விவசாயிகளை அரசு ஒருபோதும் கைவிட்டு விடப் போவதில்லை

பெரும்போகத்துக்குத் தேவையான சேதனப் பசளையை தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கான பொறிமுறை தயாரிப்பு

சேதன உரக் கொள்கை காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்படப் போவதில்லையென அதிகாரிகள் தெளிவுபடுத்தல்

பெரும் போகத்துக்குத் தேவையான சேதன உரத்தை தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கான பொறிமுறையொன்றை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அரச அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த வகையில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு, தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி உதவி உட்பட அனைத்துச் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி ஊடக மையத்தில் கடந்த 2 ஆம் திகதி வெபெக்ஸ் செயலியின் ஊடாக நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

ஜனாதிபதி ஊடக மையம் நடத்தும் வாராந்த ஊடகச் சந்திப்பு கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக வெபெக்ஸ் செயலியின் ஊடாக நடைபெற்றதுடன், ‘சேதன உரப் பயன்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல்’ என்பது அதன் தலைப்பாகும். இந்தத் துறையுடன் சம்பந்தப்பட்ட முக்கிய அரச அதிகாரிகள் மற்றும் அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

சுதேச சேதன உர உற்பத்திக்கு அரசு நடவடிக்கை எடுத்திருந்தாலும், விவசாயிகளுக்குத் தேவையான அளவு உரத்தை உற்பத்தி செய்து, இலக்கை அடைந்து கொள்வதற்கு தற்போதைய சூழ்நிலையில் தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, உயர் சர்வதேச தரத்துக்கு உட்பட்ட வகையில், சேதன உரம் பற்றாக்குறையாக உள்ள அளவை இறக்குமதி செய்வதற்கும், பூச்சிக்கொல்லி சட்டத்தின் கீழ் உள்ள உயிரியல் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது.

இதற்கு உர ஆலோசனைக் குழுவின் முழுமையான ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சேதன உரத்தை ஆய்வுகூட மற்றும் உயிர் பல்வகைத்தன்மை ஆராய்ச்சிக்கு உட்படுத்திய பின்னர் விவசாயிகளுக்கு வழங்குவதாக அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

சேதன உர உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 02 ஹெக்டேயர் வரையில் ஒரு ஹெக்டேயருக்கு ரூ. 12,500 வீதம் நிதி உதவி வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் அல்லது விவசாய மத்திய நிலையங்களில் சமர்ப்பிக்கலாமென்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட விவசாயிகளின் தனிப்பட்ட கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதுடன், கணக்கு இல்லாத விவசாயிகளுக்கு ஒரு விசேட திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சேதன உரத்தை உற்பத்தி செய்ய வசதியில்லாத விவசாயிகளுக்கு ஏனைய தரப்பினரிடமிருந்து சேதன உரத்தைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்றும், அவர்களுக்கு அப்பணம் மீளளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து சேதன உரங்களுக்கும் QR குறியீடு வழங்கப்படும் என்றும் இதன் மூலம் யார் வேண்டுமானாலும் அதன் தரத்தைப் பரீட்சித்துப் பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

1920 என்ற அவசர இலக்கத்தின் ஊடாக, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய வகையில் தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவொன்று கள ஆய்வுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது. இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் தேயிலை தொழில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அதிகாரிகள், இறக்குமதி செய்யப்பட்ட உர மாதிரியை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சி செய்து வருவதாகவும், எதிர்காலத்தில் மிகவும் பொருத்தமான தேசன உரத்தை பரிந்துரைப்பதாகவும் கூறினர்.

பெரும் போகத்துக்குத் தேவையான உரங்கள், சுதேச உற்பத்தி, இறக்குமதி, மானியங்கள், தொழில்நுட்ப உதவி மற்றும் விழிப்புணர்வு உட்பட மொத்த செயற்பாடுகளுக்கும் 26.62 பில்லியன் ரூபா செலவாவதாக அரச அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம், இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்காக செலவிடப்பட்ட ரூ. 22.71 பில்லியனில் பெரும் பகுதியை எமது நாட்டில் உள்ள விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்ய முடிந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

சேதன உரப் பயன்பாட்டுடன், நாட்டில் ஓர் இளம் தொழில்முயற்சியாளர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரச வங்கிகள் ஏற்கெனவே ஒரு மில்லியன் ரூபா வரை சலுகை வட்டி கடன்களை வழங்கி வருவதுடன், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சலுகை விலையில் அதற்கான இயந்திரங்கள் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளை ஒருபோதும் தனியாக விட்டுவிடப் போவதில்லை என்று உறுதியளித்த அரச அதிகாரிகள், சில ஊடகங்கள் மற்றும் பல்வேறு குழுக்கள் தெரிவிப்பது போன்று, சேதன உரக் கொள்கையின் காரணமாக நாட்டில் உணவுப் பற்றாக்குறையோ அல்லது பஞ்ச அபாயமோ உருவாகாது என்று வலியுறுத்திக் கூறினர்.

விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா, கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச்.எம்.எல். அபேரத்ன, விவசாயத் துறை இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் மகேஷ் லசன்த கம்மன்பில, விவசாயத் துறை அமைச்சின் சேதன உர ஆலோசகர் கலாநிதி ஜே.பி. ஹேமந்த விஜேவர்தன, பேண்தகு விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தின் மேலதிகப் பணிப்பாளர் கலாநிதி எம்.எஸ் நிஜாமுதீன் ஆகியோர் வெபக்ஸ் செயலியின் மூலம் இந்த ஊடகச் சந்திப்பில் பங்குபற்றினர்.


Add new comment

Or log in with...