இக்ரஃ இஸ்லாமிய சங்கம் குவைத்தில் 10ஆவது வருடாந்த இரத்ததான நிகழ்வு

கடந்த 30 ஆண்டுகளாக குவைத்தில் செயற்பட்டு வரும் இக்ரஃ இஸ்லாமிய சங்கம், குவைத் வாழ் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு மத்தியில் சன்மார்க்கப் பிரசாரப் பணிகளை மேற்கொள்வதுடன், இலங்கையர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. தொழில் வழிகாட்டல், தேவையுடையவர்களுக்கு உதவுதல், நோயாளிகளு க்கு உதவல், இறுதிக் கிரியைகளை ஏற்பாடு செய்தல், குவைத்-இலங்கை தூதரக விவகாரங்களுக்கு அனுசரணை வழங்கல், இலங்கையின் தேவைகளுக்கு ஒத்துழைப்பு களை வழங்குதல், குவைத்தில் இயங்கி வரும் ஏனைய இலங்கை சங்கங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்குதல், குவைத் நாட்டின் நிகழ்வுகளில் பங்கெடுத்தல் போன்றன இவற்றுள் சிலவாகும்.

இதேபோல் கடந்த பத்து ஆண்டுகளாக குவைத் மத்திய இரத்த வங்கியுடன் இணைந்து இரத்த தான நிகழ்வொன்றை இச்சங்கம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. சங்கத்தின் பத்தாவது இரத்ததான நிகழ்வு 'எங்களை வாழ வைத்த நாட்டுக்கு இரத்த தானம் செய்வோம்' என்ற கருப்பொருளின் கீழ் குவைத்தில் கடந்த 04.06.2021 வெள்ளிக்கிழமை குவைத் மத்திய இரத்த வங்கியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வுக்கு குவைத் நாட்டில் சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 40 இற்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. உலக இரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக குவைத் நாட்டுக்கான இலங்கை தூதுவர் U. L. M Jauhar கலந்து கொண்டதுடன் விஷேட அதிதிகளாக தூதரக உயர் அதிகாரி W. A. U. Poshitha Perera, சங்கைக்குரிய பிதா. Ivan Antony Perera, குவைத் மத்திய இரத்த வங்கியின் பொறுப்பாளர் Doctor. Asma மற்றும் Dr. M.U.L.M. Nawras உள்ளிட்ட குவைத் நாட்டில் பணி புரியும் இலங்கை வைத்தியர்கள் குழு, மேலே குறிப்பிடப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். அதே போல் நூற்றுக்கும் அதிகமானோர் இன, மத பேதமின்றி இரத்த தானம் செய்தனர்.

இந்த இரத்த தான நிகழ்வு குவைத் வாழ் இலங்கையர்கள் குவைத் நாட்டுக்கு செய்யும் நன்றிக் கடனாகவும் தங்கள் தாய்நாட்டுக்கு செய்யும் ஒரு கெளரவமாகவும் இருந்தது. இவ்வாறான மனித நேயப் பணிகள் நாடுகளுக்கிடையேயும், இனங்களுக்கிடையேயும் நல்லுறவை ஏற்படுத்தி சகவாழ்வை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த நன்மையான விடயத்துக்கு பங்களிப்பு செய்த, கலந்து சிறப்பித்த, சகல விதத்திலும் உதவி ஒத்தாசைகள் செய்த அனைவருக்கும் இக்ரஃ இஸ்லாமிய சங்கம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இக்ரஃ இஸ்லாமிய சங்கம்,
(குவைத்)


Add new comment

Or log in with...