கொவிட் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு சுற்றுலாத்துறை மேலோங்க வேண்டும்

உல்லாசப் பயணிகள் வருகையினாலேயே அதிக நாடுகளுக்கு பெரும் வருமானம்

சுற்றுலா என்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நம்மில் மகிழ்ச்சியடையாதவர்கள் . யாருமே இருக்க முடியாது, ஏனெனில் சுற்றுலா என்பது மனதுக்கு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் அளிக்கக் கூடியதாகும். உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின்படி வழக்கமான இடத்தை விட்டு வேறு ஒரு இடத்துக்கு ஓய்வு அல்லது மற்ற ஏனைய நோக்கங்களுக்காக சென்று தங்கி வருவது சுற்றுலா என்று கூறப்படுகிறது.

சுற்றுலா தளங்கள் ஒவ்வொரு வருடமும் சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் நிரம்பி காணப்படும். ஆனால் தற்போது கொவிட் -19 தொற்று காரணமாக உலகம் முழுவதும் சுற்றுலாத்துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலாத் துறையை நம்பி தொழில்களில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை பல உலகநாடுகளின் முக்கிய தொழில்துறையாக விளங்குகிறது. சுற்றுலாத்துறை போக்குவரத்து உணவுத்துறை, இடவசதி, ஒய்வு மற்றும் கேளிக்கை மற்றும் சுற்றுலா சேவைகள் ஆகிய ஐந்து துறைகளைச் சார்ந்துள்ளது.

மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா பெரும் வருவாய் ஈட்டித் தரும் துறையாகப் ஒரு சாராரால் பார்க்கப்படுகிறது. சுற்றுலாவினால் மனிதநேயம், தேசிய ஒருமைப்பாடு, நல்லெண்ணம், உலக ஒற்றுமை ஆகியன மலர்ந்தாலும், சுற்றுலாவினால் சில தீமைகளும் உண்டாகின்றன. அதாவது சுற்றுலா செல்லும் பயணிகள் வரலாற்றுச் சின்னங்களைத் தொடுவதாலும், சிலர் தமது பெயரைப் பொறிப்பதாலும் வரலாற்று சின்னங்கள் அழிவடையக் கூடும்.

அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகையினாலும் வாகனங்களினால் ஏற்படும் புகையினாலும் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு அடைகிறது. பலதரப்பட்ட பயணிகள் ஒன்றுசேரும் இடங்களில் நோய் பரவும் வாய்ப்புள்ளது. மேலும் உயிரினங்களின் சுற்றுப்புறச் சூழல் கெடுகிறது. அரியவகைத் தாவர இனங்களும், செடிகளும் பாதிப்படைகின்றன.

சுற்றுலாத் துறையானது வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது, உள்ளூர் கலாசாரம் மற்றும் தயாரிப்புகளை ஊக்குவிக்கிறது. சுற்றுலா மூலம் பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச புரிந்துணர்வு, சமாதானம் ஆகியவற்றை மேம்படுத்துதல், நாட்டின் பொருளாதாரத்தை விரிவுபடுத்தல் ஆகிய நோக்கில் வருடம் தோறும் 27 ஆம் திகதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் உள்ள பல்வேறு நாடுகள் சுற்றுலாவை தங்களது கலாச்சாரத்திற்குள் வைத்துள்ளன. சுற்றுலாத் துறை வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பொருளாதார பலமாக உள்ளது. சுற்றுலாத்துறை பல உலகநாடுகளின் முக்கிய தொழில்துறையாக காணப்படுகிறது.

இலங்கை போன்ற வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலமாக இருப்பது சுற்றுலாத்துறை ஆகும். அதிகளவு பாலைவனத்தை கொண்டுள்ள துபாய் சுற்றுலாவில் அதிக வருவாய் ஈட்டி வருகிறது. சின்னஞ்சிறிய நாடான சிங்கப்பூர், எந்த விதமான பெரிய வளமும் இல்லாமல் சுற்றுலாவில் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது .சில நாடுகளில் சுற்றுலாத் துறையை நம்பித்தான் நாட்டின் பொருளாதாரமே இருக்கிறது. சுற்றுலாத்துறை பல உலகநாடுகளின் முக்கிய தொழில்துறையாக இன்றளவும் இருக்கிறது.

இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளைப் பொறுத்தவரை பல்வேறு வகையான மக்கள், கலாச்சாரம்,கலைகள்,மொழிகள் என்று சுற்றுலாவுக்கான அத்தனை வாய்ப்புகளையும் உள்ளடக்கிய நாடுகளாக உள்ளன. இன்றைய நவீன உலகில் சுற்றுலாத்துறையானது மேலும் நவீனத்துவம் அடைந்துள்ளது. அதாவது மனிதனது சுற்றுலாவானது ஆரம்பத்தில் உள்ளூர்களில் சுற்றுலாவை மேற்கொள்ளல், வெளிநாட்டு சுற்றுலாவை மேற்கொள்ளல் போன்ற வகையில் அமைந்திருந்தது. ஆனால் தற்போது நவீன விஞ்ஞான வளர்ச்சியினால் மனித வரலாற்றில் விண்வெளி சுற்றுலா என்பது சாத்தியமான ஒன்றாக மாறியுள்ளது.

உலகப் பெரும் பணக்காரர் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் ப்ளூ ஆரிஜின் என்ற தனது சொந்த விண்கலத்தில் தனது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்பியுள்ளார். இதன் மூலம் சுற்றுலாத் துறையானது பாரிய வளர்ச்சியினை அடைந்து வருவதனை அவதானிக்க முடிகிறது.

இவ்வகையில் சர்வதேச ஒருமைப்பாட்டிற்கும், உலக பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுலா துறையின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதாவது ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை சுற்றுலா துறையானது வழங்கி வருகிறது. கொவிட் தொற்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சுற்றுலாத்துறை மீளக்கட்டியெழுப்பப்பட வேண்டுமென்பதே அனைவரதும் விருப்பமாகும்.