முப்பது வருடங்களாக இசைத்துறையில் ஜொலிக்கும் இசைக்குயில் பாடகி T.மேரி | தினகரன்

முப்பது வருடங்களாக இசைத்துறையில் ஜொலிக்கும் இசைக்குயில் பாடகி T.மேரி

நீண்ட அனுபவமும், துறை சார் தேர்ச்சியும் எந்தவொரு கலைத்துறை சார்ந்தவர்களுக்கும் பலமாக அமைந்து விடும்.இந்த இரண்டையும் கைவரப்பெற்றவர்களாக பல கலைஞர்கள் இந்த வெளியில் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான கலைவெளியில் இசைத் துறை சார்ந்து மிக நீண்ட காலமாகக் குரல் மூலம் பல பணிகளையாற்றி வருபவர் நம் மண்ணின் பாடகி மேரி. இசைத்துறை சார்ந்து அனைவராலும் நன்கறியப்பட்ட ஒரு பாடகியாக வலம் வருபவர் இவர் ஆவார். சிறுவயது முதலேயே இசைத்துறைக்குள் கால் பதித்த மேரி பதின் மூன்று வயதிலே பாட ஆரம்பித்தவர்.

1989ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் உதயகீதம் என்ற நிகழ்ச்சியில் தனது பதின்மூன்றாவது வயதில், A.E. மனோகரனின் இசையில், 'வான் மேகங்களே' என்ற பாடலைப் பாடி அநேகரின் கவனத்தை ஈர்ந்தார். அதனைத் தொடர்ந்து பாடசாலைக் காலங்களில் பளை மகா வித்தியாலயம், இளவாலை கொன்வென்ற் ஆகிய பாடசாலைகளில் பயின்ற காலத்தில் இசைத் துறைசார் அனைத்து போட்டிகளிலும் பங்குபற்றி கோட்டம், வலயம், மாவட்டம், தேசியம் என அனைத்து இடங்களிற்கும் சென்று பரிசில்களை வென்றுள்ளார்.

இந்தத் தொடர்ச்சியான ஓட்டம் மேரியை அடுத்த தளம் நோக்கி நகர்த்தியது. மேடைகளில், இசைக்குழுக்களில் பாட வேண்டும் என்ற ஆர்வ மேலீட்டினால் வாய்ப்பினைத் தானாக கோரிப் பெற்றுக்கொண்டு 2000 ஆண்டளவில் யாழ். ராகம்ஸ் இசைக்குழுவின் பாடகியாக அரங்கேற்றம் கண்டார். எப்போதும் வாய்ப்புக்களை சரியாகப் பற்றிப் பிடிப்பதில் குறியாக இருக்க வேண்டும் என்பதற்கு இசைவான மேரியும் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு பல நல்ல பாடல்களை தன் இனிய குரலினால் பாடத் தொடங்கினார். இதன் காரணமாக நாட்டின் அநேக இடங்களிலும் நன்கறியப்பட்ட ஒருவராகவும் வலம் வந்தார்.இந்த வாய்ப்பைத் தந்த ராகம்ஸ் இசைக்குழு இயக்குனர் சந்திரனை நன்றியோடு நினைவு கூர்ந்தார் மேரி.

இசைக்குழுவில் பாடிக்கொண்டிருந்த சமகாலத்திலேயே மண்சார்ந்த பாடல்களை ஒலிப்பதிவில் பாடக்கூடிய பெரிய வாய்ப்பு தன்னைத் தேடி வந்ததாகவும் அதன் விளைவாக பல முத்தான பாடல்களை பாடிய அந்தக் காலத்தை நெகிழ்ச்சியோடு மீட்டிக் கொண்டார் மேரி. இந்தக் காலத்தில் இசைவாணர் கண்ணன், முரளி, இசைப்பிரியன் போன்றவர்களின் இசையில் பல மறக்கமுடியாத பாடல்களைப் பாடியதாகவும் கூறினார்.

