பூஸ்டர் தடுப்பூசி பெற்றார் பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா தொற்றுக்கு எதிரான மூன்றாவது முறை பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளார்.

78 வயதான அவர், வைரஸ் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவராக வகைப்படுத்தப்பட்டுள்ளார்.

வைரஸ் தொற்றும் அபாயமுள்ள குழுக்கள் மூன்றாவது பைசர் - பயோஎன்டெக் தடுப்பூசியைப் போட, அமெரிக்க மத்திய அரசாங்கம் கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில் பைடன் பூஸ்டர் தடுப்பூசிக்குத் தகுதிபெற்றார்.

இருப்பினும் சுமார் கால்வாசி அமெரிக்கர்கள் அதாவது 80 மில்லியன் பேர், முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை.

75 வீதத்திற்கும் அதிகமான பெரியவர்கள் ஒரு தடுப்பூசியாவது போட்டுக்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஒரு மாதத்தில் 4 மில்லியன் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர். பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 43 மில்லியனைக் கடந்துள்ளது.