தமிழருக்கும் நிவாரணம் வழங்கக் கோருகிறார் சுரேஷ்

அண்மையில் காலிமுகத்திடலில் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர் கூட்டத்திற்கு எதிராக போராட்டக்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதல் தொடர்பான மதிப்பீடுகளையும் நிவாரணங்களையும் வழங்க அரசாங்கம் உடனடியாக அறிவித்துள்ள நிலையில், இதுகாலம் வரை தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு உரிய மதிப்பீடுகளோ, விசாரணைகளோ, நிவாரணங்களோ வழங்கப்பட்டதா? என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

இலங்கையில் 1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் அரச கரும மொழி சட்டம் கொண்டுவரப்பட்டபொழுது அதனைத் தமிழர்கள் எதிர்த்தனர். இதற்கு எதிர்வினையாக இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் நூற்றுக்கணக்கான கோடி ரூபா சொத்துகளை அழித்ததுடன் பலநூறு தமிழர்களையும் கொன்று குவித்தது. ஆனால், இன்றுவரை இது தொடர்பான விசாரணைகளும் நடைபெறவில்லை, நிவாரணமும் கிடைக்கவில்லை.

1977ஆம் ஆண்டு மீண்டும் 1983ஆம் ஆண்டும் தமிழர்கள்மீது பாரிய ஒரு வன்முறைத்தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், திட்டமிட்ட வகையில் அவர்களது வீடுகளும், வியாபார நிறுவனங்களும் கொள்ளையிடப்பட்டு தீயூட்டப்பட்டன.

இந்த வன்முறைகளிலிருந்து தமிழர்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ள தனிநாடு கோரி இலங்கைப் படையினருக்கு எதிராக நீண்ட ஆயுதப்போராட்டத்தை நடத்தினர். அன்றைய காலகட்டங்களில் வடக்கு- கிழக்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டு, அவர்களின் குடும்பங்கள் ஏதுமற்றவர்களாக, எஞ்சியவர்களின் உயிரைக் கையில் பிடித்தபடி நிற்கதியாகி நடுத்தெருவுக்கு வந்தனர்.

இறுதியில், 2009இல் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன், முள்ளிவாய்க்காலில் விவசாயிகளின் நூற்றுக்கணக்கான உழவு இயந்திரங்கள், கனரக வாகனங்கள், இயந்திரங்கள், மகிழூந்துகள், உந்துருளிகள், துவிச்சக்கர வண்டிகள் என்பன கைவிடப்பட்டு மக்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டனர். அவர்கள் மீண்டு வந்தபொழுது அவர்களுக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் உடைமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

இந்த நாடு ஒரு பல்லின மக்கள் வாழ்கின்ற நாடு என்பதையும், பலமொழி, பலகலாசாரங்களையும் பண்பாடுகளையும் பின்பற்றுகின்ற மக்கள் இங்கு வாழ்கின்றனர் என்பதையும், அவர்களது உரிமைகள் மதிக்கப்பட்டு அனைவருக்கும் சம நீதி வழங்கப்படவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்ளாதவரை இந்த நாட்டில் பொருளாதார எழுச்சியும் வராது. இந்த நாட்டிற்கு விமோசனமும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...