உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஆற்றை கடக்கும் கர்கஸ்வோல்ட் தோட்ட மக்கள்

- 15 வருடங்களாக தொடரும் அவலம்

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு போக்குவரத்து, பாலம், நீர் வடிகால் அமைப்பு உட்பட அடிப்படை வாழ்க்கை வசதிகள் அத்தியாவசியமானதாகும். எனினும் மலையகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வாழும் மக்கள் இன்னும் இத்தகைய அடிப்படை வசதிகள் இன்றி பெரும் அசெளகரியங்களை அனுபவித்துவருகின்றனர்.

அந்தவகையில்  நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பொகவந்தலாவ டின்சின் கர்கஸ்வோல்ட்  தோட்டப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் பழமையான  பழுதடைந்த நிலையில் உள்ள பாலத்தினையே பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 100குடும்பங்களைச் சேர்ந்த  300இற்கும் மேற்பட்ட மக்கள்  இந்த பாலத்தினை பயன்படுத்தி வருகின்றனர். எனினும் இந்த பாலமானது தற்போது  மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதோடு எந்த நேரமும்  உடைந்து விழும் அபாயத்திலுள்ளது இதனால் தினமும் இந்த பாலத்தால் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் மிகவும் மோசமான ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக பாலம் இருக்கின்றது.

தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உயிரை கையில் பிடித்துக்கொண்டு பாலத்தினை கடப்பதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பாலம் உடைந்த போனதன் காரணமாக பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றுவழியை பயன்படுத்துகின்றனர். அப்பாதையில் செல்ல அதிக நேரம் எடுப்பதால்  சில சமயங்களில்

ஆபத்தினையும் உணராது  உடைந்த இந்த பாலத்தினையே பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த பாலத்தில் பயணித்து பலர் தவறி விழுந்து காயங்களுக்கும் உள்ளான சந்தர்ப்பங்களும் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் காலங்களில் பலர் வாக்குறுதிகள் வழங்கிய போதிலும் எவரும் செய்து கொடுக்கவில்லை. முன்னாள் அமைச்சர் திகாம்பரம் 15லட்சம் ரூபா செலவில் இதனை அமைத்து தருவதாக அடிக்கல் நாட்டியதாகவும் ஆனால் இதுவரை பாலம் புனரமைக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை அமரர் ஆறுமுகன் தொண்டமானும் குறித்த பாலத்தினை புனரமைப்பு செய்து தருவதாக அடிக்கல் நாட்டி வைத்ததாகவும் ஆனால் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஒற்றயடி பாதையில் அமைந்துள்ள இப்பாலம் கடந்த 15 வருடங்களாக உடைந்து கிடப்பதனால் இங்கு வாழும் சுமார் 300 மேற்பட்ட மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு  உடனடியாக இப்பிரச்சினைகக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

ஹற்றன் விசேட நிருபர்


Add new comment

Or log in with...