தேசிய படைவீரர் 12 ஆவது ஞாபகார்த்த தினம் அனுஷ்டிப்பு

ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர்,எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் முப்படைத் தளபதிகள் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி

வானிலிருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் பூமாரி பொழிந்து மரியாதை

படைவீரர்களின் குடும்பங்களுக்கு விஷேட சலுகை

மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதத்திலிருந்து தாய்நாட்டை மீட்டெடுத்து மே மாதம் 18ஆம் திகதியுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.

2009 மே மாதம் 18ஆம் திகதி கொடிய யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதிலிருந்து நாட்டில் சமாதானம் நிலவுவதுடன், தற்பொழுது நாட்டு மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு அன்றைய பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அப்போதைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அரசியல் தலைமைத்துவம், சரியான தீர்மானம் மற்றும் முப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் அர்ப்பணிப்பே பிரதான காரணமாகும்.

தாய்நாட்டிற்காக தனது உயிர்களை தியாகம் செய்த, தமது அவயவங்களை அர்ப்பணித்த அனைத்து முப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரை நினைவு கூர்ந்து கௌரவப்படுத்த வேண்டியது எமது அனைவரினதும் தலையாய கடமையாகும்.

அந்த அடிப்படையிலேயே ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள தேசிய போர் வீரர்கள் நினைவுத்தூபியில் யுத்த வெற்றியின் 12ஆவது ஆண்டு நிறைவு மற்றும் தேசிய படைவீரர் ஞாபகாரத்த தின நிகழ்வு ஆகியன முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றுமுன்தினம் மாலை (மே, 19) அனுஷ்டிக்கப்பட்டன. ஜனாதிபதி தனது வீரப்பதக்கங்களுடன் படைவீரர்களின் நினைவுத் தூபிக்கு மரியாதை செலுத்தியமை விஷேட அம்சமாகும்.

தேசிய போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வில் நாட்டின் 5ஆவது நிறைவேற்று அதிகாரம் கொணட ஜனாதிபதியாக பதவி வகித்தவரும் தற்போதை பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டு போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

2009 மே மாதம் வரை இடம்பெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் உச்ச கட்ட தியாகம் செய்த அனைத்து போர் வீரர்களும் இந்த நிகழ்வின் போது அவர்களின் வீரச் செயல்களுக்காக மரியாதையுடன் நினைவு கூரப்பட்டனர்.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ரணவிரு சேவா அதிகார சபையின் ஏற்பாட்டில் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர், தாய்நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் போர் வீரர்களின் துணிச்சலை பறைசாற்றும் வாசகங்கள் அடங்கிய பத்திரமும் வாசிக்கப்பட்டது.

சமய அனுஷ்டானங்கள், ‘ரண பெர’ ஒலிப்பு, அதைத் தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி, சபாநாயகர், எதிர்க் கட்சித் தலைவர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட முக்கியஸ்தர்கள் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்துத்தியதுடன் வானிலிருந்த ஹெலிகொப்டர்கள் மூலம் பூமாரியும் பொழியப்பட்டது.

இந்த நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய ரணவிரு சேவா அதிகார சபையின் பதில் தலைவி திருமதி சோனியா கோட்டேகொட, போர்வீரர்கள் தொடர்பான எமது எண்ணம் எல்லைக்கு அப்பாற்பட்டது எனவும் நாங்கள் இப்போது போர்வீரர்களின் குடும்பங்களை அவர்களின் வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்வதில் உறுதியாக இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் படைவீரர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றமைக்கு பின்வரும் விடயங்கள் சான்றாகும்.

இதுவரை காலம் நிவாரணம் வழங்கப்படாத நிலையில் பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக உயிரிழந்த முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸாரை சார்ந்த உறவினர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

இதற்கமைய முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸாரின் நெருங்கிய உறவினர்களான 23 ஆயிரம் பொற்றோர்கள் மற்றும் 7 ஆயிரம் மனைவிமார் என்ற அடிப்படையில் 30 ஆயிரம் பேர் இதன் மூலம் நன்மையடைய உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக் காட்டினார்.

பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக உயிரிழந்த முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸாரை சார்ந்த உறவினர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 10.09.2020 அன்று அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்ட பத்திரத்திற்கே மிக நீண்ட கால செயற்பாடுகளுக்கு பின்னர் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக உயிரிழந்த முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களுக்கு 55 ஆண்டுகள் நிறைவடையும் வரை வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் மொத்த தொகையை திருமணமான முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களின் மனைவிமார் தமது ஆயுட்காலம் வரை பெற்றுக் கொள்ள தகுதியடைவர்களாவார்

பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக உயிரிழந்த திருமணமான/ திருமணமாகாத முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களின் பெற்றோர்களுக்கு 55 ஆண்டுகள் நிறைவடையும் வரை வழங்கப்படும் ரூ. 25,000.00 கொடுப்பனவினை, குறித்த பெற்றோர்கள் தமது ஆயுட்காலம் வரை பெற்றுக்கொள்ள தகுதியடைவர்களாவார்.

பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக அங்கவீனமுற்ற முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், அங்கவீனமுற்ற முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களின் மரணத்தின் பின் அவர்களில் தங்கி வாழ்வோர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் வரை வழங்கப்படும்.

இவை போன்ற பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இவை வரலாற்றில் எந்த அரசாங்கமும் செய்யாத பாரிய நன்மையான விடயங்களாகவே கருதப்படுகின்றன.

சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற ஞாபகார்த்த நிகழ்வில், அமைச்சர்கள், அட்மிரல் ஒப் த பிளீட் வசந்த கரன்னாகொட, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் போஸ் ரொஷான் குணதிலக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம், கடலோர பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம், உயிரிழந்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

ஸாதிக் ஷிஹான்...


Add new comment

Or log in with...