ஒலிம்பிக்கில் ஏமாற்றத்துடன் வெளியேறிய சாமர நுவன்

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் பிரிவு ஜூடோ போட்டியில் இலங்கை வீரர் சாமர நுவன் தோல்வி அடைந்து வெளியேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 3ஆவது நாளான நேற்றுக் காலை ஆண்களுக்கான தனிநபர் ஜூடோ இறுதி 32 வீரர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.

இதில் ஆண்களுக்கான 73 கிலோ கிராம் எடைப்பிரிவு இறுதி 32 வீரர்களுக்கான சுற்றில் இலங்கையின் சாமர நுவன், உலக தரவரிசையில் 51ஆவது இடத்தில் உள்ள ஜிபூடி நாட்டு வீரர் அய்டன் அலெக்ஸாண்டர் ஹுசைனுடன் மோதினார். இந்தப் போட்டி ஆரம்பமாகி முதல் 29 செக்கன்களில் இரண்டு வீரர்களும் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் 29ஆவது செக்கனிலிருந்து Ippon சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்திய ஜிபூடி நாட்டு வீரர் அய்டன் 0-–10 என முன்னிலை பெற்றார்.

இதனையடுத்து போட்டி முடிவடையும் வரை இலங்கை வீரர் சாமர நுவனினால் எந்தவொரு புள்ளிகளையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. இறுதியில் அய்டன் அலெக்ஸாண்டர் ஹுசைன் வெற்றிபெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார். இலங்கை சார்பில் ஜூடோ விளையாட்டில் கலந்துகொண்ட ஒரே வீரர் சாமர நுவன் மட்டும் தான்.

இதனால், உலக தரவரிசையில் 307ஆவது இடத்தில் இருக்கும் சாமர நுவன் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இம்முறை ஒலிம்பிக்கில் இலங்கை சார்பில் அதிகபட்ச ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவர் எனவும், பதக்கத்துக்கான இறுதிச் சுற்று வரை செல்வார் எனவும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாமர நுவன், தான் பங்குபற்றிய முதல் போட்டியுடன் வெளியேற்றப்பட்டார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றிய சாமர நுவன் இறுதி 16 வீரர்கள் சுற்று வரை முன்னேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றிய 9 வீரர்களில் ஐந்தாவது வீரரும் ஏமாற்றத்துடன் நாடு திரும்பவுள்ளார்.

துப்பாக்கி சுடுதல் வீராங்கனை டெஹானி எகொடவெல, பெட்மிண்டன் வீரர் நிலூக கருணாரத்ன, நீச்சல் வீராங்கனை அனிக்கா கபூர் மற்றும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கெஹானி ஆகியோர் முதல் சுற்றுடனேயே வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...