கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

- 11 இளைஞர்கள் கடத்தல்

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 05 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவத்தில், பிரதிவாதிகளான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூலை 02 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

கடத்தல், காணாமல் ஆக்கல் தொடர்பான வழக்கு விசாரணைகள் பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்னத்தின் தலைமையின் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ராஜகருணா, நவரத்ன மாரசிங்க ஆகியோர் உள்ளடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பில் விடயங்கள் முன் வைக்கப்பட்டன.

இவ்வழக்கில் வசந்த கரன்னாகொட பிரதிவாதியாக பெயரிடப்பட்டமைக்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது.

இந்த மனு எதிர்வரும் 04 ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளது.

அந்த ரிட் மனுவின் தீர்ப்பு வரும் வரை, இந்த விவகாரத்தில் கரன்னாகொடவுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்பதால் வழக்கு ஜூலை மாதம் 02 ஆம் திகதிவரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது.


Add new comment

Or log in with...