்தியகலா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மெழுகுதிரி உற்பத்தியில் ஈடுபடுவோர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவுள்ளது. ஆகையால், இம்மாவட்டத்தில் மெழுகுக்கட்டியை பெற்றுக்கொள்வதில் சிரமம் காணப்படுகின்றது.

இந்நிலையில், மெழுகுக்கட்டிக்காக கடையில் நாம் முற்கூட்டி ஓடர் செய்யும் பட்சத்திலேயே, மெழுகுக்கட்டியை பெற்றுக்கொள்ள முடிகின்றது.

நான் காத்தான்குடியிலுள்ள கடையொன்றிலேயே மெழுகுக்கட்டியை பெற்று வருகின்றேன். அக்கடையில் நான் முற்கூட்டி ஓடர் செய்தே, மெழுகுக்கட்டியை பெற்று வருகின்றேன். இதனால் எமது தேவைக்கேற்ப உடனடியாக மெழுகுக்கட்டியை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை இங்கு காணப்படுகின்றது என்கின்றார் அவர்.

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மெழுகுக்கட்டிக்கான விலையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. முன்னர் 300 ரூபாய்க்கு கொள்வனவு செய்திருந்த ஒரு கிலோ மெழுகுக்கட்டி, தற்போது 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விலை அதிகரித்துக் காணப்படுகின்றது.

மெழுகுக்கட்டிக்கான தட்டுப்பாடு மற்றும் அதன் விலை அதிகரிப்புக் காரணமாக எனது மெழுகுதிரி உற்பத்தியில் சற்று பின்னடைவு காணப்படுகின்றது எனவும், அவர் தெரிவித்துள்ளார். அல்லாவிடின், மின்வெட்டு மேற்கொள்ளப்படும் இக்காலகட்டத்தில், மெழுகுக்கட்டியை நினைத்த மாத்திரத்தில் எனக்கு பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்குமேயானால், மெழுகுதிரி உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்கின்றார் அவர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலம்பாவெளி, விபுலானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய திருமதி கெங்கேஸ்வரன் வித்தியகலா, தனது சுயதொழில் முயற்சியாக சுமார் 12 வருடகாலமாக மெழுகுதிரி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.

தனது வீட்டிலிருந்தவாறே அவர் இத்தொழிலைச் செய்து வருவதோடு, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பச் செலவையும் அவர்; கவனித்து வருகின்றார்.

தனது குடும்பத்தின் ஏழ்மை நிலை பற்றியும், அவ் ஏழ்மையிலிருந்து மீண்டெழுவதற்காக தான் ஈடுபட்டுள்ள அயராத உழைப்பு பற்றியும், தினகரன் வாரமஞ்சரி வாசகர்களுடன் அவர் பகிர்ந்து கொள்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது கணவர் ஒரு கூலித் தொழிலாளியாக உள்ளதோடு, எமக்கு ஒரு பெண் பிள்ளையும் ஓர் ஆண் பிள்ளையும் இருக்கிருக்கின்றார்கள்.

கூலித் தொழிலாளியான எனது கணவரின் வருமானத்தின் மூலம் எமது குடும்பச் செலவை உரிய முறையில் கவனிக்க முடிவதில்லை. போதியளவான வருமானமின்றி நாம் கஷ்டப்பட்டதோடு மாத்திரமின்றி, நிரந்தர வருமானமின்றியும் தவித்தோம்.

மேலும், எனது கணவர் கூலித் தொழில் மூலம் சம்பாதித்துக்கொண்டு வரும் பணம், அன்றைய நாள் செலவுடனையே தீர்ந்து விடும். அத்தோடு, கணவர் நோய் வாய்ப்பட்டு தொழிலுக்குச் செல்ல முடியாது போகும் சந்தர்ப்பங்களிலும், எமது அன்றைய நாள் செலவை சமாளிப்பதற்கு பண வசதியின்றி இல்லாது திண்டாடினோம்.

