கல்முனை வடக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

நேற்று 17 பேர் கண்டுபிடிப்பு

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் கல்முனை வடக்கு சுகாதாரப் பிரிவினரால் நேற்று (22) 64 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிமனை தெரிவித்துள்ளது.

கல்முனை வடக்கில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு செயற்பாட்டில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஆர்.கணேஸ்வரன் தலைமையிலான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கல்முனை வடக்கு சுகாதாரப் பிராந்தியத்திற்குட்பட்ட கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை ஆகிய கிராமங்களில் மூன்றாவது அலையில் இதுவரை 194 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.கடந்த வாரம் பெரியநீலாவணை கிராமத்தில் இடம்பெற்ற மரணவீட்டுக்குச் சென்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மரணவீட்டுக்கு சென்று வந்தவர்களிடம் எழுமாற்றாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கும், ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானவர்களோடு தொடர்புபட்டவர்களுக்கும் திங்கட்கிழமை 64 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் பாண்டிருப்பில் 08 பேருக்கும், கல்முனையில் 06 பேருக்கும், பெரி யநீலாவணையில் 03 பேருக்கும் என 17 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கல்முனை வடக்கில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும், சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறும் கல்முனை வடக்கு பிராந்திய சுகாதார பணிமனை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாண்டிருப்பு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...