அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பொதுப்போக்குவரத்து

இடைப்பட்ட நேரங்களில் பயணிப்பதும் தேவையற்ற பயணங்களும் தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார் அமைச்சர் திலும் அமுனுகம

காலை, மாலை வேளைகளில் பயணிக்கவே இந்த வசதி

 

மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிய சேவைகளுக்கு செல்வோருக்கு மாத்திரமே அவற்றில் பயணிக்க அனுமதி  வழங்கப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

காலையிலும் மாலையிலும் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட சில பொதுப் போக்குவரத்து சேவைகள் நடைபெறுமென்றும் இடைப்பட்ட காலங்களில் அந்த சேவைகள் நடைபெற மாட்டாதென்றும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசிய கடமைகளுக்காக செல்வோர் உரிய நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள அத்தாட்சிப்படுத்தும் ஆவணங்களை சோதனையிடும் பொலிசார் மற்றும் ரயில்வே அதிகாரிகளிடம் காண்பிப்பதற்கு தயாராக இருக்கவேண்டுமென்பதையும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: நேற்று முதல் நாம் மாகாணங்களுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவையை ஆரம்பித்துள்ளோம். அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிக்கும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்காகவே மட்டுப்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம்,துறைமுகம், குடிவரவு, குடியகல்வு திணைக்களம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு செல்லும் உத்தியோகத்தர்கள் இந்த பொது போக்குவரத்து சேவையை உபயோகிக்க முடியும் எனினும் வீதித் தடைகளில் அவர்களது சேவைகளை உறுதிப்படுத்தும் அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் சோதனைக்குட்படுத்தப்படும். விமான நிலையத்திற்கு செல்வோரிடம் கடவுச்சீட்டு போன்ற உறுதிப்படுத்தும் ஆவணங்கள், ஏனைய அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு அவர்களது நிறுவனங்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகள் அல்லது சான்றிதழ்களும் இங்கு பரிசோதனைக்குட்படுத்தப்படும். அதன்போது அத்தகைய ஆவணங்களை தம்வசம் வைத்திராதவர்கள் பொலிஸாரினால் திருப்பி அனுப்பப்படுவரென்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ரயில்களிலும் பஸ்களிலும் இது போன்ற அத்தியாவசிய சேவைக்கு திரும்புவோர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். அது தொடர்பில் பஸ் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கும் போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை எந்தெந்த நேரங்களில் பஸ்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து புறப்படும் என்பதை அந்தந்த டிப்போக்களின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். அத்துடன் மாகாண போக்குவரத்து அதிகார சபை யிலும் அதற்கான விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

எவ்வாறெனினும் காலையில் கடமைக்கு செல்வதற்காகவும் மாலையில் கடமையிலிருந்து வீடுகளுக்குத் திரும்புவதற்காகவும் காலையிலும் மாலையிலும் மாத்திரமே பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறும். அதற்கு இடைப்பட்ட காலத்தில் பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெற மாட்டாது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...