எமது குடும்பக் கஷ்டம் மற்றும் எமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிச் சிந்தித்த நான், எனது கணவரின் வருமானத்தில் மாத்திரம் குடும்பச் செலவைக் கொண்டு செல்ல முடியாது என்பதை உணர்ந்தேன். இந்நிலையிலேயே, நான்; வீட்டில் இருந்தவாறு, எனது கணவர் மற்றும் பிள்ளைகளையும் பராமரித்துக்கொண்டு ஏதாவதொரு சுயதொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்ட வேண்டுமென்று உத்தேசித்தேன்.

அவ்வேளையில் எனக்கு மெழுகுதிரி தயாரிக்கும் பயிற்சிநெறியில் பங்குபற்றுவதற்கான ஒரு வாய்ப்புக் கிடைத்தது. கடந்த 2010ஆம் ஆண்டு செங்கலடி பிரதேச சபையால் பெண்களுக்காக மாத்திரம் நடத்தப்பட்ட மெழுகுதிரி உற்பத்தி தொடர்பான மூன்று நாள் பயிற்சிநெறியில் நான் பங்குபற்றினேன். அப்பயிற்சிநெறியை பயின்று விட்டு நான் சுயமாக மெழுகுதிரி உற்பத்தி செய்யும் தொழிலை தொடங்கினேன்.

இத்தொழிலை தொடங்கும்போது ஆரம்பத்தில் என்னிடம் போதியளவு பணம் இல்லாமையினால், உரிய முறையில் முதலீடு செய்து தொழிலை தொடங்க முடியவில்லை. இருந்தபோதிலும், 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' எனும் பழமொழிக்கு அமைய, சிறிதளவு பணத்தின் உதவியுடன் மெழுகுதிரி உற்பத்தி செய்யும் தொழிலை எனது வீட்டில் வைத்து தொடங்கினேன்.

அப்போது மெழுகுக்கட்டி, அதற்குரிய திரி மற்றும் இரசாயனப் பதார்த்தம், நிறச்சாயம் ஆகியவற்றை மாத்திரம் நான் கடையில் வாங்கினேன். ஆனால்; மெழுகுதிரி உற்பத்தி செய்யும் இயந்திரத்தை வாங்குவதற்கு என்னிடம் பணம் இல்லை. ஆகையால், அயலவர் ஒருவரிடமிருந்து மெழுகுதிரி உற்பத்தி செய்யும் இயந்திரத்தை நான் இரவலாக பெற்று, மெழுகுதிரி உற்பத்தியில் ஈடுபட்டேன்.

அவ்வாறு உற்பத்தி செய்த மெழுகுதிரிகளை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைத்த வருமானத்தின் மூலம் மெழுகுதிரி தயாரிக்கும் இயந்திரமொன்றையும் நான் கொள்வனவு செய்தேன்.

இதனைத் தொடர்ந்து எனது மெழுகுதிரி உற்பத்தித் தொழிலை நான் பெருகிக்கொண்டு சென்றேன். இந்நிலையில், எமது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது தேவைகளுக்கேற்ப என்னிடம் வந்து மெழுகுதிரிகளைக் கொள்வனவு செய்வதோடு, கடைகளுக்கும் நான் மெழுகுதிரிகளை விற்பனை செய்து வருகின்றேன்.  எனது கணவரின் சம்பாத்தியத்திலும் எனது மெழுகுதிரி உற்பத்தித் தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்திலும் எமது குடும்பத்தைக கவனித்துக்கொண்டு வருகின்றோம். இந்நிலையில் எமது இரண்டு பிள்ளைகளில், மூத்த பெண் பிள்ளையானவள், க.பொ.த. உயர்தரத்தில் உயிர்முறைகள் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி கற்று பல்கலைக்கழத்திற்கு தெரிவாகியுள்ளதோடு, எமது இளைய மகன்; தற்போது க.பொ.த. சாதாரணதரத்தில் கல்வி பயின்று வருகின்றார்.

எனது வீட்டுக் கடமைகளை காலை வேளையில் முடித்துவிட்டு, அதன் பின்னர் நான் மெழுகுதிரி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றேன். இம்மெழுகுதிரி உற்பத்தித் தொழிலை, எமது இரண்டு பிள்ளைகளுக்கும் நான் பழக்கிக் கொடுத்துள்ளேன். அவர்களும் பாடசாலைக் கடமைகளை முடித்துவிட்டு, ஓய்வுவேளையில் என்னுடன் சேர்ந்து மெழுகுதிரி உற்பத்தியில் ஈடுபடுவார்கள்.

