மே தினத்துக்காக செலவிடும் பணம் மாணவர்களின் கல்விக்கு வழங்கப்படும்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின கூட்டங்களுக்காக செலவு செய்யும் பணத்தை எதிர்காலத்தில் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளுக்கு செலவு செய்யப் போகின்றோம் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் நேற்று முன்தினம் இ.தொ.கா பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை ஊடுகு வளாக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  

மேலும் கூறுகையில்,   கடந்த காலங்களில் எத்தனையோ மே தினங்களை நான் பார்த்திருக்கிறேன். அதற்காக பாரிய அளவில் நிதி செலவிடப்படுகின்றது. அவ்வாறான சூழ்நிலையில் இன்று எத்தனையோ தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்து பிள்ளைகள் கல்வியினை தொடர முடியாது உள்ளனர். பலர் பல்கலைக்கழகம் சென்று படிப்பதற்கு வாய்ப்பிருந்தும் அதனை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.   இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒரு குடும்பம். அந்த குடும்பத்தில் பொருளாதார கஷ்ட்டங்கள் இருக்கும் போது நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆகவே அவற்றிக்கு தீர்வு காண வேண்டும். ஆகவே கடந்த காலங்களைப் போல் அல்லாது உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எனக்கு நீண்ட பயணம் ஒன்று செல்ல வேண்டியுள்ளது. 

அதற்காகத்தான் நீங்கள் எனக்கு அங்கிகாரம் கொடுத்துள்ளீர்கள். நிச்சயம் அதனை நான் செய்து முடிப்பேன். கடந்த காலங்களில் தோட்டத்தில் உள்ள தலைவிகளை காங்கிரஸ் மறந்த நிலையே காணப்பட்டது. இனிவரும் காலங்களில் அவ்வாறு நடைபெறாது. காங்கிரஸின் வளர்ச்சிக்கு மூத்த தலைவர் மற்றும் தலைவிகளின் பங்கு எப்போதும் அவசியம். 

அத்தோடு இனிவரும் காலங்களில் காங்கிரஸின் மாவட்ட காரியாலயங்களில் மூத்த தலைவர்களுக்கு காரியாலயத்தில் சென்று ஆலோசனைகளை வழங்குவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்கிறோம் என்றார். 

ஹட்டன் விசேட நிருபர் 


Add new comment

Or log in with...