கொவிட் தொற்றுக்கு மாத்திரை; முதல் நாடாக பிரிட்டன் அங்கீகரிப்பு

கொவிட் தொற்றுக்கு மாத்திரை; முதல் நாடாக பிரிட்டன் அங்கீகரிப்பு-First Pill to Treat COVID Gets Approval in UK

- தொற்று அறிகுறி தென்பட்டு 5 நாட்களுக்கு தலா 2 மாத்திரை வீதம் வழங்க சிபாரிசு

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக கண்டறியப்பட்ட மாத்திரையை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த பிரித்தானிய மருத்துவ ஒழுங்குபடுத்தல் பிரிவு அனுமதித்துள்ளது.

மெர்க் (MSD) மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியுட்டிக்ஸ் (Ridgeback Biotherapeutics) நிறுவனங்கள் இணைந்து இந்த மாத்திரையை தயாரித்திருக்கின்றன.

மோல்னுபிராவிர் (molnupiravir) என பெயரிடப்பட்டிருக்கும் இந்த மாத்திரை, கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட ஆரம்பமான தொற்றாளர்களுக்கு, இந்த மாத்திரையை முதல் 5 நாட்களில் நாளொன்றுக்கு 2 முறை வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சலுக்காக ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மாத்திரையின் பயன்பாட்டின் பரீட்சார்த்த நிலை பரிசோதனைகளின்போது, வைத்தியசாலையில் அனுமதித்தல் மற்றும் இறப்பு ஆகியவற்றை 50% வரை குறைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உரிய நடைமுறைகளின் பின்னர் குறித்த மாத்திரையை தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் உலகின் முதல் நாடாக இந்த மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதியளித்திருக்கிறது.

மிகவும் பலவீனமான மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை ஒரு புரட்சிகரமானது என, அந்நாட்டு சுகாதார அமைச்சின் செயலாளர் சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.

இன்று எமது நாடு வரலாறு காணும் ஒரு நாளாகும். ஏனெனில் கொவிட் தொற்றுக்கு வீட்டிலேயே எடுத்துச் கொள்ளும் வகையிலான வைரஸ் தடுப்பு மருந்தை அங்கீகரிக்கும் உலகின் முதல் நாடு இங்கிலாந்து என்பதே அதற்கான காரணமாகும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலும் இந்த மாத்திரையை பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். தடுப்பூசியை விட மாத்திரையை தயாரிப்பது எளிது என்பதால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.