பாராளுமன்றத்தில் ஆண், பெண் சமத்துவம் இல்லை

பிரதி சபாநாயகர் தெரிவு வெளிப்படுத்தியதாகரோகினி குமாரி எம்பி, கவலையில்

 

பாராளுமன்றத்தில் ஆண் - பெண் சமத்துவம் இல்லை என்பதையே பிரதி சபாநாயகர் தெரிவு தெளிவு படுத்தியுள்ளதாக பிரதி சபாநாயகர் வாக்களிப்பில் தோல்வியடைந்த ரோகிணி குமாரி விஜேரத்ன தெரிவித்தார். உலகின் முதல் பிரதமரும் ஜனாதிபதியும் கூட பெண்ணாக பதவி வகித்துள்ள இந்நாட்டில், ஒரு பெண்  பிரதி சபாநாயகராக வருவதற்கு வாய்ப்பில்லாமல் போயுள்ளது.

56 வீத பெண்கள் வாக்காளர்களாக உள்ள இந்த நாட்டில், பிரதி சபாநாயகராக பெண் ஒருவர் வர முடியாத நிலையே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக பதவியேற்று முன்வைத்துள்ள முதலாவது பிரேரணையே சபையில் தோல்வி கண்டுள்ளது. அந்த வகையில் அவர் வெறும் கைப்பொம்மையாகவே செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பின் பின்னர் சபையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்.

எனது திறமை மற்றும் அனுபவத்தில் நம்பிக்கை வைத்தே எதிர்க்கட்சித் தலைவர் எனது பெயரை முன்வைத்தார். அதற்காக அவருக்கும் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நான், நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

நான் பிரதி சபாநாயகராக வருவதை ராஜபக்ஷ தரப்பினர் விரும்பவில்லை. அது, நான் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டதாலல்ல.

ராஜபக்க்ஷ தரப்பினரின் ஊழல், மோசடிகளை அவ்வப்போது நான், அம்பலப்படுத்துவதை அவர்கள் விரும்பவில்லை.

எவ்வாறெனினும் தற்போது பிரதி சபாநாயகர் பதவியல்ல. அதனைவிட பாராளுமன்றத்துக்கு வெளியிலும் நாட்டிலும் போராட்டங்களை நடத்தும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது முக்கியமாகும்.

புதிய பிரதமருக்கு இது போன்ற சிறிய விடயத்தில் கூட ஆளும் தரப்பை இணக்கப்பாட்டுக்கு கொண்டுவர முடியாமல் போயுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும். ஏனென்றால் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்ல கறுப்பு நிற குருவி ஒன்றே அனைத்திலும் செயற்படுகின்றது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

காலிமுகத்திடல் வன்முறைகளுக்கும் அவரே காரணம்.

அத்துகோரள எம்பியின் மரணத்திற்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

 

 


Add new comment

Or log in with...