தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்துகிறாரா பேராயர்?

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தை

அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதென மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டுள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

இரட்டை முகவராக செயற்படுவதை கர்தினால் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மீதுள்ள முரண்பாட்டை அவர் தனிப்பட்ட முறையில் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.

அதனை விடுத்து ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவது முறையற்றதென பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா அமோகராம விகாரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இஸ்லாமிய அடிப்படைவாதம் உலகளாவிய ரீதியில் வியாபித்துள்ளது. அறவழி மத கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் இஸ்லாமிய மத கொள்கையை தவறான வகையில் புரிந்துகொண்டு அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு ஏனைய மதங்கள் மீது பல்வேறு தாக்குதல்களை முன்னெடுக்கின்றனர். இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அரச ஆதரவுடன் தலைதூக்குகிறது என்பதை ஆரம்ப காலத்திலிருந்து ஆதாரத்துடன் தெரிவித்தோம். எமது கருத்தை அரச தலைவர்களும், இஸ்லாமிய மத தலைவர்களும், இஸ்லாமிய அரசியல்வாதிகளும், ஏனைய மத தலைவர்களும் பொருட்படுத்தவில்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்த எமது கருத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி, எங்களை இனவாதிகளாக சித்தரித்து அரசியல் இலாபம் தேடிக் கொண்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் எதிர்காலத்தில் தோற்றம் பெறும் பாரதூரமான விளைவுகள் குறித்து எவரும் அக்கறை கொள்ளவில்லை.

அனைத்து தரப்பினரது கவனயீனத்தையும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையின் எத்தன்மையில் வலுப் பெற்றுள்ளது என்பதை 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச தலைவர்களும், ஏனைய மத தலைவர்களும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் புரிந்துகொண்டனர். குண்டுத்தாக்குதலில் அப்பாவி மக்கள் மாத்திரமே பலியாகினர்.

இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது என்பது பல்வேறு விசாரணைகள் ஊடாகவும், குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த அடிப்படைவாதிகளின் காணொளி ஆதாரங்கள் ஊடாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கையினால் ஈர்க்கப்பட்டவர்கள் தாக்குதல்களை முன்னெடுத்தனரென்று மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை ஆரம்பத்தில் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இவ்வாறான நிலையில் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் மத கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டதல்ல அத்தாக்குதல் அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டதெனன மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டுள்ளமையை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீதுள்ள பிரச்சினைகளை அவர் தனிப்பட்ட முறையில் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் விவகாரத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை இவ்விடயத்தில் இரட்டை முகவராக செயற்படுகிறார் என்றார்.

நுவரெலியா தினகரன் நிருபர்

 


Add new comment

Or log in with...