பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு | தினகரன்

பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்டஅணியை இலங்கை கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தேர்வுக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில், முதன்முறையாக இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ப்ரவீன் ஜயவிக்ரம இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியில் இறுதியாக நடைபெற்ற கழகங்களுக்கு இடையிலான 50 ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய ப்ரவீன் ஜயவிக்ரம இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன், மொத்தமாக 10 முதற்தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்காரணமாக முதன்முறையாக இலங்கை டெஸ்ட் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் போது, தோற்பட்டை உபாதைக்கு உள்ளாகிய குசல் மெண்டிஸ், பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இவர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இணைக்கப்பட்டிருக்கவில்லை. எனினும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்த வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார, மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருடன், நாடு திரும்பியிருந்த அஞ்செலோ மெத்திவ்ஸ், பங்களாதேஷ் அணிக்கு எதிரான அணியில் இணைக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய லசித் எம்புல்தெனிய மற்றும் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியோர் இணைக்கப்படவில்லை.

எவ்வாறாயினும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய ஏனைய வீரர்கள், பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தொடைப்பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க, பங்களாதேஷ் அணிக்கு எதிரான அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...