எமது இரண்டு பிள்ளைகளையும் கல்வியில் நல்லதொரு நிலைக்கு கொண்டு வந்துள்ளேன். இந்நிலையில், நாம் வசிக்கும் வீடானது, உரிய முறையில் கட்டி முடிக்கப்படவில்லை. தற்போது ஒரு வரவேற்பு மண்டபம் மற்றும் ஓர் அறை மாத்திரமே கொண்ட வீட்டில் நாம் வசித்து வருகின்றோம். சமையலறை கூட இல்லை. சமயலறையை தற்காலிகமாக தகரத்தில் அடைத்து, அதில் வைத்தே சமையல் வேலைகளை செய்து வருகின்றேன். ஆகையால், அரைகுறையாகவுள்ள எமது வீட்டை கட்டி முடிக்க வேண்டிய சவால் என் கண் முன்னால் உள்ளது என்கின்றார் அவர்.

இளம் பெண்களே கேளுங்கள்! குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக எமது கணவன்மார்கள் கஷ்டப்பட்டுவரும் நிலையில், நாமும் அவர்களுக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டும்.

தற்போது பொருட்களின் விலைவாசி அதிகரித்துக் காணப்படும் நிலையில் கணவரின் வருமானத்தில் மாத்திரம் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது. ஆகையால் கணவன், மனைவி ஆகிய இருவருமே வருமானம் ஈட்டும் தொழிலில் ஈடுபட வேண்டும். இவ்வாறானதொரு நிலையிலேயே குடும்பச் செலவை நிர்வகிக்க முடியும் என்பதோடு, குடும்பத்தையும் முன்னேற்றகரமானதொரு நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்கின்றார்; அவர்.

மெழுகுதிரி உற்பத்தித் தொழில் கூட, மிகவும் இலகுவானது என்பதோடு, அத்தொழிலில் எவ்வித சிரமமும் இல்லை. அத்தோடு, பெண்களாகிய நாம், எமது வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு, மெழுகுதிரி உற்பத்தித் தொழிலிலும் ஈடுபட முடியும் என்பதே எனது நிலைப்பாடாகும். ஆகையால், பெண்களாகிய நாம் எமது நேரத்தை பயனுடையதாக்கும் வகையில், வீண்பொழுது போக்கைத் தவிர்த்து, மெழுகுதிரி உற்பத்தித் தொழிலில் ஈடுபடுவதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும் என்கின்றார் அவர். எனது மெழுகுதிரி உற்பத்திக் தொழிலை, மேலும் முன்னேற்றகரமான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்பதோடு, இத்தொழில் மூலம் சமூகத்தில் நலிவுற்ற பெண்களுக்கு என்னாலான உதவியைச் செய்ய வேண்டும் என்பதும் எனது விருப்பமாகும். இருந்தபோதிலும், தற்போதைய பொருட்களின் விலைவாசி அதிகரிப்பினால், எனது மெழுகுதிரி உற்பத்தித் தொழிலை மேலும் முன்னேற்றகரமான நிலைக்கு கொண்டு செல்வதற்கு என்னிடம் தற்போது போதியளவான முதலீடு இல்லை. இத்தொழிலுக்காக போதியளவான முதலீடு கிடைத்து, தொழில் தொடங்கும் பட்சத்தில், இத்தொழிலில்; நலிவுற்ற பல பெண்களை இணைத்துக்கொண்டு, அவர்களுக்கு இத்தொழிலை பழக்கிக் கொடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். சமூகத்தில் நலிவுற்ற அப்பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றகரமானதொரு நிலைக்கு கொண்டு வருவதற்கு, நான் அவர்களுக்கு ஒத்தாசையாக இருப்பேன். இதுவே எனது எதிர்பார்ப்பாகும் என்கின்றார் அவர்.

ஆர்.சுகந்தினி


Add new comment

Or log in with...