போக்குவரத்து சேவைகளை மிகுந்த பொறுப்புணர்வுடன் முன்னெடுப்போம்!

இலங்கையில் கொவிட் 19 தொற்றின் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கட்டம் கட்டமாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாகாணங்களுக்கிடையில் நடைமுறையில் இருந்த பயணக் கட்டுப்பாட்டில் நேற்று முதல் தளர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. நாட்டு மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி இந்நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடைமுறையில் இருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டில் தற்போது தளர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன் பயனாக மாகாணங்களுக்கிடையிலான ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து சேவைகள் நேற்று ஆரம்பமாகின. அவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெற்றன.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்படடுத்தப்பட்டுள்ள போதிலும், அதனை அத்தியாவசியத் தேவைகளுக்காக மாத்திரமே பாவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதற்காக அதனை முன்பு போன்று விரும்பியபடி பயன்படுத்திக் கொள்ள முடியாது.

ஏனெனில் இந்நாட்டில் கொவிட் 19 தொற்றின் மூன்றாவது அலை பரவுதலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், அது முழுமையான கட்டுப்பாட்டை அடையாத நிலையே இன்னும் நீடிக்கின்றது. இத்தொற்றுக்கு உள்ளானவர்கள் தினமும் அடையாளம் காணப்படுகின்றனர். ஆனால் நாளாந்தம் அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்தவென முன்னெடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளே இதற்கு பெரிதும் உதவி இருக்கின்றன. இது ஆறுதலான செய்திதான்.

ஆனால் கொவிட் 19 தொற்றின் பரவுதல் அச்சுறுத்தலும், இந்தியாவில் திரிபடைந்த டெல்டா தொற்றின் அச்சுறுத்தலும் நாட்டில் தொடர்ந்தும் நிலவவே செய்கின்றன. இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிலவுகின்ற சூழலில் மக்கள் முன்பாக இருக்கும் பொறுப்பு பாரியதாகும். குறிப்பாக இத்தொற்றின் பரவுதலுக்கு துணை போகாத வகையில் தம் செயற்பாடுகளை ஒவ்வொருவரும் அமைத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயணக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. தற்போது மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து சேவையை முன்பு போலன்றி அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் பாவிப்பதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த நிலையில்தான் மாகாணங்குக்குடையிலான ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் அரச மற்றும் தனியார் பயணிகள் தங்கள் அடையாள அட்டையை தம்வசம் வைத்திருக்குமாறு போக்குவரத்து இராஜாங்க அமை்சர் திலும் அமுனுகம வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் ஊடாக அநாவசியமான பயணங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நாட்டில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதனால் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் அதனைப் பொறுப்போடும் முன்னவதானத்தோடும் பயன்படுத்திக் கொள்வது மக்களின் பொறுப்பாகும். குறிப்பாக ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் போது கொவிட் 19 தொற்று தவிர்ப்புக்காக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.

அத்தோடு போக்குவரத்து சேவையைப் பயன்படுத்துபவர்கள் கைகளை கழுவிக் கொள்ளவும் தவறக் கூடாது. அதேநேரம் பயணிகள் போக்குவரத்து சேவையை நடத்தும் ரயில் மற்றும் பஸ் வண்டிகள் கொவிட் 19 தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப செயற்படுவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

இதைவிடுத்து போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்பதற்காக ஆசனங்களுக்கு மேலதிகமாக கண்டபடி பயணிகளை ஏற்றுவதும் கொவிட் 19 தொற்று தவிர்ப்புக்கான வழிகாட்டல்களில் கவனயீமாக நடந்து கொள்வதும் மீண்டும் இத்தொற்று தலைதூக்கத் துணைபுரியும் செயற்பாடாகவே அமையும். அதனால் மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும் முன்னவதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டிய தேவை பெரிதும் அதிகரித்துக் காணப்படுகின்றது. அப்போதுதான் இத்தொற்றின் பரவுதலையும் அதன் தொற்றையும் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ஆகவே மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு தளர்வை பொறுப்புடனும் முன்னவதானத்துடனும் பயன்படுத்தி இத்தொற்றின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும். அதுவே இன்றைய தேவையாகும்.


Add new comment

Or log in with...