2000ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரை யாழ். ராகம்ஸ் இசைக்குழு பாடகியாக இருந்த காலகட்டம் தனது இசைத்துறை வாழ்வைப் பொறுத்த வரையில் மிக முக்கிய காலம் என்றார். 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் வரிகள் பாடும் 'நெருப்பு நினைவுகள்' என்ற இசை இறுவெட்டிற்காக 2006ஆம் ஆண்டு நிக்ஷன் மற்றும் குமணன் ஆகியோரின் இசையில் பல பாடல்களையும் பாடினார்.

2006ஆம் ஆண்டிற்குப் பின்னர் தன்னையொரு சுயாதீன இசைப் பாடகியாக கட்டமைத்துக் கொண்ட மேரி, அனைத்து இசைக்குழுக்களிலும் பங்கேற்று பாடல்களைப் பாடக் கூடிய ஒருவராகவும் காணப்படுகின்றார். குரல் வளம் என்பது எல்லோருக்கும் வாய்த்துவிடக் கூடியது அல்ல. ஆனால் தன் இனிமையான குரல் மூலம் பலரை ரசிக்க வைக்கும் படியாக தனது பணியினை ஆற்றுபவர் இவராவார்.

இசைப்பாடல் தொகுப்புருவாக்கங்கள் மீள் எழுச்சிகண்ட 2010ற்கு பின்னரான காலத்தில், கிறிஸ்தவ பக்திப் பாடல்கள் பலவற்றை பாடியிருக்கின்ற ஒருவராகவும் இவர் திகழ்கிறார். இசையமைப்பாளர் சுதர்ஷனின் இசையில் பல கிறிஸ்தவ இசைத் தொகுப்புக்களில் பல பாடல்களைப் பாடியிருக்கின்றார். சம நேரத்தில் இசையமைப்பாளர் முரளியின் இசையோடு ஆரம்பமான சைவபக்திப் பாடற்தளத்திலும் நூறுவரையான பாடல்களை இவர் பாடியுள்ளார்.

கடந்த முப்பது ஆண்டுகளாக இசைத்துறையோடு தன்னை அர்ப்பணித்து இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் இவரின் தனித்துவம் என்னவெனில் எந்தமாதிரியான பாடல்களையும் தன் குரல் மூலம் பாடக்கூடிய அந்தத் திறன் அவருக்கே உரித்தானது. முழு நேர இசை ஊழியம் ஊடாக, தனது குடும்பத்தை நடாத்தி பிள்ளைகளையும் கல்வியின் உச்சநிலைக்குக் கொண்டு வந்த பெருமையும் இவரையே சாரும். இன்று தனது தளத்தை நடிப்புத் துறையுள் மாற்றி சிறந்ததொரு நடிகையாகவும், குரல் கலைஞராகவும் மிளிர்கின்றார். இந்தன் மூலம் ஈழத்துக் குறும்படங்கள், காணொளிப் பாடல்கள் பலவற்றிலும் தோன்றி தனது மற்றுமொரு ஆளுமையையும் காட்டி வருகின்றார். அண்மையில் வெளியான இரவல் கவிதை, ஒருத்தி, தாயுமானவன் போன்ற காணொளிப் பாடல்களினூடாக இவரை அந்தத் தளத்தில் தரிசிக்க முடிந்தது.

தனது இசைப் பயணத்தின் சிறப்பிற்காக இதுவரை காந்தக் குயில், வட ஜோதி, இளம் கலை ஜோதி போன்ற பட்டங்கள், கௌரவங்களையும் பெற்றிருக்கின்றார்.

முப்பது ஆண்டுகளாக பல்வேறு போராடங்கள், கஷ்டங்கள் என பல இன்னல்களை சந்தித்தாலும் தன்னையொரு தனித்துவம் மிக்க பாடகியாக, அரங்குகள், இசைத் தொகுப்புக்கள் என அனைத்தின் வாயிலாகவும் பாடிக்கொண்டிருக்கும் இந்தக் குயில் இன்னும் இன்னும் சாதிக்க வேண்டும்.


Add new comment

Or log in with...